கல்விக்கு மறுபெயர் காசு என்கிற மோசமான நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கோம்! மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை எவ்வளவு முக்கியமோ அதே போல கல்வி என்பதும் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால், இதன் முக்கியத்துவத்தை பலர் உணராமல் மக்களுக்கு இன்றும் கல்வியை எட்டா கனியாக மாற்றி வருகின்றனர். கல்வியில் பல மாற்றங்கள் காலத்திற்கு ஏற்ப மாறி கொண்டே வருகிறது. இதில் தொழிற்நுட்பத்திற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. இன்றைய கால கட்டத்தில் தொழிற்நுட்பம் இல்லாமல் எதுவுமே நடக்காது என்றாகி விட்டது. தொழிற்நுட்பத்தை சார்ந்த விழிப்புணர்வு நம் மக்களிடம் மிக குறைவாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக கிராம புறங்களை எடுத்துக்கொண்டால், நகர புறத்தை காட்டிலும் இதன் சதவீதம் மிக குறைவாக தான் இருக்கின்றது என பல ஆய்வறிக்கைகள் சொல்கின்றன.
ஆனால், இத்தகைய நிலையை முழுவதுமாக உடைத்தெறிய வேண்டும் என்கிற ஒற்றை குறிக்கோளை கொண்டு விழுப்புரத்தில் இயங்கி வருவது தான் எங்கள் குழு! இதன் பெயர் ‘விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமும்”. ஆங்கிலத்தில் “Villupuram GNU Linux Users Group” என்று சொல்வார்கள். நாங்கள் இதுவரை பல முக்கிய பயிற்சிகளை மாணர்வகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம். ஆனால், இது வரை சிறிய அளவில் நாங்கள் செய்த முயற்சிகளை இம்முறை சற்று பெரிய அளவில் செய்ய திட்டமிட்டோம்! இதன் முடிவு தான் “Python ” என்கிற programming language-ஐ மாணவர்களுக்கு இலவசமாக சொல்லி தரலாம் என்பதே. இந்த “Python Free Training”-ஐ தொடங்குவதற்கு குழுவில் உள்ள அனைவரின் கூட்டு முயற்சியே முக்கிய காரணம். குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் பல வேலைகள் இருந்தாலும் மாணவர்களின் கல்வியும், தொழிற்நட்பம் சார்ந்த விரிந்த அறிவும் மிக முக்கியம் என்பதற்காகவே இந்த பயிற்சிக்கான வேலைக்ளை நாங்கள் முதன்மையாக எடுத்து செய்தோம். முதல் கட்டமாக போஸ்டர்-ஐ சதீஷ் அவர்கள் தயார் செய்தார். எந்த வேலைகளை எப்போது சொன்னாலும் மறுப்பு தெரிவிக்காமல் செய்யும் இவரை போன்ற ஆட்கள் தான் எங்களுக்கு எப்போதுமே பலம்.
அடுத்தது, இதற்கான வலைத்தளத்தை எத்திராஜ் அவர்கள் உருவாக்க ஆரம்பித்தார். இதற்கான ஏற்பாடுகளை கலீல் மற்றும் கார்க்கி ஆகியோர் செய்தனர். பின் எங்களின் அடுத்த முயற்சி சமூக வலைத்தளங்களின் வழியாகவும் மற்றும் கல்லூரிகளை நேரில் தொடர்பு கொள்வது தான். இதற்கான முயற்சிகளை ஆரம்பம் முதலே ஆதம் செய்து வந்தார். இந்த பயிற்சிக்கான பதிவுகள் தொடங்கியது. ரெஜிஸ்டர் செய்வதற்கான கடைசி நாளாக 21-ஆம் தேதியை குறிப்பிட்டோம். ஆனால், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே சுமார் 400 மாணவர்கள் பதிவு செய்தனர். நாங்கள் சாதாரணமாக எதிர்பார்த்தது வெறும் 50 முதல் 80 மாணவர்கள் தான். ஆனால், இவ்வளவு மாணவர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இறுதியாக 460 மாணவர்களோடு பதிவை நிறுத்தி கொண்டோம். அதற்கு பின்னரும் பலர் மொபைல் நம்பர் மூலமாக தொடர்பு கொண்டு பதிவு செய்தனர்.
இவ்வளவு மாணவர்களுக்கு எங்களின் இந்த புதிய முயற்சி சென்றடைந்ததற்கு காரணம், நேரடியாக மாணவர்களை நோக்கி கல்லூரிகளுக்கே சென்றது நாங்கள் தான். அதிலும் குறிப்பாக அலுவலக வேலைகள் இருந்தாலும் 2 நாட்கள் விடுப்பு எடுத்து கொண்டு இந்த பயிற்சியை மாணர்வர்களுக்கு எப்படியாவது கொண்டு சேர்க்க வேண்டும் என கலீல், சதீஷ், ஆதம், ஹரி பிரியா, விஜி போன்றோர் கூட்டு முயற்சியாக கல்லூரிகளுக்கு சென்று இதனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் மிக கடினமான விஷயமே மாணவர்களை தேர்வு செய்வது தான். அதுவும் 460+ மாணவர்களில் இருந்து 40 மாணவர்களை தேர்வு செய்வது தான் எங்கள் அனைவருக்கும் ஒரு சவாலான விஷயமாக இருந்தது. இந்த முயற்சியில் கார்க்கி, எத்திராஜ், கலீல், சதீஷ், மணிமாறன், ஸ்வேதா, ஆதம், ஹரி பிரியா, விஜி, விஷ்ணு ஆகிய பத்து பேரும் சேர்ந்து ஆளுக்கு சுமார் 50+ மாணவர்களுக்கு மொபைலில் தொடர்பு கொண்டோம். மாணவர்களின் பொருளாதார அடிப்படை மற்றும் அவர்களின் ஆர்வத்தை வைத்தே இந்த 40 பேரை நாங்கள் தேர்வு செய்தோம். இந்த 40 பேரை தேர்வு செய்தாக வேண்டிய முடிவினால், பலருக்கு தூக்கமே வரவில்லை. அந்த காரணம், 40 மாணவர்களை தவிர்த்த்தும் பல மாணவர்களுக்கும் இந்த இலவச பயிற்சி மிக அவசியமானதாக இருந்தது.
அடுத்து, இந்த நிகழ்விற்கான இறுதி கட்டம் வந்தது. ஜூலை 28-ஆம் தேதி மாணவர்கள் அனைவரும் இந்த “Python Free Training”-கிற்கு வந்தனர். நாங்கள் தேர்வு செய்த 40 மாணவர்கள் மட்டும் இல்லாமல் மேலும் கூடுதலாக 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்தனர். விழா தலைமை தோழர். கனகராஜ் அவர்கள். இந்த நிகழ்வில் இவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு முக்கியம். மாணவர்களின் இன்றைய நிலை, கல்வியின் தரம், புதிய கல்வி கொள்கை, தொழிற்நுட்பத்தின் இன்றைய ஆளுமை, அறிவியலில் அதீத வளர்ச்சி…இப்படி இவர் பேசிய ஒவ்வொன்றும் அவ்வளவு முக்கியமானது. அதன் பின் தோழர் கார்க்கி அவர்கள் “விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம்” எதற்காக இங்கு இயங்கி வருகிறது என்பதை பற்றிய தெளிவை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார். அடுத்து, தோழர் கலீல் அவர்கள், எதற்காக இந்த “Python” பற்றிய பயிற்சியை நாங்கள் இலவசமாக தருகிறோம். இதற்கான மூல காரணம், நோக்கம் ஆகியவற்றை புரிய வைத்தார். அதன்பின் தோழர் எத்திராஜ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் இந்த பயிற்சியை பற்றிய முன்னுரையை தந்தனர். இந்த விழாவை தோழர். ஹரி பிரியா அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இறுதியாக 40 மாணவர்களை 5 குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் பெயரையும் வைக்க சொன்னோம். இப்படிப்பட்ட குழு முயற்சி ஒரு புது வித அனுபவத்தை மாணவர்களுக்கு நிச்சயம் தரும். காரணம், இது வகுப்பரை சார்ந்த கல்வியை போன்று இல்லாமல் முழுமையாக புதுமையான கற்கும் திறனை மாணவர்களுக்கு ஏற்படுத்தும். இனி இந்த பயிற்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 3 மணி நேரம் தொடர்ந்து நடக்கும். முதல் 6 மாதங்கள் பயிற்சியும், அடுத்த 6 மாதங்கள் இன்டெர்ஷிப்பும் வழங்கப்படும். இதுவே இந்த பயிற்சியின் கருவாகும்!
— ஹரிப்பிரியா – harikittyy@gmail.com