சரக்கு மேலாண்மையில் IoT யை கொள்முதல் தொடர் (supply chain) மற்றும் இடைவழியில் கண்காணிக்கவும் (transit tracking) பயன்படுத்தலாம். இங்கு நாம் தொழிற்சாலைக்குள் சரக்கு மேலாண்மை எப்படி செய்வதென்று மட்டும் பார்ப்போம். நாம் முந்தைய இரண்டு கட்டுரைகளில் பார்த்ததுபோல பட்டை மற்றும் கட்டக் குறியீடு (Barcode and QR code) மற்றும் வானலை அடையாளம் (RFID) பயன்படுத்தி சரக்கு மேலாண்மை மென்பொருட்களில் உள்ளீடு செய்வதை எளிதாக்கலாம்.
தொழிற்சாலையில் சரக்கு வகைகள்
தொழிற்சாலைக்குள் இருக்கும் சரக்குகள் கீழ்க்கண்ட விதங்களில் இருக்கலாம்:
- கச்சாப் பொருட்களும் பாகங்களும் (Raw materials and components)
- பாதி தயாரிப்பில் இருக்கும் பொருட்கள் (Work in Progress – WIP)
- விற்கத் தயாரான தயாரிப்புகள் (Finished Goods)
இவற்றில் பாதி தயாரிப்பில் இருக்கும் பொருட்கள் தொழிற்சாலையின் தளத்திலேயே இருக்கும். மற்ற இரண்டும் தொழிற்சாலையின் பண்டகசாலையில் (stores) இருக்கும்.
சரக்கு மேலாண்மையில் பகுப்பாய்வுகள்
ஏ.பி.சி பகுப்பாய்வு (ABC analysis) என்பது இருப்புக் கணக்கு வகைப்படுத்தல் நுட்பமாகும். ஏ.பி.சி பகுப்பாய்வு இருப்புக் கணக்கை மூன்று வகைகளாகப் பிரிக்கின்றது. “ஏ பொருட்கள்” மிக இறுக்கமாக கட்டுப்பாடு மற்றும் சரியான பதிவுகளோடும், “பி பொருட்கள்” நடுத்தரக் கட்டுப்பாடு மற்றும் நல்ல பதிவுகளோடும், “சி பொருட்கள்” சாதாரண கட்டுப்பாடு மற்றும் குறைந்த பதிவுகளோடும் இருக்கும். மெதுவாக நகரும் (slow-moving) மற்றும் பயன்படுத்தாமல் கிடக்கும் (non-moving) சரக்குகளைப் பகுப்பாய்வு செய்து மூல காரணங்களைக் கண்டுபிடிப்பது முக்கியம். இம்மாதிரி பகுப்பாய்வுகள் எல்லாம் செய்ய மென்பொருள் அவசியம் தேவைப்படுகிறது.
இருப்பெடுத்தல் (physical inventory)
ஆண்டுக்கொருமுறை கைவசம் சரக்கு உண்மையிலேயே எவ்வளவு இருக்கிறது என்று கணக்கெடுப்பது வழக்கம். கணக்குப்படி இருப்பு இல்லாத பொருட்களுக்கு மட்டும் கணக்கு எழுத விட்டுப் போய்விட்டதா, இடம் மாற்றி வைத்து விட்டோமா அல்லது திருட்டுப் போய்விட்டதா என்று விளக்கம் கொடுக்க வேண்டும். பிரச்சினையைப் பொருத்து மேலாளர்கள் நடவடிக்கை எடுப்பர். இந்த வேலை உற்பத்தியைப் பாதிக்கும் அளவுக்கு அதிக வேலை வாங்கும். பாகத்தின் அடையாள எண்ணை எவ்வாறு பட்டைக்குறி அல்லது கட்டக்குறி (bar or QR code) மற்றும் வானலை அடையாளம் (RFID) பயன்படுத்தி எளிதாக உள்ளிடலாம் என்று முன்னர் பார்த்தோம். இம்மாதிரி சரக்கு மேலாண்மை மென்பொருளும், IoT யும் பயன்படுத்தி வேலையை வெகுவாகக் குறைக்கலாம்.
MSME சரக்கு மேலாண்மைக்கு திறந்த மூல மென்பொருட்கள்
சரக்கு மேலாண்மைக்கு IoT பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு முன் தேவை மென்பொருள். குறு, சிறு நிறுவனங்களுக்கு கீழ்க்கண்ட திறந்த மூல சரக்கு மேலாண்மை மென்பொருட்களைப் பரிந்துரை செய்கிறோம்.
- இன்வென்ட்ரீ (InvenTree): சரக்கு மேலாண்மை மென்பொருட்கள் பெரும்பாலும் தேவையற்ற பல அம்சங்களைக் கொண்டு எளிதில் கையாள முடியாததாக உள்ளன. இதற்கு மாறாக இன்வென்ட்ரீ சிறியதாகவும் குறு, சிறு நிறுவனங்கள் எளிதில் பயன்படுத்தக் கூடியதாகவும் உள்ளது.
- பார்ட்கீப்பர் (PartKeepr): இந்த சரக்கு மேலாண்மை மென்பொருள் முக்கியமாக மின்னணுவியல் பாகங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: நிறுவனத்தின் சொத்துக்கள் மேலாண்மை
சொத்துக்களின் பயன்படுத்துதல் (utilization) விழுக்காடு. கைக்கருவிகளை யாருக்குக் கொடுத்தோம், எங்கே இருக்கிறது? ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலையும் உள்ளீடு செய்ய வேண்டும். திறந்த மூல சொத்து கண்காணிக்கும் மென்பொருட்கள்.