இதுவரையிலான தத்துவவியளாலர்கள் உலகை பற்றிப் பலவிதங்களில் விளக்கியுள்ளனர்…
ஆனால் நம்முன்னிறுக்கும் கடமை அதை மாற்றுவதே… –ஆசான். காரல் மார்க்ஸ்
சரியாக ஆறு மாதங்களுக்கு முன்னர், விழுப்புரத்தில் இலவச பைதான் பயிற்சிகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் 450க்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்திருந்தனர்(கிட்டத்தட்ட 7மாநிலங்கள்). பதிவுசெய்தவர்களை 10பேர் கொண்ட குழு அலைபேசியில் அழைத்து, அவர்களைப் பற்றி விவரங்களைக் கேட்டறிந்தனர். அதன்படி அவர்களின், சமூக பொருளாதார நிலைகளைப் பொருத்து 40 பேரைத் தேர்வு செய்தோம். இந்த 40பேரும் விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர்கள் குழுவின்(VGLUG) ஒருங்கினைப்பாளர்கள் சதீஷ்குமார் மற்றும் எத்திராஜ் தேர்வுசெய்யப்பட்ட 40 பேருக்கும் பயிற்சியளித்தனர். விழுப்புரத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர்கள் இருவரும், சென்னை மற்றும் பெங்களூரில் பணிபுரிந்து வருகின்றனர். வார இறுதிநாட்களில் ஒருவர் விழுப்புரத்திற்கு வந்து, 40 பேருக்கும் கடந்த ஆறுமாத காலமாகப் பயிற்சியளித்தனர். இன்றைய இளைஞர்களுக்குச் சமூக அக்கறையில்லை, சுயநல சிந்தனைகொண்டவர்கள் என்று தொடர் பிரச்சாரங்களைப் படித்திருப்போம், கேட்டிருப்போம். இவர்கள் இருவரும் நினைத்திருந்தால் வார இறுதிநாட்களை எப்படிவேண்டுமானாலும் கழித்திருக்கலாம். அப்படியிருந்துவிடாமல், தான் பெற்ற அறிவுச்செல்வத்தை அனைவருக்கும் பகிர்வதில்தான் சமத்துவம் பரவும் என்று சொல்லிக்கொண்டு இந்தப் பயிற்சி வகுப்புக்களை தொடங்கிய நாள் தொட்டு தொடர்சியாக 6மாதங்காள் (24 வாரங்கள்) நடத்திகாட்டியுள்ளனர். பாராட்டுக்கள்.
கற்பி, ஒன்றுசேர், கிளர்ச்சிசெய்… -அண்ணல். அம்பேத்கர்
இந்த 6மாத பயிற்சியில் தேர்வான மாணவர்கள், பைதான் பயிற்சியை மட்டும் பெறவில்லை, கூடுதலாக, செப்டம்பர் மாதம் VGLUG நடத்திய கட்டற்ற மென்பொருள் தினத்திலும்(Software Freedom Day) அதனைத்தொடர்ந்து, விழுப்புரம் மக்களவை உறுப்பினர் முனைவர். து. இரவிக்குமார் அவர்கள் தத்தெடுத்த காந்தளவாடி கிராமத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு கிராமப்புற மக்களின் வாழ்நிலையை தெரிந்துகொண்டனர்.
எவ்வளவு பெரிய கல்வியும், ஒரு கலையாகவும் தொழிலாகவும் போய்விட்டதேயல்லாமல்
பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை. -தந்தை. பெரியார்
இன்றைய இளைஞர்கள் கூட்டம், வணிகமாகிப்போன சினிமா மற்றும் கல்வியின் உபபொருட்களாகவே வார்க்கப்படுகிறார்கள். ஒரு கட்டற்ற மென்பொருள் அமைப்பு எவ்வாறு இயங்கவேண்டுமென்று பலரும் பல விதங்களில் வியாக்கியானம் செய்துள்ளனர், செய்தும் வருகின்றனர். ஆசான் மார்க்ஸ் சொல்லுவது போல நம்முன்னிறுக்கும் கடமை அதை மாற்றுவதே.
கடந்த ஆறுமாதங்களில், விழுப்புரம் அமைப்பு மேற்கொண்ட இம்முயற்சி, இந்த மாணவர்களின் மனநிலையில் எந்தவித மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர்கள் இறுதியாகப் பகிர்ந்துகொண்ட சொற்களிலிருந்து அறியமுடிந்தது. சக மனிதனுக்கு சமவாய்ப்புகளை உருவாக்கித்தருவதுதான் நல்ல தத்துவமாக இருக்க முடியும்.