திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 3. சிறு நிறுவனங்கள் செலவையும் குறைத்து உற்பத்தித் திறனையும் உயர்த்தலாம்!

அது பயன்படுத்த பாதுகாப்பானதா? வேறு என்ன மாற்று இருக்கிறது? அது நிறுவ எளிதானதா?

 

அமன்தீப் புது தில்லியில் உள்ள ஒரு சிறிய ஆடை நிறுவனத்தின் உரிமையாளர். அவருடைய நிறுவனத்தின் தினப்படி வேலைகளை மேலும் திறமையாக செய்வதற்கு சில திறந்த மூல மென்பொருட்களை நான் பரிந்துரை செய்தபோது மேற்கண்ட கேள்விகளைத் தொடுத்தார். தகவல் தொழில்நுட்பத்தில் எந்த ஒரு பின்னணியும் இல்லாத (ஆனால் திறமிக்க வணிக உணர்வு உள்ள) ஒருவருக்கு இக்கேள்விகள் சம்பந்தமுள்ளதாகவும் புத்திசாலித்தனமாகவும் இருந்தன. இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பகிர்ந்து கொள்வதால் அமன்தீப்புக்கு மட்டுமல்ல பரந்த அளவில் சிறு நிறுவன உரிமையாளர்களுக்கு, குறிப்பாக இந்தியாவில், கணிசமாக அச்சம் குறைய உதவும். வளர்வதற்கும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் மேலும், மிக முக்கியமாக, செலவுகளைக் குறைக்கவும் இம்மாதிரி பல நிறுவனங்கள் வழி தேடிக்கொண்டிருக்கின்றன.

 

அமன்தீப் இருக்கும் புது தில்லியிலிருந்து சுமார் 7,500 மைல்கள் தொலைவில் கனடாவில் வாழ்கிறார் நபீல் ஹுசைன். நபீல் ஒரு கான்ராட் வணிகம், தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்ப மையத்தின் (Conrad Business, Entrepreneurship and Technology Centre) பட்டதாரி. உலகின் தலைசிறந்த ஒரு தொழில்முனைவோர் சுற்றுச்சூழலான  வாட்டர்லூவில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஒரு புதிய தயாரிப்பு வளராக்கம் மற்றும் இணைய விற்பனை நிபுணர் ஆவார். ஒரு தொழில்முனைவோராக அவர் எப்போதும் கையிலிருக்கும் குறைந்த வசதிகளை வைத்து தயாரிப்பையோ சேவையையோ வாங்கக்கூடியவர்களிடம் பரவச்செய்யும் சவாலை எதிர்கொண்டுள்ளார். அவர் வசம் பலவகையான தொழில்நுட்பத் தீர்வுகள் உள்ளன மற்றும் எப்படி இந்தத் தீர்வுகளைப் பயன்படுத்துவது என்ற வழிவகைகளும் அவருக்குத்தெரியும். மேலும் அவரது தேவைகளுக்குத் தோதான சிறந்த தீர்வு ஒன்றைத் தேர்வுசெய்ய அவருக்கு வழிகாட்ட ஒரு வலுவான ஆதரவு அமைப்பும் அவருக்குப் பின்னால் உள்ளது. அவரது யோசனைப்படி முன்மாதிரிகளை தயாரித்து வாடிக்கையாளர்களிடம் உறுதிப்படுத்த ஒரு செலவுகுறைந்த மாற்று வழியை திறந்த மூலத் தீர்வுகள் நபீலுக்கு ஆரம்ப கட்டத்தில் அளிக்கின்றன. வேர்ட்பிரஸ் மற்றும் அதன் நீட்சிகளைப் பயன்படுத்தல், ஓபன்ஷிஃப்ட் ஓரிஜின் (OpenShift Origin) மற்றும் ஜூம்லாவில் (Joomla) துணிகரமாய் இறங்குதல், ஆக உயர்மட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இடர்களைக் குறைக்கவும், வளங்களை நிர்வகிக்கவும், வாங்கக்கூடியவர்களிடம் பரவச்செய்யவும் அவருக்குத் திறமை உண்டு.

 

இந்த இரண்டு வேறுபட்ட சூழ்நிலைகளும் திறந்த மூலத் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள தொழில் முனைவோரிடம் உள்ள திறமையின் இடைவெளியைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. வளரும் நாடுகளில் உள்ள தொழில் முனைவோருக்கும் வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களுக்கும் இடையே வணிக அனுபவத்தில்தான் இடைவெளி உள்ளது என்றாலும் பிரச்சினை அதைவிடப் பரவலானது. திறந்த மூலத் தீர்வுகளை பயன்படுத்தும் தொழில் முனைவோருக்கும் அதைப் பயன்படுத்தாதவர்களுக்கும் இடையே உற்பத்தி மற்றும் செயல்திறனில் ஒரு வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. தொழில்நுட்ப வல்லுநர்களான சிறு நிறுவன உரிமையாளர்களையும் அது இல்லாதவர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த நிலைமை மேலும் தெளிவாகும்.

சிறு நிறுவனங்கள்

பொதுவாக வளரும் நாடுகளிலும், குறிப்பாக இந்தியாவிலும், பெரும்பாலான சிறு நிறுவனங்கள் வெளி ஊழியர்கள் இல்லாமல் ஒரு குடும்பத்தினரே நடத்தும் அளவு மிகச் சிறியவை. இம்மாதிரி சிறு நிறுவன உரிமையாளர்களுடன் என் சமீபத்திய உரையாடல்கள் மூலம் நான் திறந்த மூல மென்பொருட்கள் பற்றிய தவறான எண்ணங்களையே பரவலாகப் பார்க்கிறேன் . புது தில்லியில் அமன்தீப் கேட்ட கேள்விகள் மிக முக்கியமானவை. திறந்த மூலத் தீர்வுகளை சிறு நிறுவனங்கள் ஏற்கவேண்டுமானால் இம்மாதிரி தவறான கருத்துகளை தெளிவு செய்வது மேலும் அவசியமாகிறது.

திறந்த மூல மென்பொருள் உண்மையில் பாதுகாப்பானதா?

 

திறந்த மூலக் குறியீடு எழுதும் அடிப்படை செயல்முறையில் இருந்து இந்தக் கேள்வி எழுகிறது. எந்தக் கொந்தரும் (hacker) உங்கள் குறியீட்டைப் படிக்க இயலும் என்றால் பிறகு ஏன் அவர்கள் தங்கள் தீய திட்டங்களுக்காக அதைப் பயன்படுத்த முடியாது? பல ஈடுபாடு மிக்க பங்களிப்பாளர்கள் பிரச்சினைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை உடன் சரிசெய்வதால் இம்மாதிரி தீய முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைகின்றன. பலரும் கண்காணித்து வருவதால் பிழைகள் விரைவில் நீக்கப்படுகின்றன. இருட்டடிப்பினால் பாதுகாப்பு என்பது உண்மையான பாதுகாப்பு அல்ல. பாதுகாப்பு நிபுணர் ப்ரூஸ் ஷ்னேயர் (Bruce Schneier) சொன்னதுதான் இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது, “பகிரங்கமான பாதுகாப்புதான் எப்போதுமே தனியுரிம பாதுகாப்பைவிட சிறந்தது… எங்களுக்கு, திறந்த மூலம் வெறும் வணிக முறை மட்டுமல்ல; அது சிறந்த பொறியியல் தொழிலாற்றல்.”

 

திறந்த மூல பாணியில் குறியீடு செய்வது ஒரு நுட்பம் வெளிப்படுத்தும் வழி ஆகும். நமது உலகில் மென்பொருள் ஒரு தயாரிப்பு பொருளாக மட்டுமே இருப்பதை விட, ஒரு பயனரின் குறிப்பிட்ட தேவைகளை அடிப்படையாக வைத்து விருப்பமைவு செய்யக்கூடிய ஒரு சேவையாக அமைந்திட வேண்டும்.

 

எனக்கு திறந்த மூல திட்டங்களில் பல்வேறு மட்டங்களில் ஈடுபடும் பலரை நன்கு தெரியும். அவர்கள் அனைவரும் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் உன்னத நிலையை அடையவும், மற்றும் இருக்கும் தொழில்நுட்ப அறிவின் எல்லையை விரிவாக்கவும் தங்கள் உறுதிப்பாட்டினால் உந்தப்படுகிறார்கள். முழு திறந்த மூல சுற்றுச்சூழலும் இம்மாதிரி அர்ப்பணிப்பினால் கட்டப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக லினக்ஸ் இயங்குதளம், அதன் நிரூபணமான உறுதிநிலை மற்றும் பாதுகாப்பு வரலாறுகளைக் கொண்டு, உலகம் முழுவதும் மிகச் சிக்கலான உள்கட்டுமானங்கள் மற்றும் தரவு மையங்களுக்கு முதுகெலும்பாக விளங்குகிறது. லினக்ஸ் மற்றும் பிற திறந்த மூலக் கருவிகள் வெற்றி பெற உதவும் அதே பயன்களை சிறு நிறுவனங்களும் அடைய இயலும்.

தனியுரிம மென்பொருளுக்கு தரமான மாற்று உள்ளதா?

 

பொறியாளர்கள் கூடி மற்ற பொறியாளர்களுக்காக மட்டுமே திறந்த மூல மென்பொருள் தயாரித்த நாட்கள் போய்விட்டன. சொல் செயலாக்கம் (word processing) முதல் நாட்காட்டி பயன்பாடுகள், வழங்கிகள் மற்றும் தொலைபேசி தகவல் தொடர்பு வலையமைப்புகள் அமைப்பது வரை சிறு நிறுவனங்களுக்கு திறந்த மூல தீர்வுகள் மிகவும் பயனுள்ளவை. எடுத்துக்காட்டாக சொல் செயலாக்கத்தை எடுத்துக் கொள்வோம். அனேகமாக எல்லா சிறு நிறுவனங்களும், அவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும், சொல் செயலாக்கத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

 

மைக்ரோசாப்ட் வேர்ட் (Microsoft Word) தான் சொல் செயலாக்கத்துக்கு முன்னணி மென்பொருளாக உள்ளது. ஆனால் அதில் அம்சங்கள் மேலும் மேலும் திணிக்கப்படுவதால் அதை எளிதாகப் பயன்படுத்த இயலாது. எளிய இலவச திறந்த மூல சொல் செயலிகள் நிறைய உள்ளன. மைக்ரோசாப்ட் வேர்ட்க்கு மாற்றாக நான் பயன்படுத்தும் (மற்றும் சிறு நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கும்) சொல் செயலிகள் இவை:

 

அபிவேர்ட் (AbiWord): 1998 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த திறந்த மூல சொல் செயலி எளிதாகப் பயன்படுத்தக்கூடியது. இருப்பினும் பன்முகக் காட்சியமைப்பு, பத்திகள், மற்றும் இலக்கணம் சரிபார்த்தல் போன்ற அதிநவீன அம்சங்களையும் உள்ளடக்கியது.

 

லிபர்ஓபிஸ் (LibreOffice): இது எனக்கு மிகவும் பிடித்தது மட்டுமல்லாமல் ஒரு இலவச மற்றும் திறமையான சொல் செயலாக்க தொகுப்பு தேடும் யாருக்கும் என் பரிந்துரை பட்டியலில் முதல் இடத்தில் எப்போதும் உள்ளது. இந்த மென்பொருள் அலுவலகப் பணிகளுக்கான எல்லா கருவிகளையும் கொண்டது. அதாவது சொல் செயலி, விரிதாள், பல்லூடக விளக்கக்காட்சி, 3D கூடிய விளக்கப்படங்கள் வரைவி, தரவுதளம், மற்றும் கணித சமன்பாடுகள் உருவாக்கும் கருவி. மேலும் பயனர்களுக்கு ஆதரவு தருவதில் லிபர்ஓபிஸ் சமூகம் முன் நிலையில் உள்ளது.

 

ஆக விலையுயர்ந்த தனியுரிம மென்பொருட்களுக்கு சிறந்த மாற்றாக சிறு நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான திறந்த மூல திட்டங்கள் உள்ளன. சில நேரங்களில் குறிப்பிட்ட தேவைகளுக்கு சிறந்த மென்பொருள் தேர்வு செய்வது கடினமாக இருக்கும். ஆனால் நீங்கள் அந்த முடிவுகளை எடுக்க உதவி செய்து, ஒரு திறந்த மற்றும் உற்பத்தித் திறனுள்ள எதிர்கால பாதைக்கு வழிகாட்ட, திறந்த மூல ஆர்வலர்கள் உலகளவில் தயாராக நிறைய உள்ளனர்.

பயனர் கேள்வி பதில்

 

கேள்வி: ஷேர்பாயிண்ட் (Sharepoint) , எக்ஸ்சேஞ்ச் (Exchange), சீக்வல் சர்வர் (SQL Server), விண்டோஸ் சர்வர் (Windows Server), ஏஎஸ்பி  (ASP) முதலியவற்றுக்கு மாற்று உள்ளதா? சிறு நிறுவனங்கள் இம்மாதிரி மென் பொருட்களுக்கு எக்கசக்கமாக செலவு செய்கிறார்களே!

 

பதில்: நீங்கள் ஷேர்பாயிண்ட்-ல் பயன்படுத்தும் அம்சங்களைப் பொறுத்து ட்ரூபல் (Drupal), ஈசி பப்ளிஷ் (eZ Publish) போன்ற திறந்த மூல இணைய உள்ளடக்க மேலாண்மை அமைப்புகள் சில கூட பயன்படுத்த முடியும். பல இடங்களில் சீக்வல் சர்வர் (SQL Server) அல்லது ஆரக்கிளுக்கு (Oracle) பதிலாக போஸ்ட்கிரஸ் க்யூ எல் (PostgreSQL) பயன்படுத்த முடியும். அந்த வழங்கியில் குறிப்பிட்ட விண்டோஸ் மென்பொருள் பயன்படுத்தவில்லை என்றால், விண்டோஸ் சர்வர்-க்கு பதிலாக உபுண்டு (Ubuntu) மற்றும் பிற லினக்ஸ் பதிப்புகள் பயன்படுத்த முடியும். அல்லது முக்கியமான பணிகளுக்கு நிறுவன ஆதரவு தேவையென்றால் Red Hat-ன் RHEL லினக்ஸ் பயன்படுத்தலாம்.

 

ஒரு தனியுரிம ஆவண மேலாண்மை அமைப்புக்கு (Document Management System DMS) பதிலாக ஆல்ஃப்ரெஸ்கோ (Alfresco), நிறுவன சேவை பாட்டைக்கு (Enterprise Service Bus) ஒரு திறந்த மூல தீர்வாக மியூல்சாப்ட் (Mulesoft) இருக்க முடியும். எக்ஸ்சேஞ்ச் (Exchange)-க்கு பதிலாக ஸிம்ப்ரா (Zimbra) போன்ற அஞ்சல் வழங்கி அல்லது ஸராஃபா (Zarafa) போன்ற  குழு மென்பொருள் இருக்க முடியும். நிறுவன மேலாண்மைக்கு ஓடூ (Odoo) மற்றும் திட்ட மேலாண்மைக்கு ப்ராஜக்ட்லிபர் (ProjectLibre) பயன்படுத்தலாம்.

 

திறந்த மூல மென்பொருள் பயன்படுத்தி உடன் வேலையை ஆரம்பிக்க ஒரு சிறந்த வழி டர்ன்கீ லினக்ஸ் (TurnKey Linux). ட்ரூபல் (Drupal), வேர்ட்பிரஸ் (WordPress), கோப்புச் சேவையகம் (File server) போன்ற நூறுக்கும் மேற்பட்ட வழங்கிகளை சிறு நிறுவனங்கள் எளிதாக நிறுவ ஆயத்த தயாரிப்புகள் இவை.

Aseem Sharma

மூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றி: அஸீம் ஷர்மா (Aseem Sharma) கனடாவிலுள்ள வாட்டர்லூ (Waterloo) பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடமான கான்ராட் (Conrad) வணிகம், தொழில் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் பட்டதாரி ஆவார். அவர் இந்தியாவில் பஞ்சாப் மாநில குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தில் கணினிகள் பயன்பாடு முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். Opensource.com-ல் அவர் ஒரு ஆசிரியராக பணியாற்றுகிறார். அவர் aseemsharma.info/ -ல் வலைப்பதிவும் செய்கிறார்.

மூலம்: opensource.com  தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்

%d bloggers like this: