கம்பியில்லாத் தொடர்பு (wireless communication) அமைக்க வைஃபை (WiFi), ஸிக்பீ (ZigBee), ஸிவேவ் (Z-Wave), லோரா (LoRa), புளூடூத் (Bluetooth), குறைசக்தி ப்ளூடூத் (Bluetooth Low Energy) போன்ற பல தொழில்நுட்பங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தொலை தூரம், குறை தூரம், உள்ளரங்கு, வெளிப்புறம் போன்ற வெவ்வேறு IoT தேவைகளுக்குப் பொருத்தமானவை. நமக்கு மின்கலனை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமா, அதிக அளவு தரவுகள் அனுப்பவேண்டுமா அல்லது அதிக தூரம் அனுப்ப வேண்டுமா, எது முக்கியம் என்று முதலில் தீர்மானிக்க வேண்டும். மற்றவைகளை ஓரளவு விட்டுக்கொடுத்து நாம் தொழில் நுட்பத்தைத் தேர்வு செய்யலாம். சந்தையில் எந்தத் தொழில்நுட்ப சாதனங்கள் தாங்கத்தகு விலையில் பரவலாகக் கிடைக்கின்றன என்றும் பார்க்க வேண்டும். உணரிகளிலுள்ள பொத்தான் மின்கலம் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது வேலை செய்ய வேண்டும். ஆகவே தொழில்துறையில் பொருட்களின் இணையத்துக்கு (IIoT), அதிலும் குறிப்பாக உற்பத்திக்கு, நாம் கீழ்க்கண்ட தொழில்நுட்பங்களைக் கருத்தில் கொள்ளலாம்.
கண்ணி பிணையம் (Mesh network)
கம்பியில்லாத் தொடர்பின் ஒரு முக்கிய அம்சம் அந்த வானலையின் வீச்சு (range). நாம் மின்கலத்தின் சக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதால் வீச்சு மிகக் குறைவாகத்தான் இருக்கும். இந்தக் குறைபாட்டை ஈடு செய்ய நாம் கண்ணி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். கண்ணி தொழில்நுட்பத்தில் சில சாதனங்கள் செய்திகளை வாங்கி மேலனுப்பும் (forwarding or repeating) திறன் கொண்டவை. நுழைவாயிலுடன் (gateway) நேரடியாகத் தொடர்பு கொள்ள இயலாத சாதனங்கள் இடையிலுள்ள மேலனுப்பிகள் (repeaters) மூலமாக அனுப்ப இயலும். இம்முறையில் தகவல்களை நெடுந்தூரம் அனுப்புவது மட்டுமல்லாமல் இடையூறுகளைச் சுற்றியும் அனுப்ப முடியும். இருப்பினும், மேலனுப்பியாக செயல்படும் சாதனத்திற்கு அதிக சக்தி தேவைப்படும். ஆகவே மின்கலத்தின் சக்தியில் இயங்கும் சாதனங்கள் இந்த வேலையைச் செய்ய இயலாது. மின்னிணைப்பில் செருகப்பட்டிருக்கும் பெரும்பாலான சாதனங்கள், உணரியாகவோ அல்லது இயக்கியாகவோ தங்கள் வேலையை செய்வது மட்டுமல்லாமல், மேலனுப்பியாகவும் செயல்படக் கூடியவை.
இம்மாதிரி கண்ணியாக இயங்கவல்ல மூன்று குறைசக்தி கம்பியில்லாத் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பற்றி விவரமாகப் பார்ப்போம்.
ஸிக்பீ (Zigbee)
இது இருவழித் தொடர்பு செய்யக்கூடியது. சாதனங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளை உறுதிப்படுத்தும். ஆகவே சாதனங்கள் ஒருபோதும் தங்களுக்கு இட்ட கட்டளைகளை இழப்பதில்லை. இது சாதனங்களை மிகவும் நம்பகமானதாக ஆக்குகிறது. மேலும் தகவல்களை மறையீடு (encryption) செய்ய முடியும். ஆனால் குறைந்த அளவு தரவுகள்தான் அனுப்ப முடியும். அமேசான் நிறுவனமும் ஸிக்பீ தொழில்நுட்பத்தை சில வேலைகளுக்குப் பயன்படுத்துவதால் சாதனங்கள் பரவலாகக் கிடைக்கின்றன.
ஆனால் சில தயாரிப்பாளர்களின் ஸிக்பீ சாதனங்கள் மற்ற தயாரிப்பாளர்களின் ஸிக்பீ சாதனங்களுடன் ஒருங்கிணைந்து வேலை செய்வதில்லை. ஆகவே இவற்றை நன்றாக சோதனை செய்து பார்த்தே வாங்க வேண்டும்.
ஸிவேவ் (Z-Wave)
இதுவும் ஸிக்பீ க்கு இணையான அளவு வீச்சு (range) கொண்டது. ஆனால் ஒரு தயாரிப்பாளரின் அத்தாட்சி பெற்ற ஸிவேவ் சாதனங்கள் மற்றொரு தயாரிப்பாளரின் அத்தாட்சி பெற்ற சாதனங்களுடன் ஒருங்கிணைந்து வேலை செய்யும் என்று உறுதியாகக் கூறலாம்.
ஆனால் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு அலையெண்களைப் பயன்படுத்துகின்றனர். ஆகவே, எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் வாங்கிய சாதனங்களை இந்தியாவில் பயன்படுத்த இயலாது.
கண்ணி ப்ளூடூத் (Bluetooth Mesh)
உங்களிடம் தற்பொழுது இருக்கும் மடிக்கணினி, கைக்கணினி அல்லது திறன்பேசி அனேகமாக ப்ளூடூத் தகவல்தொடர்பு செய்யக்கூடியதாகத்தான் இருக்கும். நல்ல தரமான குறைசக்தி ப்ளூடூத் (Bluetooth Low Energy) சாதனங்கள் வெளி அலைவாங்கி (external antenna) இல்லாமல் சுமார் 90 மீட்டர் நேரடியாகப் பார்க்கக் கூடிய தொலைவும், இடையில் சுவர்கள் இருந்தால் சுமார் 75 மீட்டர் வரையும் செல்லக்கூடியவை. இவையும் நல்ல பாதுகாப்பாகத் தகவலை அனுப்பக் கூடியவை.
நன்றி தெரிவிப்புகள்
இத்தொடரில் அடுத்த கட்டுரை: தகவல் தரவு வரைமுறைகள் (Messaging data protocols)
தகவல் தரவு வரைமுறை MQTT. தகவல் தூது (Message Brokering) அடிப்படைச் சொற்கள். MQTT சேவையின் தரம் (Quality of service – QoS). MQTT வழங்கிகளும் (Servers/Brokers) நுகர்விகளும் (Clients).