AR தொழில்நுட்பம் மெய்நிகர் உருவங்களை நம்முடைய வகுப்பறைக்கே கொண்டுவருகிறது, இதன் விளைவாக, வகுப்புகள் மிகவும் ஊடாடும் அனுபவமாக ஆகின்றன என்று முன்னர் பார்த்தோம். இத்துடன் கலந்த மெய்ம்மையில் (MR) மெய்நிகர் உருவங்களை நகர்த்தவும், கையாளவும் முடியும் என்பதையும் சேர்த்துப் பாருங்கள். இது ஊடாடுதலில் அடுத்த மட்டத்துக்கே நம்மை எடுத்துச் செல்லும்.
தற்போது அனுபவமிக்க பணியாளர்களே பயிற்சியளிக்கின்றனர்
புதிதாக வேலைக்குச் சேர்ந்த பணியாளர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது?
ஏற்கனவே அதே வேலையைப் பல ஆண்டுகள் செய்து அனுபவமிக்க பணியாளர்கள் கற்றுத் தருகிறார்கள். இதற்கு முதலில் வகுப்பறையில் பயிற்சியைத் தொடங்கவேண்டும். பின்னர் பணியிடத்தில் செய்முறையாக செய்து காட்ட வேண்டும். மேலும் பணியிடத்தில் தெளிவு படுத்துதல் மற்றும் தவறுகளைத் திருத்துதல் என்று தொடர்ந்து அவர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும். ஆனால் அனுபவமிக்க பணியாளர்கள் அனைவருமே கற்பிப்பதில் முனைப்பும், தேர்ச்சியும் உள்ளவர்கள் அல்ல. அப்படி இருந்தாலும் அவர்களுடைய நேரம் அதிகம் வீணாவதால் நிறுவனத்துக்கு செலவு அதிகமே.
இன்றைய தலைமுறையோ காணொளி மற்றும் ஊடாடல் முறைப் பயிற்சியையே விரும்புகிறார்கள்
எதையும் கற்றுக்கோள்ள வேண்டுமென்றால் இந்தத் தலைமுறை இணையத்தில் தேடுவதை விட யூடியூப் போன்ற காணொளிகளிலேயே தேட முற்படுகிறார்கள். இம்மாதிரி ஊடாடல் முறைப் பயிற்சிக்கு AR, MR ஆகிய இரண்டுமே உகந்தவைதான். ஆனால் MR முறையில் மெய்நிகர் உருவங்களை தொட்டு, திருப்பி, நகர்த்தி மற்றும் கழட்டியும், மாட்டியும் பார்க்க இயலும்.
வகுப்பறையில் MR உதவக்கூடிய சில வழிகள்
3D உருவங்களைப் பயன்படுத்தி, மாணவர்கள் மெய்நிகர் பொருட்களை தங்கள் ஆய்வுகளுக்குப் பொருத்தமான வகையில் அவற்றை ஆய்வு செய்ய அவற்றுடன் ஊடாடலாம் மற்றும் அவற்றைக் கையாளலாம். முப்பரிமாண மெய்நிகர் பொருளின் அளவு, வடிவம் மற்றும் பிற அம்சங்களை வகுப்பறையில் ஆய்வு செய்வதன் மூலம் மாணவர்கள் அதைப் பற்றி ஆழமான புரிதலைப் பெற முடியும். மேலும் மாணவர்கள் தங்களுக்கு எந்த வழியில் எளிதாகப் புரிகிறதோ அதற்குத் தோதாக தனிப்பயனாக்கிக்கொள்ள (personalize) முடியும்.
மருத்துவப் பயிற்சிக்கு MR
மருத்துவத்தில் உடற்கூறு (anatomy) பயிற்சி முக்கியமானது. அமெரிக்காவில் ஒகையோ மாநிலத்தில் கிளீவ்லேண்ட் நகரிலுள்ள கேஸ் வெஸ்டர்ன் பல்கலையும் கிளீவ்லேண்ட் மருத்துவமனையும் சேர்ந்து ஒரு செயலி உருவாக்கினர். இதைப் பயன்படுத்தி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு இணையத்திலேயே உடற்கூறு கற்பிக்க இயலும். மருத்துவ மாணவர்கள் உடற்கூறியல் கற்க உதவும் இந்தச் செயலி ஏற்கனவே பல விருதுகளைப் பெற்றுள்ளது.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: பொறியியலில் MR
தொலை பழுது பார்க்க உதவி (remote repair guidance). மெய்நிகர் கட்டட சுற்றுப்பயணம் (virtual building tour). பொறியியல் செயல்முறைகளின் பாவனையாக்கல் (simulation). திட்டக் கண்காணிப்பு செயலிகள்.