க்னு/லினக்ஸ் கற்போம் – 6

Deamon process:

டீமொன் பிராசஸ் என்கின்ற வார்த்தையை நீங்க கேள்விப்படலைன்னா, உங்களுக்கு சுத்தமா யுனிக்ஸ் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியாது என்று நிச்சயமா சொல்லலாம்.

இதைக் கண்டுபிடிச்சது பீட்டர் என்கிற லாப் அஸிஸ்டண்டு என்று யாரோ  சொன்னாங்க. அது சரியா இல்லையான்னு கேட்கக்கூட இப்ப யாரைக் கேக்கறதுன்னு புரியல்லே. அதனால இதை நம்ம மனசுக்குள்ளாற வச்சு பூட்டிருவோம்.

அமெரிக்காவுலே பொதுவா ஒரு நல்ல விஷயம். வார விடுமுறையிலே காரை எடுத்துக்கிட்டு ஜாலியா பொழுது போக்க நேஷனல் பார்க்கு, பீச்சு, என்று வெள்ளிக்கிழமையே கிளம்பிருவாங்க.   நம்ம ஊர் ஆளுங்க மாத்திரம் டீவி முன்னாலயும், குஜராத்தி கடையிலே போயி மல்லி, மொளகா கோதுமை மாவு வாங்கியும்  விடுமுறையக் கழிச்சுடுவாங்க.போகட்டும். இப்போ பீட்டர் கதைக்கு வருவோம்.

பீட்டர் ஒரு வார விடுமுறைக்கு சான்பிராஸ்சிஸ்கோவிலிருந்து அரிசோனாவிலே உள்ள கிராண்டு கேனியன் போனாரு, திருப்பி வரப்போ, ஃப்ளாக் போஸ்டு (Flag post) என்கிற சிறிய ஊர் வழியா வந்தாரு.

அங்கே ஒரு பிரபலமான விஷயம் என்னன்னா, செயற்கையாக  ஒரு ஐஸ்கேட்டிங் செய்வதற்காக ஒரு பிரம்மாண்டமான அமைப்பை உருவாக்கிருக்காங்க. அது வருடத்திற்கு இரண்டுமாதம் தான். அதற்கு மக்கள் கூட்டம் அலை மோதும். வயதானவர்கள் ரத்தம் சிந்த ஆம்புலன்ஸ் தூக்கிச் செல்லும்;சிறுவர், பெண்கள் வாலிபர்கள் என்று எல்லோரும் ஐஸில் சறுக்கி விளையாடுவார்கள்.

அங்கே எல்லா ஊர்களையும் போல நம்ம ஊர் (குஜராத்தி) படேல்கள்தான் மோட்டல்கள் (அவங்க ஊர், பாதையோர ஹோட்டல்கள்) நடத்துவது. கூட்டம் கூடக்கூட ஓட்டலில் இடம் கிடைப்பது அரிதாகிவிடும். அப்போ வாடகையும் விஷம் போல கிடுகிடுவென்று ஏறும்

பீட்டர், பிளாக் போஸ்ட் ஊருக்குள்ளே போயி ஒவ்வொரு ஓட்டலா போறாரு. அங்கே செக்கூரிட்டி ஆளு மாத்திரம் தூங்காம முழிச்சிருக்காரு, வேற யாருமே காணோம். ஒர் ஓட்டல்லே ஒரு ராத்திரிக்கு 200 டாலர் என்கிறார். வேற வழியில்லாமல் பீட்டர் ரூம் எடுக்க சம்மதிக்கிறாரு. உடனே, அவரு போயி சின்னப் பட்டேலை எழுப்புறாரு. படேல் விவரம் எல்லாம் கேட்டு வாங்கி, பதிவு பண்ணி,பைசாவையும் வாங்கி போட்டுக்கிட்டு, ரூம் சாவியைக் கொடுத்திட்டு, தூங்கப் போயிடராரு.

செக்கூரிடி, வேறு ஒரு ஆளை எழுப்புறாரு. அவரு, காரிலேருந்து ஒரு பொட்டிய எடுத்துக் கொண்டு போய் ரூமைத் தொறந்து காட்டிவிட்டு , பீட்டர் கொடுத்த டாலர் நோட்டைப் பையிலே திணிச்சிட்டு தூங்கக் கிளம்பறாரு

பீட்டருக்கு, ஒரே பசி.தின்னுவதற்கு ஏதாச்சும் கிடைக்குமான்னு செக்கூரிட்டியைக் கேட்டா, கிடைக்குமேன்னு சொல்லி, வேறு ஒரு ஆளை எழுப்பறாரு.

அவரு இருக்கறதைச் சொல்லி, பீட்டர் கேட்டதைக் கொடுத்துவிட்டு பில்லைக்  கொடுத்து கிரெடிட் கார்டை தேய்ச்சுட்டு, அவரு தூங்கப் போயிடறாரு.

ஒரு ராத்திரியிலே எல்லோரும் முழிச்சுக்கிடு அவதிப்படாம, எல்லாக் காரியமும் சுத்தமா நடக்குது. எல்லோருக்கும் நிம்மதியான இரவு உறக்கம். பாவம் செக்கூரிட்டிக்கு மாத்திரம் கொடுப்பினை இல்லை.

என்ன செய்ய, கொறச்ச சம்பளம் வாங்கரவங்களுக்குத்தான் அதிக வேலை என்பது உலக நியதி.

சரி, பீட்டர் இதை எப்படி யுனிக்ஸ்லே பயன் படுத்தினாருன்னு கண்டு பிடிக்கணுமே. இப்ப அதை செய்வோம்.

யுனிக்ஸ் கூட ஹோட்டல் மாதிரி, இல்லை… அதை விட மிக மிக பெரிய சேவை மையம்.ஓட்டல்லே பத்து சேவை இருந்தா, யுனிக்ஸ்லே பத்தாயிரம் இருக்கும். அதுனாலேதான் யுனிக்ஸ் ரொம்ப பவர் புல்லா இருக்கு.

எல்லா சர்வீசும் உடனுக்குடன் தரணுமின்னா, எல்லா புரோகிராமுமே ஓடனும். எப்ப எந்த சர்வீஸ் கேட்பாங்க்ன்னு சொல்ல முடியாது.அது சரியில்லே, கஸ்டமரே வராதபோது காப்பி ஆத்திகிட்டு இருந்தா காப்பி, காஸ் எல்லாமே நஷ்டம் இல்லையா.

அதுனால செக்கூரிடிமாதிரி,எப்பவுமே ஒரு சில புரோகிராம் மாத்திரம் ஓடிக்கிட்டே இருக்கும்.

உதாரணமா, புதுசா ஒரு யூசர் ஒரு புரோக்கிராமை ஓட்டணும்னு வந்தா, அவர் யாருன்னு பாத்து, அவரோட யூசர் ஐடி, பாஸ்வேர்டு எல்லாம் சரிபாத்து பிறகுதான் உள்ளே விடணும்,

அதுக்கு ஒரு செக்கூரிட்டி.அப்புறம் இண்டென்னெட் சர்வீஸ் வேணுமின்னு கேக்கிற யூசருக்கு வேணும்கிற சர்வீசைத்தர வேறு ஒரு செக்கூரிட்டி.

செக்கூரிட்டி ஆளைப்போல சில புரோகிராமுங்க கம்ப்யூட்டரை ஆன் பண்ணினதிலேருந்து ஆஃப் பண்றவரைக்கும் உயிர் இருக்கும்.அதாவது ஓடிக்கிட்டுருக்கும்.பாக்கி புரோகிராம் யூசர் கேட்கிறப்போ ஒரே தடவை ஓடிவிட்டு, செத்துடும்.

டீமன் புரோகிராம் மாத்திரம் வரம் வாங்கிட்டு வந்திருக்கு. அதுக்கெல்லாம்  சாவே கிடையாது என்று சொல்லலாம்.கம்ப்யூட்டருக்கு உயிர் உள்ள காலம் முழுவதும் தானும் உயிரோடு இருக்கும்.

இந்த புரொகிராமை இனம் காண்பது எப்படி?  ஃபைலோட வாலிலே d என்ற எழுத்து ஓட்டியிருக்கும்.

உதாரணமா, inetd, இது இண்டெர் நெட் சர்வீஸ் அத்தனைக்கும் ஒரு செக்கூரிட்டி மாதிரி.

செக்கூரிட்டின்னா நம்ம படேல் ஓட்டல் செக்கூரிட்டி, எப்படி ராப்பூர தூங்காமே முழிச்சுக்கிட்டு இருக்காரோ அதேமாதிரி ஒரு செக்கூரிட்டி.

 

யார் வேணுமானாலும் ஒரு புரோகிராமை எழுதி அதை  டீமென் பிராசஸா மத்திடலாம். ஒரு பெரிய வித்தை இல்லை.

இண்டர் நெட்லே, எப்படி ஒரு புரோகிராமை டீமென் புரொகிராமா மாத்தரதுன்னு கண்டுபிடிங்க.

அடுத்த மாதம் வேறு ஒரு பிராசஸைப் பத்தி பாக்கலாம்.

வாசகர்கள் யாருக்கானும் சந்தேகம் வந்திச்சுன்னா ஒரு மெயில் போடுங்க. ஐயா நீ எழுதினது தப்புன்னு யாரானும் நெனைச்சா அவங்களும் எனக்கு ஒரு மெயில் போடலாம்.

ஆனைக்கும் அடி சறுக்கும் என்பாங்க. நான் ஒரு பூனை கூட இல்லை. அதனாலே எனக்கு கட்டாயமா அடி சறுக்கும். தப்பு கண்டு பிடிச்சா உடனே கட்டாயம் மெயில் போடுங்க.

 

 

 

நடராஜன் இவர் ஒரு மின்னணுவியல் அறிஞர். அரசு, தனியார், கல்வி துறைகளில் பெரும் அனுபவம் கொண்டவர். Scientist, Systems Engineer, Development engineer, Manager, General Manager, CEO, Consultant போன்ற பல பதவிகளை வகித்தவர். தனது வலைபதிவுகள் மூலம் தன் கல்வி பணிகளை தொடர்கிறார்.

 

மின்னஞ்சல் : natarajan.naga@gmail.com

வலை பதிவு : science-of-good-living.blogspot.com

 

education-a-pain.blogspot.com

science-of-spirituality.blogspot.com
sprituality-is-knowledge.blogspot.com

%d bloggers like this: