எளிய தமிழில் CAD/CAM/CAE 8. வடிவியல் கட்டுப்பாடு தீர்வி (Geometric constraint solver)

வழக்கமாக நாம் 2D வரித்தோற்றம் (orthogonal view) உருவரைவுகள் செய்யும்போது வரைபலகையில் கையால் வரைவது போலவே வரைவோம். அதாவது கோடுகளைத் தேவையான துல்லியமான அளவில் தேவையான திசையிலேயே வரைவோம். ஏனெனில் நம்முடைய நோக்கம் அந்தப் படத்தை வரைந்து, அளவுகள் காட்டி, அச்சிட்டுப் பணிமனையில் உற்பத்தி செய்யக் கொடுக்க வேண்டும்.

தோராயமாக வரைந்து கட்டுப்பாடு அமைத்தல் (Constraint Sketching)

திட வடிவங்களை உருவாக்குவதற்கு நாம் பெரும்பாலும் 2D வடிவங்களிலேயே தொடங்க வேண்டும். ஏனெனில் இயந்திரவியல் பாகங்களை பெரும்பாலும் 2D வடிவங்களைப் பிதுக்கியும், சுழற்றியும்தான் உருவாக்க முடியும். இம்மாதிரி 2D வடிவங்களை மேற்கண்டவாறு துல்லியமாக வரைவதில்லை. முதலில் தோராயமாகவே வரைவோம். கட்டுப்பாடுகள் அமைக்காதவரை இவற்றுக்கு விடுநிலைகள் (Degrees of Freedom – DoF) அதிகம். சுட்டியால் பிடித்து நாம் இவற்றை நீட்டலாம், சுழற்றலாம், பெரிதாகவும் சிறிதாகவும் ஆக்கலாம். அதாவது இவை நடைமுறையில் “மிதக்கும்” (floating) வடிவங்கள்தான். இது வடிவமைப்பு செயல்பாட்டில் பெரும் நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. பின்னர் இந்தத் தோராய வடிவங்களுக்குக் கட்டுப்பாடுகளை அமைப்போம். நம்முடைய 3D மென்பொருள் இத்தோராய வடிவங்களைக் கட்டுப்பாடுகள்படித் துல்லிய வடிவங்களாக மாற்றிவிடும்.

கட்டுப்பாடுகள் (constraints) என்றால் என்ன?

சான்றாக நாம் ஒரு சதுரம் வரைய வேண்டுமென்று வைத்துக் கொள்வோம். வழக்கமாக 90 பாகைகள் வைத்துக் கோடுகள் வரைந்து எல்லாப் பக்கங்களும் சமமாக இருக்குமாறு கவனமாக வரைவோம். ஆனால் தோராய வரைவில் அம்மாதிரி செய்யத் தேவையில்லை. முதலில் ஏதோ கோணத்தில், ஏதோ நீளத்தில் ஒரு நாற்கோணம் வரைந்து கொள்ளலாம். 

இப்பொழுது கட்டுப்பாடுகள் அமைக்க வேண்டும். முதல் கட்டுப்பாடு ஏதாவது ஒரு கோணத்தை 90 பாகைகள் என்று அமைக்கலாம். இரண்டாவது அதன் எதிர் கோணத்தையும் 90 பாகைகள் என்று அமைக்கலாம். இப்பொழுது மென்பொருள் நம் நாற்கோணத்தில் இந்த இரண்டு கட்டுப்பாடுகளையும் செயற்படுத்தும். உடன் அது செவ்வகமாகிவிடும். கடைசியாக அடுத்தடுத்த பக்கங்களின் நீளங்கள் சமம் என்ற கட்டுப்பாட்டை அமைத்தால் நமக்கு சதுரம் கிடைத்துவிடும். இப்போது இதற்கு ஒரே ஒரு விடுநிலை மட்டுமே உண்டு. நாம் சுட்டியால் பிடித்து இழுத்தால் பெரிய சதுரமாகவோ அல்லது சிறிய சதுரமாகவோ மட்டுமே ஆகும். சதுரத்தின் பக்கத்துக்கு அளவு கொடுத்தால் அந்த ஒரு விடுநிலையும் கட்டுப்படுத்தப்படும். நாம் கட்டுப்பாடுகளில் ஏதேனும் மாற்றம் செய்தால் அதற்கு உட்பட்டு வரைபடமும் உடனடியாக மாறிவிடும்.

வடிவியல் மற்றும் அளவுரு கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள் இரண்டு வகையானவை. வடிவியல் கட்டுப்பாடுகள் மற்றும் அளவுரு கட்டுப்பாடுகள். அளவுரு கட்டுப்பாடுகள் தூரம், கோணம், ஆரம் போன்றவை. வடிவியல் கட்டுப்பாடுகள் என்றால் என்ன? இந்தக்கோடு அந்தக் கோட்டுக்கு இணைகோடாக இருக்க வேண்டும் அல்லது அந்த வளைவுக்கு தொடுகோடாக இருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள்தான். 

இவையும் பாகங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது நாம் அமைத்த கட்டுப்பாடுகள் போன்றவைதான்:

  • ஒன்றியமைவு (Coincident) 
  • இணையமைவு (Parallel)
  • தொடுகோடு (Tangential)
  • கிடைநிலை (Horizontal) அல்லது செங்குத்து (Vertical)

கீழ்க்கண்ட எடுத்துக்காட்டில், ஒரு வளைவுக்கும் நேர்கோட்டுக்கும் இடையில் உள்ள கோணம் அவற்றின் குறுக்குவெட்டும் புள்ளியில் கட்டுப்படுத்தப்படுகிறது. 

ஃப்ரீகேட் கட்டுப்பாடு தீர்வி

ஃப்ரீகேட் கட்டுப்பாடு தீர்வி

நன்றி தெரிவிப்புகள்

  1. Sketcher ConstrainAngle – freecadweb 

இத்தொடரில் அடுத்த கட்டுரை: CAD கோப்பு வகைகள்

கோப்பு வகைகள் ஏற்றுமதி. கோப்பு வகைகள் இறக்குமதி. DWG – ஆட்டோகேட் தனியுரிம கோப்பு வகை. DXF – ஆட்டோகேட் வடிவமைப்பு பரிமாற்றம் கோப்பு வகை. IGES – பழைய வடிவமைப்பு நடுநிலை கோப்பு வகை. STEP – புதிய வடிவமைப்பு நடுநிலை கோப்பு வகை. STL – 3D அச்சுக்கு உகந்தது.

ashokramach@gmail.com

%d bloggers like this: