எளிய தமிழில் Computer Vision 24. தயாரிப்பு மற்றும் பாகங்களைத் தொகுத்தல் (Product and Component Assembly)

செலுத்துப்பட்டையில் (conveyor belt) வரும் பாகங்கள் ஒற்றையாக வரும். மேலும் இவை ஒரே திசையமையில் இருக்கக் கூடும். இவற்றை ஒவ்வொன்றாக எந்திரனின் கைப்பிடியில் பிடித்து எடுப்பது அவ்வளவு கடினமான வேலை அல்ல. பலவிதமான பாகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தாலும் பாகங்களை அவற்றின் வடிவம் (shape), அளவு (size)  மற்றும் பட்டைக்குறி (barcode) மூலம் அடையாளம் கண்டுகொள்ளலாம்.

ஆனால் கலன்களில் (bin) கொட்டி வைத்திருக்கும் பாகங்கள் சீரற்ற திசையமைவில் (random orientation)  இருக்கும். இவற்றை எந்திரனின் கைப்பிடியில் பிடித்து எடுப்பது சவாலான வேலை. இதற்கு முப்பரிமாண கணினிப்பார்வை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவேண்டும்.

முப்பரிமாணப் புள்ளி மேகம் (3D Point Cloud)

புள்ளி மேகம் என்பது விண்வெளியில் உள்ள தரவுப் புள்ளிகளின் தொகுப்பாகும். புள்ளிகள் ஒரு முப்பரிமாணப் பொருளைக் குறிக்கும். ஒவ்வொரு புள்ளியும் அதன் X, Y மற்றும் Z ஆயத்தொலைவுகளைக் கொண்டுள்ளது. புள்ளி மேகங்களைப் பொதுவாக முப்பரிமாண இயந்திரப் பார்வை படக்கருவிகளால் (stereo machine vision camera) தயாரிக்கலாம். 

கலனிலிருந்து பாகங்களை எடுத்தல் (Bin Picking) இப்போது இயந்திரப் பார்வையைப் பயன்படுத்துகிறது

இயந்திரப் பார்வை உதவியுடன் கலனிலிருந்து பாகங்களை எடுத்தல்

இயந்திரப் பார்வை உதவியுடன் கலனிலிருந்து பாகங்களை எடுத்தல்

கண்ணால் பார்ப்பதை யோசிக்காமலேயே கையால் பிடித்து எடுக்கும் லாகவம் மனிதர்களுக்கு எளிய கைத்திறமை. ஆனால் இயந்திரப் பார்வை இருந்தாலும் எந்திரனுக்கு ஒரு கலனில் கொட்டி வைத்திருக்கும் பாகங்களில் ஒன்றைப் பிடித்து எடுப்பது எளிதான வேலை அல்ல. 

ஆகவே ஒரு எந்திரன் ஒரு கலனிலிருந்து சீரற்ற பொருட்களைத் திறம்பட எடுக்க, அதற்கு ஒரு புள்ளி மேக வரைபடம் (point cloud map) தேவைப்படுகிறது. புள்ளி மேகத்தை உருவாக்க, ஒரு முப்பரிமாண இயந்திரப் பார்வை படக்கருவி (stereo machine vision camera) தேவை. பின்னர் ஒரு குறிப்பிட்ட உருப்படியை எந்திரன் கைப்பிடியில் பிடித்தெடுத்து அடுத்த வேலையைச் செய்ய முடியும்.

இவை அனைத்தும் உற்பத்தி வரிசையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. அதிக செலவு செய்து தயாரிப்பை திரும்பவும் வாங்கி பழுதுபார்த்தல்  (recall) எண்ணிக்கையை குறைக்கிறது. ஆக இது உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது மற்றும் இறுதியில் நுகர்வோரை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது.

நன்றி

  1. 3D Machine Vision for Bin Picking – Canon

இத்தொடரில் அடுத்த கட்டுரை: தரம் பிரித்தல் மற்றும் வகைப்படுத்தல்

ஜவுளித் தொழிற்சாலையில் குறைந்த செலவில் குழுப்பிரிப்பு. விலங்குத்தோல், மரப்பலகை போன்ற பொருட்களை பழுது வாரியாகப் பிரித்தல். தரவாரியாக வரிசைப்படுத்தல் மற்றும் எண்ணுதல் (Sorting and counting).

ashokramach@gmail.com

%d bloggers like this: