IoT செயற்பாட்டுமேடை (platform) அல்லது கட்டுப்படுத்தி (controller)
IoT செயற்பாட்டுமேடை அல்லது கட்டுப்படுத்தி என்பது சாதனங்களை மேலாண்மை செய்யவும் மற்றும் தரவுகளைத் திரட்டி, சேமித்து வைத்து, பகுப்பாய்வு செய்து மானிப்பெட்டியில் வரைபடங்களாகப் பார்க்கவும் வழி செய்யும் மென்பொருள்.
சந்தையில் பல IoT செயற்பாட்டுமேடைகள் உள்ளன, அவற்றின் செயல்பாடு மிகப்பெரிய அளவில் வேறுபடுகிறது. எல்லா IoT செயற்பாட்டுமேடைகளும் தரவைக் காண்பிப்பதற்கான மானிப்பெட்டியைக் கொண்டிருந்தாலும், சில உண்மையில் மானிப்பெட்டிகள் மட்டுமே, அவை சாதனங்களிலிருந்து வரும் தரவைக் காண்பிக்கும் திறன் மட்டுமே கொண்டவை.
IoT கட்டுப்படுத்தியை எல்லாத் தலைப்புகளிலும் சந்தா சேர்க்க வேண்டும்
நம் கட்டுப்படுத்தி முதலில் எல்லாத் தலைப்புகளிலும் சந்தா சேர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எல்லாத் தரவுகளும் இதற்கு வந்துசேரும். தரவுகளில் மாற்றம் கண்டால் என்ன செய்ய வேண்டும் என்று விதிகளை அமைக்கலாம். மேலும் தரவுகளை தரவுத்தளத்தில் சேமித்தும் வைக்கலாம். இந்த சேமித்த தரவுகளை மானிப்பெட்டியில் (Dashboard) பார்க்க முடியும். பொதுவாக கட்டுப்படுத்திகளில் மேற்கண்டவாறு விதிமுறைகளை அமைக்க, மற்றும் சிறிய மாற்றங்கள் செய்ய நாம் ஒவ்வொரு முறையும் ஒரு நிரலாளரை அணுக வேண்டியிருக்கும்.
நோட்-ரெட் (Node-RED) வரைபடப் பயனர் இடைமுகம்
ஆனால் நோட்-ரெட் வரைபடப் பயனர் இடைமுகம் கொண்டுள்ளது. இதில் கணுக்களை (nodes) இழுத்துப் போட்டு (drag-and-drop), இணைத்து பாய்வுகளை (flows) உருவாக்கலாம். இம்மாதிரி நிரல் எழுதத் தெரியாதவர்களும் விதிமுறைகளை எளிதில் உருவாக்கலாம் மற்றும் மாற்றங்களும் செய்யலாம்.
IoT யை இணையத்துடன் இணைப்பது உசிதமல்ல என்று முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இதை செயல்படுத்துவதற்கு உங்களுடைய நிறுவனத்தின் உட்பிணையத்திலேயே (local area network) வேலை செய்யக்கூடிய ஒரு கட்டுப்படுத்தி தேவை. இவ்வாறு வெவ்வேறு IoT சாதனங்கள் மற்றும் சேவைகளை ஒன்றிணைக்க நோட்-ரெட் ஒரு நேர்த்தியான தீர்வை வழங்குகிறது.
நோட்-ரெட் இல் இரண்டு பாகங்கள் – கட்டுப்படுத்தி மற்றும் மானிப்பெட்டி (Dashboard)
ஒரே மடிக்கணினியில் கட்டுப்படுத்தி மற்றும் மானிப்பெட்டி இரண்டையும் நிறுவலாம். அல்லது தனி கம்பியில்லா பீகல்போன் கிரீன் (BeagleBone Green Wireless) போன்ற கையடக்கக் கணினியில்கூட கட்டுப்படுத்தியை மட்டும் நிறுவி இயக்கலாம். மற்றும் தனியாக ஒரு கைக்கணினியில் மானிப்பெட்டியை நிறுவிப் பார்க்கப் பயன்படுத்தலாம்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: நோட்-ரெட் – விதிகள் அமைத்தல் மற்றும் மானிப்பெட்டி
நோட்-ரெட் (Node-Red) விதிகள் அமைத்தல். நோட்-ரெட் மானிப்பெட்டி (Dashboard).