எளிய தமிழில் Computer Vision 22. கற்றல் தரவு தயார் செய்தல்

By | November 21, 2020

புதிய பணியாளருக்குப் பயிற்சி கொடுப்பது போலவேதான்

நீங்கள் கைமுறையாக வகைப்படுத்தல் (classification) செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு புதிய பணியாளருக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். என்ன செய்வீர்கள்? நீங்கள் வகைப்படுத்திய மாதிரிகளைக் காட்டி அதேபோல் செய்யச் சொல்வீர்கள் அல்லவா? எந்திரக் கற்றலில் பழக்குவதும் அதேபோல் தான். கைமுறையாக வகைப்படுத்திய படங்கள் ஆயிரக்கணக்கில் தேவை.

தரவுத்தளங்களில் உள்ள படங்களை முடிந்தால் பயன்படுத்தலாம்

படத்தொகுப்பில் ஒரு வடிவமைப்பைக் (pattern) கண்டுபிடிப்பது போன்ற எளிய கணினிப் பார்வை திட்டங்களுக்கு பொதுவில் கிடைக்கும் படத் தரவுத்தொகுப்புகள் போதுமானதாக இருக்கும். ஆனால் மிகவும் சிக்கலான கணினிப் பார்வை பயன்பாடுகளுக்கு, நீங்கள் ஒரு துல்லியமான தீர்வை உருவாக்கத் தேவையான பயிற்சித் தரவுகளை எவ்வாறு தயாரிப்பது? 

படவலை (ImageNet) மற்றும் கோகோ (COCO – Common Objects in COntext) போன்ற திறந்த மூலத் தரவுத்தொகுப்புகளைப் பயன்படுத்தமுடியுமா என்று முதலில் பார்க்கலாம். அப்படி முடியவில்லை என்றால் நாம் தரவுகளைக் கைமுறையாகத் தயார் செய்ய வேண்டும்.

தரவுகளை வகைப்படுத்தலும் குறியிடுதலும் (Classifying and labeling)

நம்முடைய வேலைக்குத் தகுந்த படங்களை சேகரித்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். அடுத்து இந்தத் தரவுத் தொகுப்புகளை வகைப்படுத்துதல் மற்றும் குறியிடுதல் நம்முடைய பெரும்பாலான நேரத்தை எடுக்கும். இந்த வேலையை எளிதாக்கவும் துரிதப்படுத்தவும் நமக்குத் தோதான கருவிகள் தேவை.

படக் குறிப்புரைக் (annotation) கருவிகள்

லேபல்-ஐஎம்ஜி படக் குறிப்புரைக் கருவி

லேபல்-ஐஎம்ஜி படக் குறிப்புரைக் கருவி

பொதுவாக பொருள் கண்டறிதல் பணிக்கு எல்லைப் பெட்டிகள் வரைந்து குறியிட வேண்டும். இம்மாதிரி வேலைகளுக்கு லேபல்-ஐஎம்ஜி (LabelImg), விசிஜி படக் குறிப்புரைக் கருவி (VGG Image Annotator), இமேஜ்-டாக்கர் (ImageTagger) போன்ற பல கட்டற்ற திறந்த மூலக் கருவிகள் உள்ளன.

நன்றி

  1. LabelImg Annotator

இத்தொடரில் அடுத்த கட்டுரை: சோதனை அமைப்புகள் (Inspection systems)

பார்வை சோதனை அமைப்புகள் என்றால் என்ன? பார்வை சோதனை அமைப்புகள் என்ன செய்ய முடியும். பொதியல் சோதனை (Packaging inspection). தயாரிப்பு தேர்ந்தெடுப்பதும் (product picking) இப்போது இயந்திரப் பார்வையைப் பயன்படுத்துகிறது.

ashokramach@gmail.com