தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 14. உங்கள் பிள்ளைகளின் கணினி ஐபேடா, ராஸ்ப்பெரி-பையா?

வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்க விரும்புகிறீர்களா?

நான் ஏன் ஐபாட் வாங்க மாட்டேன் என்பதற்கு ஒருவர் கூறுகையில், “உங்கள் குழந்தைகளுக்கு ஐபாட் வாங்குதல் என்பது உலகத்தை அக்கக்காகப் பிரித்து தனக்கேற்ற மாதிரி திரும்பவும் முடுக்கிக் கொள்ளலாம் என்பதை உணர்ந்து கொள்வதற்கான ஒரு வழிமுறை அல்ல. அது பேட்டரி மாற்றவேண்டும் என்றால் கூட வேலை தெரிந்த மற்றவர்களை நம்பி இரு என்று உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித் தரும் வழி.”

முந்தைய தலைமுறையினரைவிட இளைஞர்கள் அதிக தொழில்நுட்பத்துடன் வளர்ந்து வருகின்றனர் என்பது உண்மை. இருப்பினும், அவர்கள் தொழில்நுட்பத்தை ஈடுபாடற்ற நுகர்வோர்களாக பயன்படுத்துகிறார்களா அல்லது ஆர்வமுள்ள உருவாக்குபவர்களாகவா என்பதுதான் முக்கியம்.

ராஸ்ப்பெரி-பை கணினி ஏன் உருவாக்கப்பட்டது?

2006 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறைக்கு விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையும் தகுதியும் குறைந்துவிட்டது. கணினி கண்டுபிடிக்கப்பட்ட நாட்டில் (சார்லஸ் பாபேஜ் என்ற ஒரு ஆங்கில இயந்திரப் பொறியியலாளர்தான் நிரலாக்கம் செய்யக்கூடிய கணினி என்ற கருத்தை தொடங்கிவைத்தவர்), கணினி கற்பவர்கள் மிகவும்  குறைந்து வருவதாக கல்வியாளர்கள் கவலைப்பட்டார்கள். ஆனால் தேவை என்னவென்றால் கணினி அறிவியல் துறைக்கு மேலும் பலரை ஈர்ப்பது மட்டுமல்ல, கல்லூரியில் சேரும் போது அவர்கள் மேலும் பல பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ராஸ்பெர்ரி பை அறக்கட்டளையின் நோக்கம் கணினி அறிவியலை குறிப்பாகப் பள்ளிக்கூடங்களில் ஊக்குவிப்பது மற்றும் கணினியை இளையவர்கள் மீண்டும் விளையாட்டாகக் கற்க வழிசெய்வது. கடன் அட்டை அளவிலான இந்தத் தனிநபர் கணினி ஒரு கடினமான பணியை நிறைவேற்ற வேண்டி உள்ளது: இங்கிலாந்து மாணவர்களிடையே கணினி ஆய்வுகளில் ஆர்வத்தை வளர்த்து, சிறுவர்களுக்கு நிரலாக்கம் கற்பித்தல்.

ராஸ்ப்பெரி-பை கணினி

ராஸ்ப்பெரி-பை கணினி

ராஸ்ப்பெரி-பை கணினி எந்த வகையில் வித்தியாசமானது?

இது இங்கிலாந்தில் ராஸ்பெர்ரி பை அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட உள்ளங்கை அளவிலான கணினியின் உள்பாகம் மட்டும். பள்ளிகளிலும் மற்றும் வளரும் நாடுகளிலும் அடிப்படைக் கணினி அறிவியல் கற்பிப்பதை ஊக்குவிப்பதே இவர்களின் குறிக்கோள். 2018 மார்ச் வரை 19 மில்லியன் எண்ணிக்கை விற்று பிரிட்டன் நாட்டுத் தயாரிப்பிலேயே சிறந்த விற்பனையான கணினி ஆகும்.

தமிழில் ராஸ்பெர்ரி பை பற்றிய அறிமுக காணொளி ஒன்று இங்கே. இந்த 3B என்ற புதிய வெளியீட்டில் கம்பியில்லாத் தொடர்பகம் (Wifi) மற்றும் ஊடலை (bluetooth) புதிய அம்சங்கள். இதில் கம்பி மூலம் இணைய இணைப்புக்கு ஈத்தர்வலை (ethernet) இணைப்பானும் உள்ளது. USB இணைப்பான்களைப் பயன்படுத்தி விசைப்பலகை மற்றும் சுட்டியை இணைக்கலாம். HDMI இணைப்பான் மூலம் ஒரு தொலைக்காட்சியை இணைத்து கணினித்திரையாகப் பயன்படுத்தலாம். ஒலி பெருக்கி இணைக்கவும் இணைப்பான் உண்டு. ஆண்ட்ராய்ட் கைபேசிக்கான மின்னேற்றியின் (charger) சக்தியைப் பயன்படுத்தலாம். பொதுநோக்க உள்ளீடு / வெளியீடு (General Purpose Input / Output – GPIO) மின்செருகிகள் 40 உள்ளன. இவற்றின் வழியாக மின்விளக்கு போன்ற வெளிப்புற சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும் மற்றும் உணர்கருவிகளையும் இணைக்க முடியும். ஒரு ஐபேட் வாங்கும் செலவில் ஏழெட்டு ராஸ்பெர்ரி பை கணினிகளையும் அவற்றுக்கான துணைக்கருவிகளையும் சேர்த்து வாங்கிவிடலாம்.

பல திறந்த மூல இயங்கு தளங்கள் உள்ளன. ராஸ்பெர்ரி பை அறக்கட்டளை பரிந்துரைப்பது டெபியன் லினக்ஸ் சார்ந்த ராஸ்ப்பியன் (Raspbian). இத்துடன் சேர்ந்து வரும் பைத்தான் நிரலாக்க மொழியையும் பரிந்துரைக்கிறார்கள். ஸ்க்ராட்ச் (Scratch) என்னும் நிரலாக்க மொழி வயதில் குறைந்த சிறுவர்களுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் திறன்களை வளர்க்க உதவும். லெகோ (Lego) கட்டுமானத் துண்டுகள் போல அடுக்கிக் கட்டலாம்.

சி-ஸ்டெம் பணியகம் (C-STEM Studio) கணித்தல், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்துடன் தானியங்கியியலையும் (robotics) ஒருங்கிணைந்து கற்க கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் டேவிஸ் உருவாக்கியது, இலவசமாக வழங்கப்படுகிறது. பல இணக்கமான துணைக்கருவிகள், பாகங்கள் இணையத்தில் வாங்க முடியும்

பல திறந்த மூல மென்பொருள் செயலிகள் மற்றும் மென்பொருள் மேம்பாட்டு கருவிகளைப் பதிவிறக்கம் செய்யலாம். இதன் மன்றத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட திட்டங்களைப் பற்றிய தகவலைப் பகிர்ந்துகொள்கிறார்கள் மற்றும் பிரச்சினை வந்தால் கேள்வி கேட்டால் பதில் கிடைக்கும்.

பல நிரலாளர்களும் செயலிகளும் வீட்டைத் தன்னியக்கமாக்கல் (home automation) செய்ய ராஸ்பெர்ரி பையை பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக மின் நுகர்வைக் கண்காணிக்கவும் குறைக்கவும் செலவு மலிவான தீர்வாக ராஸ்பெர்ரி பையை நிரலாக்கம் செய்கிறார்கள். இது மிகவும் விலையுயர்ந்த வணிக மாற்றுகளுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த செலவு என்பதால் ஒரு பிரபலமான மற்றும் சிக்கனமான தீர்வாக ஆகியுள்ளது.

வகுப்பறையில் ராஸ்பெர்ரி பை பயன்படுத்த சில வழிகள்

ராஸ்பெர்ரி பையில் நிரலாக்கம் கற்றுக்கொள்வது எளிது. நான் சமீபத்தில் ஸ்க்ராட்ச் பயன்படுத்தி ஒரு மாணவர்கள் குழுவுக்கு அசைவூட்டமும் மற்றும் பைத்தான் பயன்படுத்தி ஆமை வரைகலை உருவாக்கமும் கற்றுக் கொடுத்தேன். நிரலாக்கம் கற்கத் தொடங்குவதற்குச் சிறந்த வழி பிரைஸன் பெய்ன் (Bryson Payne) எழுதிய “உங்கள் பிள்ளைகளுக்கு நிரலாக்கம் கற்றுக் கொடுங்கள் (Teach Your Kids to Code)” என்ற புத்தகம். குறைந்த நேரத்தில் உங்கள் மாணவர்கள் ராஸ்பெர்ரி பையில் பைத்தான் பயன்படுத்தி அழகான வரைகலைகள் செய்யத் தொடங்குவார்கள். இணையத்தை எளிதாக அணுகுவதற்காக ராஸ்பெர்ரி பை 3 குரோமியம் உலாவியுடன் வருகிறது. ராஸ்பியன் பிக்சல் (Pixel) மேசைத்தளம் நிறுவினால் பிரபலமான விளையாட்டு மைன்கிராப்ட் பை (Minecraft Pi), அத்துடன் சேர்ந்து வருகிறது.”

உங்கள் பிள்ளைகள் வெறும் தொழில்நுட்ப நுகர்வோர்களாக மட்டும் இருந்தால் போதுமா அல்லது படைப்பாளர்களாக வேண்டுமா?

உலகம் முழுவதும் மிகப்பெரும்பாலான சிறுவர்கள் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை சிறந்த திறனுடன் கற்றுக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. பலருக்கு அவர்கள் பயன்படுத்தும் மற்றும் அனுபவிக்கும் சாதனங்கள் ஒரு மர்மமாகவே உள்ளன. இது உண்மையில் மிகவும் வருத்தமாக உள்ளது. ஏனெனில் இன்றைய மாணவர்கள் தொழில்நுட்ப எதிர்காலத்தில் செழித்து இருக்க வேண்டுமென்றால் அவர்கள் அதன் வெவ்வேறு கோணங்களையும் மற்றும் அவை எவ்வாறு வேலை செய்கின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு ஒரு முக்கிய காரணம் கணினியிலும் இணையத்திலும் விளையாடவும், வீடியோவைக் காணவும், இசை கேட்கவும், இணையதளத்தில் குழுவாக ஒத்துழைக்கவும், ஆவணங்கள், படங்கள் மற்றும் திரைப்படங்களைத் திருத்தவும், மற்றும் நீங்கள் எதைச் செய்ய வேண்டுமென்றாலும் ஐபாட் போன்ற அற்புதமான தொழில்நுட்ப சாதனங்கள் சந்தையில் குவிந்து கிடக்கின்றன. இந்த சாதனங்கள் அற்புதமான அனுபவத்தை வழங்கினாலும் இது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அனுபவம். சாதாரண பயனர்கள் சிறப்புக் கருவிகள் இல்லாமல் சாதனங்களைத் திறக்கக் கூட முடியாது. ராஸ்பெர்ரி பை பற்றிய அற்புதமான சங்கதி, எண்ணற்ற பிள்ளைகளுக்கு தங்கள் வானொலியை எவ்வாறு ஒன்று கூட்டுவது மற்றும் மின்னணுவியல் அடிப்படைகளை எப்படிக் கற்றுக்கொள்வது போன்ற கருவிகள் கூட்டுப் பயிற்சிகளை மீண்டும் கொண்டு வருகிறது. ராஸ்பெர்ரி பையின் நிரலாக்கத்தன்மை ஒரு ஊடுருவ இயலாத பளபளப்பான உறை அல்லது சிக்கலான குறியீடுக்குப் பின் மறைக்கப்படவில்லை. பயனர்கள் மாற்றுவதைத் தடுக்கின்ற சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட தனியுரிம மென்பொருட்கள் இதில் ஏற்றப்படவில்லை. மாறாக திறந்த மூல மென்பொருள் மீது அது சார்ந்திருக்கிறது.

நிரலாக்கத்தைக் கட்டாய பாடமாக்கும் முதல் நாடு இங்கிலாந்து ஆகும்

நிரலாக்கத்தைக் கட்டாய பாடமாக ஆக்குவது முக்கியம் என்பதை சில நாடுகள் உணரத் தொடங்கி உள்ளன. இந்த ஆண்டு, 5 வயதிலிருந்து தொடங்கி, 16 வயது வரை தங்கள் பள்ளிகளில் நிரலாக்கத்தைக் கட்டாய பாடமாக்கும் முதல் நாடு இங்கிலாந்து ஆகும்.

லண்டனில் உள்ள உருவாக்குபவர் பல்கலைக்கழகம் பயிற்சி மூலம் கற்றலையும் ஆசிரியர் பயிற்சியையும் சேர்ந்து அளிக்கிறது. ஒரு வலைப்படக்கருவியை (webcam) உருபெருக்கியாக (microscope) மாற்றுவது எப்படி போன்ற சவால்களில் பயிற்சி வழங்குவதன் மூலம் ஆசிரியர்கள் நடைமுறைக் கூறுகளை கைவேலைத் திட்டங்களில் இணைக்க உதவுகிறது.

————————

இத்தொடரில் அடுத்த கட்டுரை: தகவல் தொழில்நுட்ப உதவியுடன் தமிழை எளிதாகக் கற்பிக்கலாம்

திறன் பேசி அல்லது கைக்கணினி உதவியுடன் கற்றல். மொழிப் பயிற்சிக்கு டுவோலிங்கோவும் (Duolingo) மெம்ரைசும் (Memrise) மைண்ட்ஸ்நாக்சும் (Mindsnacks). தமிழ் கற்க மற்ற செயலிகளும் இணைய தளங்களும்.

%d bloggers like this: