எளிய தமிழில் Electric Vehicles 16. வீட்டு மின்னேற்றி

வீடுகளில் அதிகபட்ச மின்னோட்டம் 15 ஆம்பியர் தரநிலை கொண்ட 3-துளை மின் சாக்கெட்டில் கிடைக்கும். வீட்டு மின்னழுத்தம் 220 வோல்ட் என்று இருப்பதால் மின்னோட்டம் 15 ஆம்பியர் என்றால் மின்னேற்றம் அதிகபட்சம் 3300 W அல்லது 3.3 kW என்று வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் மின்னேற்றம் செய்ய 8 முதல் 10 மணி நேரம் ஆகலாம். இது மெதுவாகத்தான் வேலை செய்யும் என்பதால் முழு இரவு மின்னேற்றம் செய்யத் தோதானது.

15 ஆம்பியர் 3-துளை மின் சாக்கெட் (3-pin electrical plug)

உங்கள் காரிலுள்ள மின்கலத்தை எந்தவொரு 15 ஆம்பியர் 3-துளை மின் சாக்கெட்டிலும் செருகி மின்னேற்றம் செய்யலாம். அதற்கான கம்பி வடத்தையும் கார் வாங்கும்போதே சேர்த்துக் கொடுத்துவிடுகிறார்கள். அந்தக் கம்பி வடத்தின் ஒரு முனையைக் காரின் மின்னேற்றும் சாக்கெட்டில் செருகி மற்றொரு முனையை 15 ஆம்பியர் 3-துளை மின் சாக்கெட்டில் செருகினால் போதும். மின்னேற்றம் தொடங்கியதா என்றும், எத்தனை விழுக்காடு ஏறியிருக்கிறதென்றும், ஓடுதூரத்தையும் காரின் மானிப்பலகையிலேயே (dashboard) பார்க்க முடியும். ஆனால் இது ஒவ்வொரு நாளும் வீட்டில் மின்னேற்றம் செய்யப் பாதுகாப்பான வழிமுறை அல்ல. ஏனெனில் வீடுகளிலுள்ள 15 ஆம்பியர் 3-துளை மின் சாக்கெட்டில் தேவையான பாதுகாப்பு அமைப்புகள் கிடையாது. ஆகவே இம்முறையை வெளியில் செல்லும்போது அவசரத்துக்கு மட்டுமே பயன்படுத்தலாம்.

உள் மின்னேற்றி (On-board charger – OBC) 

மேற்கண்டவாறு 15 ஆம்பியர் 3-துளை மின் சாக்கெட்டில் செருகி மின்னேற்றம் செய்யும்போது மின்னூர்தியிலுள்ள உள் மின்னேற்றியைப் பயன்படுத்துகிறோம். நாம் கொடுப்பதோ மாறுமின் (AC) இணைப்பு. மின்கலத்தில் மின்னேற்றுவதற்குத் தேவையோ நேர்மின்சாரம் (DC). ஊர்திக்குள் வரும் மாறுமின்சாரத்தை நேர்மின்சாரமாக மாற்றி மின்கலத்துக்கு அனுப்பும் வேலையை இந்த உள் மின்னேற்றி செய்கிறது. மின்கலத்துக்குப் பாதுகாப்பாக மின்னோட்டத்தையும், மின்னழுத்தத்தையும் மின்கல மேலாண்மை அமைப்பு (Battery Management System – BMS) கட்டுப்படுத்துகிறது. இதனால் மின்கலத்தின் ஆயுள் குறையாமல் இருக்கும்.

தனிப்பட்ட வீட்டு மின்னேற்றும் சாக்கெட் (dedicated home charging socket)

மின்னூர்தி வாங்கும்போதே பெரும்பாலும் ஒரு தனிப்பட்ட வீட்டு மின்னேற்றும் சாக்கெட்டையும் சேர்த்துக் கொடுத்து விடுகிறார்கள். கார் தயாரிப்பாளரே உங்கள் வீட்டில் கார் நிறுத்துமிடத்தில் சுவரில் பொருத்தி, வீட்டிலிருந்து மின்கம்பி இணைத்துக் கொடுத்து விடவும் கூடும். ஒருக்கால் கார் தயாரிப்பாளர் அப்படித் தராவிட்டால் நீங்களே சந்தையில் வாங்கிப் பொருத்திக் கொள்ளலாம். இது பாதுகாப்பாக மின்னேற்றம் செய்யும் முறை. தவிரவும், இம்மாதிரியான மின்னேற்றும் அமைப்புகளில் மற்றும் பல அம்சங்களும் உண்டு. இவை மின்னேற்றம் பற்றிய தரவுகளைச் சேகரிக்கும். நீங்கள் எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி வரை மின்னேற்றம் செய்யவேண்டுமென்று கால அட்டவணை அமைக்கலாம். இது நீங்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுக்கும். சுவிட்ச் பெட்டியை இரும்புத் தகடால் வலுவாகச் செய்தால் கம்பி வடத்தைப் பாதுகாப்பாகப் பூட்டி வைக்கவும் வசதியாக இருக்கும். மேலும் சுவிட்ச் பெட்டியைப் பெரும்பாலும் கார் நிறுத்துமிடத்தில் வெளிச்சுவரில் நிறுவ வேண்டியிருக்கிறது. ஆகவே இது நீர் புகாமலும் இருக்கவேண்டும். ஆனால் இதுவும் உள்மின்னேற்றியைப் பயன்படுத்தியே மின்னேற்றம் செய்கிறது.

பாதுகாப்பாக வீடுகளில் மின்னேற்றம் செய்யும் முறை

Safe-home-charging

பாதுகாப்பான வீட்டு மின்னேற்ற அமைப்பு

இந்த தனிப்பட்ட வீட்டு மின்னேற்ற அமைப்பில் ஒரு சுவிட்ச்சும், சாக்கெட்டும் தவிர ஒரு RCBO (Residual Current Breaker with Overcurrent Protection) என்ற மின்னிணைப்பு துண்டிப்பானும் (circuit breaker) மிகை மின்னழுத்தப் பாதுகாப்பும் (Power Overvoltage Protection – POP) இருக்கவேண்டும். இது மின்கசிவு (short circuit), மின் அதிர்ச்சியால் (electric shock) ஏற்படும் அளவுக்கு மீறிய சுமை, மிகை மின்னழுத்தம் (over voltage) ஆகியவற்றிற்கு எதிராகப் பாதுகாப்பளிக்கும். 

நன்றி

  1. Nexon EV Home Charging Setup – The Gloves Man

இத்தொடரில் அடுத்த கட்டுரை: வணிக மின்னேற்றிகள்

காரிலுள்ள மின்னேற்ற சாக்கெட். வணிக AC மின்னேற்றம். வணிக DC அதிவேக மின்னேற்றம். மின்னேற்றக் கட்டங்கள் (charging stages).

ashokramach@gmail.com

%d bloggers like this: