தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 3. உலகமயமாக்கலும் தகவல் தொழில்நுட்பமும்

கோட்பாட்டைப் பொருத்தவரை உலகமயமாக்கல் நன்றாகத் தானிருக்கிறது. உங்கள் நாட்டில் எந்தப் பொருட்களைக் குறைந்த செலவில் நல்ல தரத்தில் செய்ய முடியுமோ அவற்றை உலகெங்கிலும் ஏற்றுமதி செய்யுங்கள். அந்த வருமானத்தை வைத்து உங்கள் நாட்டுக்குத் தேவையான பொருட்களை அவற்றைத் திறமையாகச் செய்யும் நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து கொள்ளுங்கள்.

இம்மாதிரி தன் கையே தனக்குதவி என்று இல்லாமல் அன்றாட இன்றியமையாத பொருட்களுக்குக் கூட மற்ற நாடுகளை நம்பி இருப்பதுதான் உலகமயமாக்கல். இதனுடைய ஒரு துணை விளைவுதான் ஆங்கில மொழி ஆதிக்கம். தகவல் தொழில் நுட்பத்துறையில் உலகமயமாக்கலின் தாக்கம் பரவலாகத் தெரிந்த சங்கதி. ஆகவே தயாரிப்பு தொழிற்சாலைத் துறையில் ஒரு எடுத்துக்காட்டை ஆய்வு செய்வோம்.

உலகமயமாக்கலுக்கு நடைமுறை எடுத்துக்காட்டு – திருப்பூர்

முப்பது ஆண்டுகளில் திருப்பூர் பின்னிய உள்ளங்கிகளின் தலைநகரம் ஆகிவிட்டது. “டாலர் நகரம்” அல்லது “சிறிய ஜப்பான்” என்று பரவலாக அழைக்கப்படும் இந்நகரம் பின்னிய ஆயத்த ஆடைகளில் சிறந்து விளங்குகிறது. 1970 களில், ஒரு இத்தாலியக் கொத்தணியுடன் இணைந்து திருப்பூர் ஏற்றுமதி சந்தையில் வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியது. பின்னர் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் பசிபிக் நாடுகளில் நல்ல பெயர் பெற்று இன்று திருப்பூர் ஒரு முன்னிலை ஏற்றுமதிக் கொத்தணியாக விளங்குகிறது.

1984 இல் ஏற்றுமதி 10 கோடி ரூபாய். சுமார் இருபது ஆண்டுகள் பின்னர் 2006-07 ஆம் ஆண்டில் ஏற்றுமதி 11,000 கோடி ரூபாய். ஏற்றுமதி மூலம் 3.5 லட்சம் மக்களுக்குத் திருப்பூர் வேலைவாய்ப்பு அளிக்கிறது. இவ்வளவு குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகவுள்ள உலகமயமாக்கலை வேண்டாம் என்று சொல்ல முடியுமா?

நீங்கள் தயாராக இருக்கிறீர்களோ இல்லையோ, ஆங்கிலம்தான் இப்போது வணிக உலக மொழி

சில கணிப்பீடுகளின்படி ஆங்கிலம் நன்றாகத் தெரிந்த நாடுகளின் பொருளாதாரங்கள் சிறப்பாக உள்ளன. மக்கள்தொகையின் ஆங்கிலத் திறன்களுக்கும் நாட்டின் பொருளாதார செயல்திறனுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. மற்றும் தனிப்பட்ட அளவில், உலகெங்கிலும் தங்கள் நாட்டினுடைய சராசரியுடன் ஒப்பிடுகையில் ஆங்கிலத்தில் அதிக திறமையுள்ள வேலை தேடுபவர்கள் 30-50% அதிக சம்பளத்தை பெறுகின்றனர் என்று ஆளெடுப்பவர்களும் மனிதவள மேலாளர்களும் கூறுகிறார்கள். வருமானம் மட்டுமல்ல, வாழ்க்கை தரத்தையே மேம்படச் செய்கிறதாம். ஆங்கிலத்திறமை மற்றும் மனித வளர்ச்சி குறியீட்டிற்கும் இடையேயான ஒரு தொடர்பையும் கண்டறிந்ததாகச் சொல்கிறார்கள். இது கல்வி, ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வியறிவு மற்றும் வாழ்க்கைத் தரங்களின் அளவு. ஆகவே உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள், ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ளத் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். தங்கள் முன்னேற்றத்திற்காக மட்டுமல்ல, இது ஒரு இன்றியமையாத பொருளாதாரத் தேவையாகவும் இருக்கிறது.

உலகமயமாக்கலின் விளைவாக ஆங்கில மொழி ஆதிக்கம்: நடைமுறை எடுத்துக்காட்டு – ரகுடென்

ரகுடென் (Rakuten) என்பது ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய மின் வணிக நிறுவனம். அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஹிரோஷி மிக்கிடானி (Hiroshi Mikitani) 2010 இல் ஆங்கிலமே நிறுவனத்தின் அதிகாரபூர்வ மொழி என்று உத்தரவிட்டார். இந்த நிறுவனத்தின் இலக்கானது, உலகின் முதல் இணைய சேவை நிறுவனமாக மாறுவது. இந்தப் புதிய கொள்கை 7,100 ஜப்பானிய ஊழியர்களைப் பாதித்தது. குறிப்பாக ஜப்பானுக்கு வெளியே மற்ற நாடுகளில் விரிவாக்கத் திட்டங்கள் இருந்ததால், ஆங்கிலம் இந்த இலக்கை அடைவதற்கு மிகவும் முக்கியம் என்று மிக்கிடானி நம்பினார்.

மொழி மாற்றம்பற்றித் தீவிரமாக இருந்த மிக்கிடானி திட்டத்தை அறிவித்ததே ஆங்கிலத்தில்தான். அன்றிரவே உணவு விடுதியில் உணவுப் பட்டியல் முதல் மின்தூக்கியில் பெயர்த்தொகுதி வரை எல்லாமே ஆங்கிலமயமாயின. மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் பன்னாட்டு ஆங்கில மதிப்பீட்டின்படி  பணியாளர்கள் அனைவரும் தகுதிப்பட வேண்டும் அல்லது பதவி இறக்குதல் அல்லது பணிநீக்கம் ஆக நேரிடும் என்றும் அவர் அறிவித்தார். மிக்கிடானியின் அறிவிப்பு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இதுநாள்வரை அவர்கள் ஜப்பானிய மொழியிலேயே வேலை செய்து வந்தனர். அவர்களின் அனைத்து ஆவணங்களும் ஜப்பானிய மொழியில் இருந்தன. ஆங்கிலத்தில் எல்லாவற்றையும் அவர்களால் எப்படிச் சமாளிக்க முடியும்?

பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு முன்னேற்றத்தை நிறுவனம் மதிப்பீடு செய்தது. சில ஊழியர்கள் கூட ஆங்கிலத்தில் திறமையான அளவை அடையவில்லை. பிரச்சினை என்னவென்றால் பணியாளர்கள், பதிவு செய்த பாடங்களைக் கேட்டு அல்லது புத்தகங்களைத் தங்கள் சொந்த நேரங்களில் படிப்பதன் மூலம், தாங்களே கற்றுக் கொள்ள வேண்டும் என நிறுவனம் எதிர்பார்த்ததுதான்.

அதைப் பார்த்து மிக்கிட்டானி தனது மனதை மாற்றிக்கொண்டார். பின்னர் நிறுவனச் செலவில்  ஆங்கில வகுப்புகள், இணையக்கற்றல், செயலிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் பயிற்சி போன்ற பல பயிற்சிகளைக் கொடுத்து 2015 ஆம் ஆண்டளவில் பெரும்பான்மையான ஜப்பானிய ஊழியர்கள் குழுசந்திப்பில் என்ன நடக்கிறது என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நிலைக்கு வந்தனர். “என் சக ஊழியர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவதில் எனக்குப் பயமில்லை,” என்று ஒருவர் கூறினார்.

இம்மாதிரி மனித வரலாற்றில் மிக வேகமாகப் பரவிவரும் மொழி ஆங்கிலம். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள் 385 மில்லியன் உள்ளனர். இந்தியா மற்றும் நைஜீரியா போன்ற முன்னாள் குடியேற்ற நாடுகளில் ஒரு பில்லியன் சரளமாக ஆங்கிலம் பேசுபவர்கள். உலகம் முழுவதிலும் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகப் படித்தவர்கள் மில்லியன் கணக்கான உள்ளனர். ஆக உலகளவில் சுமார் 1.75 பில்லியன் மக்களால் இது ஒரு பயனுள்ள அளவில் பேசப்படுகிறது.

உலகமயமாக்கலுக்கு ஊக்க மருந்து தகவல் தொழில்நுட்பம்

இணையமும் மற்ற பல தகவல் தொழில்நுட்பங்களும் வளர்ந்தது உலகமயமாக்கலுக்கு ஊக்க மருந்து கொடுத்தாற்போல ஆயிற்று. 1990 களின் முற்பகுதியில் கணினி வன்பொருள், மென்பொருள், மற்றும் தகவல்தொடர்பு மேம்பாடுகள் மக்களுக்குப் பொருளாதாரத் திறனை அணுகும் ஆற்றலை அதிகரித்தன. அதன் பின்னர் இணையத்தின் இரண்டாவது முன்னேற்றத்தில் வந்த சமூக ஊடகங்கள்  இணைய அடிப்படையிலான கருவிகளில் தனிப்பட்ட, அரசியல் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக மக்கள் தகவலைப் பயன்படுத்தும், பகிரும் வழிகளையே மாற்றியமைத்தன.

உலகத்தில் எந்த இடம் என்று பொருட்படுத்தாமல், புதுமையான வழிகளில் வளங்களைப் பயன்படுத்தி நாடுகள் மற்றும் கலாச்சாரங்களிடையில் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்கத் தகவல் தொழில்நுட்பம் வழி செய்கிறது. தகவல் பரிமாறத் திறமையான மற்றும் பயனுள்ள அலைத்தடங்களை உருவாக்கி, தகவல் தொழில்நுட்பத்துறை உலகளாவிய ஒருங்கிணைப்பு ஊக்கியாக இருக்கிறது.

——————————–

இத்தொடரில் அடுத்த கட்டுரை: அமெரிக்க கலாச்சார ஆதிக்கமும் தகவல் தொழில்நுட்பமும்

கூகிள், முகநூல், ட்விட்டர், அமேசான், ஆப்பிள் மற்றும் ஊபர் போன்ற அமெரிக்க இணைய நிறுவனங்கள்மூலம் அமெரிக்கமயமாக்கல் குறித்த கவலை ஐரோப்பாவில் அதிகரித்து வருவது. இந்த உலகளாவிய பெரும் போக்கில் மாட்டாமல் பைடு தேடல் இயந்திரம், வெய்போ சமூக ஊடகம், வீசேட் அரட்டை, டிடி வாடகை வண்டி, அலிபாபா, டென்சென்ட் போன்ற பல இணைய தகவல் தொழில்நுட்ப சேவைகளையும், நிறுவனங்களையும் உருவாக்கிச் சீனா தனக்கெனத் தனி வழி அமைத்துக் கொண்டது. சீனா செல்லும் இந்த வழியைப் பார்த்து வடக்கில் உள்ள கட்சிகளில் சிலர் இந்தியாவில் இந்தியை ஆட்சி மொழியாக்கி விட்டால் நாமும் அப்படிச் செய்யலாமே என்று நினைப்பது.

%d bloggers like this: