பொறியியல் செயல்முறைகளின் பாவனையாக்கல் (simulation)
பொறியியல் கல்வி மற்றும் பயிற்சியில் பொறியியல் செயல்முறைகளையும் தயாரிப்புகளையும் பாவனையாக்கல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தமுடியும். பொறியியல் மாணவர்களும் மற்றும் தொழில்துறையில் பயிற்சிப் பொறியாளர்களும் நடைமுறை பணிகளைச் செய்வதற்கான தொழில்நுட்பத்தையும் புதிய தயாரிப்புகள் பற்றியும் கலந்த மெய்ம்மை மூலம் எளிதாகவும் தெளிவாகவும் கற்றுக் கொள்ளலாம்.
மெய்நிகர் கட்டட சுற்றுப்பயணம் (virtual building tour)
கட்டட வடிவமைப்பு முடிந்தவுடன் அதன் சுற்றுச் சூழலில் கலந்த மெய்ம்மையில் (MR) அதை மெய்நிகர் வடிவத்தில் பார்க்கலாம். கட்டட வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள், திட்ட மேலாளர் மற்றும் சேவை வழங்குநர்கள் கட்டடத்தைச் சுற்றிப் பயணம் செய்யலாம். மற்றும் அது கட்டப்பட்டவுடன் அது எப்படி இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்கலாம். அத்தகைய மெய்நிகர் சுற்றுப்பயணம் வடிவமைப்பில் உள்ள பிரச்சினைகளை முன்கூட்டியே அடையாளம் காண வழிவகுக்கிறது. இதனால் செலவு மற்றும் நேரத்தின் அடிப்படையில் பெரும் சேமிப்புக்கு வழிவகுக்கிறது என்று சொல்லத் தேவையில்லை.
தொலைப் பழுது பார்ப்பு உதவி (remote repair guidance)
தொழில்நுட்ப உதவியாளர்கள் பெரும்பாலும் தயாரிப்புகளுக்கு களத்தில் சேவை (field service) செய்கிறார்கள். வழக்கமாக வரும் பிரச்சினைகளை இவர்களே சரிசெய்து விடுவார்கள். ஆனால் சில பிரச்சினைகளை இவர்களால் சரிசெய்ய இயலவில்லையென்றால் பழுதுபார்ப்பை செய்து முடிக்க தாமதமாகும். வாடிக்கையாளருக்கும் திருப்தி இருக்காது, நிறுவனத்துக்கும் நேரமும் பணமும் செலவாகும்.
கலந்த மெய்ம்மை பயன்படுத்தி, அனுபவமிக்க தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். காணொளியில் தயாரிப்பிலுள்ள பிரச்சினையைப் பார்த்து விட்டு உடன் தக்க ஆலோசனை கூற இயலும். தேவைப்பட்டால் தொழில்நுட்ப வல்லுநர்கள் வாடிக்கையாளர்களின் வரலாறு மற்றும் தொழில்நுட்ப ஆவணங்களையும் அணுகலாம். மேலும் படிப்படியான வழிகாட்டுதல்களும் கொடுக்க முடியும்.
நன்றி
இத்துடன் இக்கட்டுரைத் தொடர் முற்றும்!