நாம் முழுத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன் குறைந்த செலவில் கருத்துருவை நிரூபிக்க (proof-of-concept) முடிந்தால் நல்லது. இதற்கு வன்பொருட்கள் குறைந்த விலையில் இருக்க வேண்டும். மேலும் மற்றவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வு காண்கிறார்கள் என்று தெரிந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மன்றங்களில் நாம் கேள்வி கேட்டால் பதில் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதற்குத் தோதான சில திறந்த வன்பொருட்களைக் (open hardware) கீழே பார்ப்போம்.
அர்டுயினோ (Arduino) நுண்செயலி
கூடிய அம்சங்கள் இல்லாமல் அடிப்படை நுண்செயலி உங்களுக்குத் தேவை என்றால் குறைந்த செலவில் அர்டுயினோ நானோ (Arduino Nano) வைப் பயன்படுத்தலாம். நடுத்தர விலையில் நடுத்தர அம்சங்களைக் கொண்டவை அர்டுயினோ MKR நுண்செயலிகள்.
சமீபத்தில் சிறு நிறுவனங்களின் IoT க்கு என்றே போர்டென்டா (Portenta) H7 என்ற நல்ல திறன் கொண்ட நுண்செயலியை அதிக விலையில் வெளியிட்டுள்ளார்கள். மற்ற அர்டுயினோக்கள் பெரும்பாலும் சோதனைகள் செய்யவும் பயிற்சி பெறவும் உருவாக்கப்பட்டவை. ஆனால் இதில் திறந்த மூல எம்பெட் (mbed) இயங்குதளம் நிறுவி உற்பத்திக்கும் பயன்படுத்த முடியும். ஏற்கனவே இருந்த ஒருங்கிணைந்த நிரலாக்க சூழல் – ஒருநி (IDE) மேம்படுத்தப்பட்டு உயர்திறன் (Pro) வெளியீடாக வந்துள்ளது. தொழில்நெறிஞர்கள் மிகத் துரிதமாக வேலை செய்வதற்கு கட்டளை வரி இடைமுகமும் (command line interface – CLI) வெளியிட்டுள்ளார்கள்.
கையடக்கக் கணினி ராஸ்பை (Raspberry Pi)
அர்டுயினோ போல் நுண்செயலி அல்லாமல் இது ஒரு முழுக் கையடக்கக் கணினி. ராஸ்பியன் என்ற லினக்ஸ் இயங்குதளம் இதற்காகவே உருவாக்கப்பட்டது. ராஸ்பைக்குப் பல பயனர்கள் ஆர்வத்துடன் பங்களிக்கும் மன்றங்கள் உள்ளன மற்றும் பயிற்சிகளும், நூல்களும் பரவலாகக் கிடைக்கின்றன.
கையடக்கக் கணினி பீகிள்போர்ட் (BeagleBoard)
இந்த ஒற்றை-மின்சுற்றுப்பலகைக் கணினி (single-board computer) டெக்ஸாஸ் இனஸ்ட்ருமென்ட்ஸ் (Texas Instruments) நிறுவனத்தின் தலைமையில் திறந்த வன்பொருளாக (open hardware) வெளியிடப்படுகிறது. இதன் முக்கிய குறிக்கோள் IoT, ஆகவே இதற்கான பல அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இதைப்பற்றி செழிப்பான கலந்துரையாடல் குழுக்கள், தொடக்கப் பயிற்சிகள், குழு அரட்டை ஆகியவை உள்ளன. மற்றும் பல நூல்களும் கிடைக்கின்றன.
ஸ்பார்க்ஃபன் (SparkFun) மற்றும் ஏடாஃப்ரூட் (Adafruit)
இவை தவிர ஸ்பார்க்ஃபன் மற்றும் ஏடாஃப்ரூட் போன்ற மற்றத் திறந்த வன்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களும் சந்தையில் உள்ளன.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: தரக் கட்டுப்பாடும் (Quality Control) தர உறுதியும் (Quality Assurance)
தரப் பிரச்சினை வந்தவுடன் திருத்தம் செய்தல். தரப் பிரச்சினை வருமுன் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தல்.