சில்லுவின் கதை 9. GPS க்கு மாற்றாக இந்திய சில்லுவை வடிவமைக்கிறோம்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay)

சில்லுகளின் மிகப்பெரிய ஆற்றலை அமெரிக்க ராணுவ ஆய்வகம் முன்கூட்டியே உணர்ந்தது

0:35 DARPA (Defence Advanced Research Projects Agency) என்பது அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி அமைப்பாகும். சில்லுகளுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். அவர்கள் நிதியளித்த முதல் திட்டங்களில் ஒன்று லின் கான்வே (Lynn Conway) தலைமையில் 1981 இல் உருவாக்கப்பட்ட MOSIS சேவை. ஒரு புனைவு தொழிற்சாலையில் முழு சில்லு உருவாக்குவதற்கு செலவு மிக அதிகம்  என்பதால்,  பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் பிறரின் வடிவமைப்புகளை ஒன்றிணைத்து, ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்து, செலவைப் பல பயனர்களிடையே பிரித்துக் கொள்ள MOSIS உதவியது. MOSIS சில்லு வடிவமைப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பியது. எனது முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக, நான் 5 அல்லது 6 சில்லுகளை வடிவமைத்து அவற்றை உற்பத்தி செய்ய வேண்டியிருந்தது. இவை அனைத்திற்கும் MOSIS நிதியளித்தது.

சில்லுகளை வடிவமைக்கும் மென்பொருள் கருவிகளில் அமெரிக்கா முன்னிலை

3:46 அதே சமயத்தில் குறைக்கடத்தி ஆராய்ச்சிக் கழகமும் (Semiconductor Research Corporation) நிறுவப்பட்டது. அவர்கள் சில அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு சில்லு வடிவமைப்பிற்கான மானியங்களை வழங்குவதன் மூலம் தொடங்கினர். அவர்கள் தானியங்கி மின்னணு வடிவமைப்பு (Electronics Design Automation – EDA) கருவிகளின் வளர்ச்சியை ஆதரித்தனர். இந்த முயற்சியிலிருந்து உலகின் மூன்று முன்னணி EDA கருவி விற்பனையாளர்களான கேடன்ஸ் (Cadence), சினாப்சிஸ் (Synopsis) மற்றும் மென்டர் கிராபிக்ஸ் (Mentor Graphics) ஆகியவை உருவாகின. கேடன்ஸின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி அனிருத் தேவ்கன் (Anirudh Devgan), எனது நல்ல நண்பர், IIT பட்டதாரி, மேலும் EDA கருவிகளில் சிறப்பான பணிகளைச் செய்து வருகிறார்.

அமெரிக்க GPS க்குப் பதிலாக இந்திய NavIC செயற்கைக்கோள்கள்

5:40 இந்திய அரசின் பல திட்டங்களில் இரண்டு திட்டங்கள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றன. அவை, புதிய தொழில் நிறுவனங்களை சில்லு வடிவமைப்பில் ஈடுபடுத்துவதற்காக வடிவமைப்பு சார்ந்த ஊக்கத்தொகை (Design Linked Incentive – DLI) திட்டத்தையும், சில்லு வடிவமைப்புத் துறையில் சிறப்புத் திறன் வாய்ந்த மனிதவளத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சில்லு தொடக்க நிலை நிறுவனங்கள் (Chips to Startup – C2S) திட்டத்தையும் வழங்குகிறது. IIT பம்பாயில் உள்ள எங்கள் குழு C2S திட்டத்தின் பயனாளிகளில் ஒன்று. அமெரிக்க GPS-க்குப் பதிலாக NavIC (Navigation with Indian Constellation) என்ற செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது. திறன் பேசி, கார் போன்ற சாதனங்களில் பொருத்தி இவற்றுடன் தொடர்புகொள்ளக்கூடிய சில்லுவை உருவாக்கி வருகிறோம். இந்திய NavIC செயற்கைக்கோள்களை மட்டுமல்ல, உலகளவில் பயன்படுத்தக்கூடிய வகையிலும் இந்த சில்லுவை நாங்கள் வடிவமைத்து வருகிறோம்.

கணினிகளுக்கு மட்டுமல்லாமல் தொலைத்தொடர்புக்கும் சில்லுகள் 

6:40 இதுவரை நாம் பார்த்த சில்லுகள் முக்கியமாகக் கணினிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னர் அவை எவ்வாறு தொலைத்தொடர்புக்கு உதவின என்பதைப் பார்ப்போம். கொடுக்கப்பட்ட மின்காந்த நிறமாலையில் (electromagnetic spectrum) அதிகத் தரவைப் பொதிக்கும் CDMA (Code-division multiple access) முறையை இர்வின் ஜேக்கப்ஸ் (Irwin Jacobs) உருவாக்கினார். மேலும் ஆண்ட்ரூ விட்டர்பி (Andrew Viterbi) சமிக்ஞைகளில் உள்ள இரைச்சலைக் கையாள்வதற்கும் பிழை திருத்தத்திற்கும் முறைகளை உருவாக்கினார். பின்னர் அவர்கள் இணைந்து குவால்காம் (Qualcomm) நிறுவனத்தை நிறுவினர். அது திறன்பேசிகளில் பயன்படுத்துவதற்காக அதிகமான டிரான்சிஸ்டர்கள் நிரம்பிய சில்லுகளை உருவாக்கியது.

உலகிலேயே தைவான் நாடு சில்லு தயாரிப்பில் சிறந்து விளங்குவதற்கு வித்திட்டவர்

11:10 குவோ-டிங் லி (Kwoh-Ting Li) தைவானில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக (Minister of Science and Technology – MOST) இருந்தார். டிரான்சிஸ்டர் தொகுப்பு  வகை வேலைகளுக்கு சீனா ஒரு பெரிய போட்டியாளராக வரக்கூடும் என்று முன்கூட்டியே அவர் உணர்ந்தார். தொழில்நுட்ப அடுக்கில் தைவான் மேலே செல்ல வேண்டும் என்று அவர் விரும்பினார். அந்த நேரத்தில்  டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸை விட்டு மோரிஸ் சாங் வெளியேறினார். மோரிஸ் சாங்கை தொழில்துறை தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் (Industrial Technology Research Institute – ITRI) தலைவராகத் தைவானுக்குத் திரும்பி வரும்படி குவோ-டிங் லி வற்புறுத்தினார். ஒரு சுவையான செய்தி என்னவென்றால், இவர்கள் இருவருமே தைவானைச் சேர்ந்தவர்கள் அல்ல, சீனாவைச் சேர்ந்தவர்கள்.

தமிழாக்கம்: இரா. அசோகன்

%d bloggers like this: