இரு சக்கர ஊர்திகளில், கார்கள் போன்று, இரண்டு சக்கரங்களை வேறுபாட்டுப் பல்லிணை (differential) வைத்து ஓட்டவேண்டிய பிரச்சினை கிடையாது. அப்படியிருக்க மோட்டாரிலிருந்து வார்ப்பட்டை (belt) அல்லது பல்லிணை (gear) மூலம்தான் சக்கரத்தைச் சுழற்றவேண்டுமா என்ன? உள்ளேயே மோட்டாரை வைத்து நேரடியாகச் சக்கரத்தைச் சுழற்றலாம் அல்லவா? அதுதான் சக்கர மோட்டார் (wheel or hub motor).
சுற்றகம் (rotor) வெளிப்புறம் இருக்கும்
வழக்கமாக மோட்டார்களில் நிலையகம் (stator) வெளிப்புறம் இருக்கும், சுற்றகம் உட்புறம் இருக்கும். ஆனால் நாம் வெளிப்புறத்திலுள்ள சக்கரத்தைச் சுழற்ற வேண்டுமென்பதால் இவற்றில் சுற்றகம் வெளிப்புறம் இருக்கும். சக்கரத்தை நேரடியாகச் சுழற்றுவதால் பல்லிணை, வார்ப்பட்டை ஆகியவை தேவையில்லை. ஆகவே உராய்வு இழப்பு இல்லாமல் முழு சக்தியும் சக்கரத்துக்குக் கிடைக்கும். மேலும் மோட்டார் சக்கரத்துக்குள்ளேயே இருப்பதால் அதை வைக்க வேறு ஒரு இடத்தை வீணாக்க வேண்டியதில்லை.
ஆனால் இந்த வடிவமைப்பில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அவை யாவை என்று விவரமாகப் பார்ப்போம்.
சக்கரம் போன்ற அதே அதிர்ச்சிகளுக்கும் அழுத்தங்களுக்கும் மோட்டாரும் உள்ளாகிறது
குண்டு குழியான சாலைகளில் செல்லும்போது சக்கரங்கள் அதிர்ச்சிகளுக்கும் (shocks) அழுத்தங்களுக்கும் (stresses) உள்ளாகின்றன. பயணிகளின் வசதிக்காக அதிர்வுத்தாங்கி (shock absorber), பட்டை வில் (leaf spring) போன்றவைகளின் உதவியால் வண்டியின் அடிச்சட்டம் (chassis) இவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. மேலும் அடிச்சட்டத்தில் ரப்பர் தாங்கு உருளைகள் (mount bushings) வைத்து அதன்மேல் பொருத்தப்படுவதால், வண்டியின் பயணிகளைவிட சீரான நிலையில் மோட்டார் பயணிக்கும். ஆனால் சக்கரத்திலேயே மோட்டார் வைத்தால் மோட்டாரும் சக்கரம் போன்ற அதே அதிர்ச்சிகளுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகிறது.
பிரேக்குகளை எங்கு வைப்பது என்பதில் சிக்கல்
இரு சக்கர ஊர்திகளில் பொதுவாக முன் சக்கரத்தில் வட்டு (disc) பிரேக்கும் பின் சக்கரத்திற்குள் உருளை (drum) பிரேக்கும் வைப்பது வழக்கம். மோட்டாரைப் பின் சக்கரத்திற்குள் வைத்து விட்டால் உருளை பிரேக்கை எப்படி வைப்பது என்ற சிக்கல் எழுகிறது. ஆகவே இதை மிகவும் சாமர்த்தியமாக வடிவமைக்க வேண்டி வருகிறது.
சக்கர மோட்டார்கள் அதிவேகமாகச் சுழல்வதில்லை
சக்கர மோட்டார்கள் மிக வேகமாகச் சுழல்வதில்லை. ஏனெனில் பல்லிணை கிடையாது. சக்கர வேகம்தான் மோட்டாரின் வேகமும். மணிக்கு 100 கிமீ வேகத்தில்கூட ஒரு வழக்கமான அளவு சக்கரம் நிமிடத்துக்கு 1000 க்கும் குறைவான வேகத்தில்தான் சுழலும். இருக்கும் முறுக்குவிசைக்கு இந்தக் குறைவான வேகத்தில் மோட்டாரின் திறனும் குறைவாகத்தான் இருக்கும்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: பேருந்து, சரக்குந்து போன்ற வணிக ஊர்திகள்
திறன் பொறித்தொடர் (Powertrain). இரட்டை செருகி மின்னேற்றம் (Dual gun charging). ஓட்டுநர் கண்காணிப்புப் பாதுகாப்பு அமைப்புகள். அச்சுப்போக்கு காந்தப்புலம் (axial flux) மோட்டார்கள்.