திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 11. சிறுவர்களுக்கான நான்கு லினக்ஸ் வினியோகங்கள்

ஒரு அலைப்பேசியை ஆராயும்போதும் அல்லது தொலைக்காட்சியை அதன் தொலை இயக்கி மூலம் கையாளும்போதும் அல்லது வேறு எந்த மின்னணு சாதனத்தையும் ஆக்கபூர்வமாக அழிக்கும் வகையில் கழட்டிப் பார்க்கும்போதும் என் ஆறு வயது மருமகள் ஷுச்சி (Shuchi)-யின் கண்களில் ஆர்வத்தின் ஒளிர்வை என்னால் காண முடிகிறது. அவள் வயதுடைய பல குழந்தைகள் போல, அவளுக்கு பரிசோதனை செய்வது மிகவும் பிடிக்கும்.

எனது மடிக்கணினி அல்லது தனது தந்தையின் மடிக்கணினி முன் அமரும்போது அவளுடைய இந்த ஆர்வம் அதன் உச்ச கட்டத்தை அடைகிறது. எனினும், பெரியவர்களுக்கு மட்டுமே பொருத்தமான சிக்கலான செயலிகளில் அவளுக்கு குழப்பமாகி விடுவதை என்னால் பல சமயங்களில் பார்க்க முடிகிறது. பெரியவர்கள் பயன்படுத்தும் இயக்குதளங்களும் அவை வேலை செய்யும் விதமும் குழந்தைகளுக்கு, தங்களால் சமாளிக்க இயலாத, ஒரு விலங்கு போலத் தெரியக்கூடும். இந்த செயலிகள் மிக இளம் குழந்தைகளின் அறிவுக்கு அப்பாற்பட்டவை மற்றும் ஒரு சிறந்த (மற்றும் விளையாட்டுத்தனமான) அறிமுகத்தை கணினிகளுக்கு வழங்குவதில்லை. மேலும், பெரியவர்களுக்கான மடிக்கணினிகள் மற்றும் கைக்கணினிகள் கணினி உலகில் அடி எடுத்து வைக்கும் சிறுவர்களுக்கான நல்ல கல்வி சூழலைத் தருவதில்லை. தவிர, இணைப்பிலுள்ள ஒரு கணினியில் ஒரு குழந்தை மேற்பார்வையில்லாமல் விருப்பம்போல் இருப்பது பெற்றோர்களுக்கும் அச்சுறுத்தலாகவே இருக்கும்.

ஒரு பெரிய குழந்தையும், இப்போது நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு திறந்த மூல மென்பொருள் ஆர்வலரும் ஆகிய நான், பல்வேறு மென்பொருள் தீர்வுகள் தேடலையும், பரிசோதனை செய்வதையும் விரும்புகிறேன். என் இளம் மருமகளுக்கு ஒரு சிறந்த அமைப்பைத் தேடி அமைக்க வழி தேடியபோது, திறந்த மூல லினக்ஸ் சமூகத்தால் குழந்தைகளுக்கு சிறப்பான இயக்குதளங்கள் மற்றும் சூழல்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று நான் கண்டறிந்தேன். மேலும், இந்த அமைப்புகளை நிறுவுவதும் மிக எளிது.

ஏன் குழந்தைகள் லினக்ஸ் கற்றுக்கொள்ள வேண்டும்

குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே லினக்ஸ்-ன் சக்தியை தெரியப்படுத்த வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு, என் வாழ்க்கையில் இந்த கட்டத்தில், நான் வந்துவிட்டேன். இதற்கான காரணங்களில் இரண்டு…

கணினியியலின் எதிர்காலத்துக்கு

நான் சமீபத்தில் “வெஸ்ட்கிளிஃப் (Westcliff) உயர்நிலைப் பள்ளியில் லினக்ஸ் மேசைக் கணினி ஒரு ஆண்டு” என்ற ஸ்டூ ஜார்விஸ்-ன் கட்டுரை படித்தேன்.  இதில் மால்கம் மூர் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது கூறினார், “ஒரு கணக்கெடுப்பு படி 2000-ல் 97%  கணினி சாதனங்களில் விண்டோஸ் நிறுவப்பட்டிருந்தது. ஆனால் இப்போது 2013-ல், கைக்கணினிகள் மற்றும் அலைப்பேசிகள் போன்றவை பெருமளவில் வந்தபின் விண்டோஸ் 20% கணினி சாதனங்களில் மட்டுமேயுள்ளது. மேலும் வழங்கி போன்ற திறன்மிகு கணினி உலகில் லினக்ஸ் தான் உச்ச நிலையில் ஆட்சி புரிகின்றது. நாம் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் நிபுணத்துவம் பெறுகின்றோம். மற்றும் நம் மாணவர்கள் அடுத்த கூகிளைத் தொடங்குவது அல்லது செர்ன் (CERN) இல் பிரபஞ்சத்தைக் குறுக்குவது போன்ற பெரிய விஷயங்களைச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம். இந்த சூழல்களில், அவர்கள் நிச்சயமாக லினக்ஸ் தெரிந்து கொள்ள வேண்டும்.”

உலகின் சில மிகச் சிக்கலான உள்கட்டுமானங்களை லினக்ஸ் இயக்குகிறது. தொழில்நுட்பத்தை சிறிதளவாவது ஒரு வாழ்க்கை ஆர்வமாகக் கொண்ட எவரும் லினக்ஸ் கற்பது ஒரு நிச்சயமான முன்வாய்ப்பாக இருக்கும். அது தவிர, பாரெங்கிலும் பெருமளவில் லினக்ஸ் ஏற்கப்படுகிறது. கீழ்கண்டவற்றை கருத்தில் கொள்ளுங்கள்:

  • சர்வதேச விண்வெளி நிலையங்களுக்கு லினக்ஸ் சக்தி தருகிறது
  • டெஸ்லா, காடிலாக் போன்ற புதிய கார்களின் தொழில்நுட்பத்துக்கு லினக்ஸ் சக்தி தருகிறது
  • விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு லினக்ஸ் சக்தி தருகிறது
  • கூகுள், பேஸ்புக், ட்விட்டர்  அனைத்தும் லினக்ஸ் பயன்பாடு செய்கின்றன
  • உலகில் 10 மீக்கணினிகளில் (supercomputers) 9 லினக்ஸ்-ல் இயங்குகின்றன

“ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணினி” போன்ற முயற்சிகளில் லினக்ஸ் சார்ந்த அமைப்புகள் பயன்படுத்த நியாயமான காரணம் உள்ளது. இன்று எண்ணியல் இடைவெளியைக் குறைக்க செயல்பட்டுவரும் மிகவும் சக்தி வாய்ந்த திட்டங்களில் ஒன்று இது என்பது என் கருத்து.

விருப்பமைவு செய்யவும் மற்றும் பல்வேறு தேர்வுகள் பெறவும்

சிறந்த ஆய்வை ஊக்குவிக்கும் ஒரு சூழலில்தான் சிறு வயதிலேயே கற்றலை மேம்படுத்த முடியும். குறிப்பிட்ட தேவைகளை அடிப்படையாக வைத்து விருப்பமைவு செய்ய லினக்ஸ் போன்ற சுய உரிமையும் பல்வேறு தேர்வுகளும் கொண்ட இயக்குதளம் வேறு எதுவும் இல்லை. குழந்தைகளுக்கான பொம்மைகள் மற்றும் துணிகள் போன்று அவர்களுக்கு ஒரு கேளிக்கையாக கற்கும் சூழலை வழங்க முடியும் என்று குறிப்பிட்ட இயக்குதளங்களை லினக்ஸ் சமுதாயங்கள் உருவாக்கியுள்ளன. குழந்தைகளின் ஆர்வத்தை அதிகரிக்க அவர்களுக்கு வியப்புறும் ஒரு உணர்வு கொடுப்பது முக்கியம் என்று நான்  நம்புகிறேன்.

குழந்தைகளுக்கு லினக்ஸ் கற்பிக்க உதவும் மென்பொருட்கள்

லினக்ஸ் சமூகத்தால் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள சூழல்களில் பல வகைகள் உள்ளன. நான் இன்னும் அவைகள் அனைத்தையும் ஆராயவில்லை. ஆனால், உங்களுக்குத் தெரிந்த ஒரு குழந்தைக்கு நீங்கள் லினக்ஸ் மற்றும் கணினி பற்றி கற்பிப்பதற்கு, நான் ஆராய்ந்த சிலவற்றில் ஒரு நல்ல தீர்வு காண முடியும்.

கிமோ (Qimo)

www.qimo4kids.com/

கிமோ குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒரு உபுண்டு அடிப்படையிலான விநியோகம் ஆகும். இந்த இயக்குதளம் 3 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுமுள்ள குழந்தைகளுக்கான கல்வி செயலிகள் நிறைய முன் நிறுவப்பட்டு வருகிறது. அது 3 வயது முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான ஜிகாம்ப்ரிஸ் (GCompris) என்ற ஒரு உன்னதமான தொகுப்புடன் வருகிறது. இதில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கல்வி விளையாட்டுகள் மூலம் அடிப்படை கணினி பயன்பாடு, வாசித்தல், கலை வரலாறு, நேரம் சொல்லுதல் மற்றும் படங்களை வரைதல் கற்றுக்கொள்ள இயலும். மேலும் “குழந்தைகளின் விளையாட்டு” என்ற நினைவகம்-கட்டும் விளையாட்டுகள் தொகுப்பும் இதில் உள்ளது.

எக்ஸ்எஃப்சிஇ (XFCE) காரியத்தளம் இந்த விநியோகத்தில் எனக்கு மிகவும் பிடித்த சங்கதி. இந்த இலகுரக காரியத்தளத்தை எந்த பழைய கணினியிலும் நிறுவ முடியும். குறைந்த அளவே வன்பொருள் தேவை என்பதால் பழைய மடிக்கணினி அல்லது மேசைக் கணினியை இந்த செயலிக்கு எளிதாக மாற்றியமைக்க இயலும். எங்கள் வீட்டில் ஒரு பழைய மேசைக் கணினி பயன்படுத்த இயலாமல் இருந்தது. கிமோ அதற்கு புத்துயிர் கொடுத்தது. இந்த இயக்குதளத்தையே என் மருமகளுக்குத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் இதில் எளிய, சிறுவருக்குப் பிடித்த கேலிச்சித்திர காரியத்தளமும் மற்றும் கல்வி செயலி வகையறாக்களும் இருந்தன.

சுகர் (Sugar)

www.sugarlabs.org/

“ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணினி” திட்டத்துக்காக சுகர் வடிவமைக்கப்பட்டது. இது பயன்படுத்த எளிதான மற்றும் குழந்தைகளுக்கு ஒத்த இயக்குதளம். படிக்கவோ எழுதவோ இன்னும் தெரியாது என்றாலும், துருவி ஆராய்தலில் நாட்டம் கொண்ட குழந்தைகள், இந்த சூழலை எப்படிப் பயன்படுத்துவதென்று விரைவில் கண்டு கொள்வார்கள்.

சுகர் ஆய்வகத்திலிருந்து:

தகவல் என்பது பெயர்ச்சொற்கள் பற்றியது; கற்றல் என்பது வினைச்சொற்கள் பற்றியது. சுகர் இடைமுகம் வழக்கமான கணினி காரியத்தள உருவகத்திலிருந்து மிகவும் வித்தியாசமானது. அறியும் ஆற்றல் மற்றும் சமூக ஆக்கப்பூர்வ நாட்டம் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு பயனர் இடைமுகத்தை உருவாக்கும் முதல் தீவிர முயற்சி இதுவாகும். கற்பவர்கள் உண்மையான ஆய்வு மற்றும் இணைவு ஆக்கத்தில் ஈடுபட வேண்டும். இது நாம் மனிதர்கள் என்பதைப் பற்றிய மூன்று மிக எளிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.

உபர்மிக்ஸ் (Ubermix)

www.ubermix.org/

உபர்மிக்ஸ் பள்ளிகளில் விரிவாகப் பயன்படுத்தப்படுகிறது. மென்பொருட்களையும் பயனர் தரவுகளையும் சேமித்து வைக்க வெவ்வேறு தடுப்புகள் வைத்து இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே கணினி செயல்பாட்டில் ஒருக்கால் பிழை வந்தால், இயக்குதளத்தை முற்றிலும் அழித்து விட்டு விரைவில் புதிய பிரதியை மீட்டெடுக்க முடியும். உபர்மிக்ஸ் நிறுவனர் ஜிம் க்ளைன் (Jim Klein), Opensource.com பேட்டியிலிருந்து:

கல்வி, உற்பத்தித் திறன், வடிவமைப்பு, நிரலாக்கம், இணையம், மற்றும் பல்லூடக கட்டுமான செயலிகள் பல முன் ஏற்றப்பட்டு உபர்மிக்ஸ் வருகிறது. செலஸ்டியா (Celestia) முப்பரிமாண விண்வெளி, ஸ்டெல்லேரியம் (Stellarium) கோளரங்கம், ஸ்கிராட்ச் (Scratch) குழந்தைகளுக்கான நிரல் மொழி, வெர்ச்சுவல் லேப் (VirtualLab) உருபெருக்கி, ஜியோஜீப்ரா (Geogebra) கணிதம், இக்நூய்ட் (iGNUit) மனப்பாட உதவி, மற்றும் க்ளாவாரோ (Klavaro) தட்டச்சு போன்ற கல்வி சார்ந்த செயலிகளும், இவை தவிர டக்ஸ்மேத் (TuxMath) கணிதம், டக்ஸ்டைப்பிங் (TuxTyping) தட்டச்சு, ஜிமல்ட் (gMult) பெருக்கல் புதிர், மற்றும் நம்டி (Numpty) இயற்பியல் போன்ற கல்வி விளையாட்டுகளும் குழந்தைகள் எளிதாகக் கற்றுக்கொள்ள மிகுந்த வாய்ப்பளிக்கின்றன.

 

பயர்பாக்ஸ் (Firefox) உலாவி, தண்டர்பேர்ட் (Thunderbird) மின்னஞ்சல், குரோம் (Chrome) உலாவி, கூகிள் எர்த் (Google Earth) புவியியல் வரைபடம், மற்றும் ஸ்கைப் (Skype) காணொளி அரட்டை போன்ற நம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் பிடித்த இணைய செயலிகள் அனைத்தும் உள்ளன. லிபர்ஓபிஸ் (LibreOffice) அலுவலகம், நைட்ரோ டாஸ்க்ஸ் (NitroTasks) பணி மேலாண்மை, பிளானர் (Planner) திட்ட மேலாண்மை, விம் (View Your Mind – VYM) மனநிலை வரைவு, மற்றும் ஸிம் (Zim) காரியத்தள விக்கி போன்ற பொதுவான உற்பத்தித் திறன் செயலிகள் கூட உள்ளன. வடிவமைப்பில் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு கிம்ப் (GIMP) பரவு வரைகலை, இங்க்ஸ்கேப் (Inkscape) திசையன் படவரைவு, ஸ்க்ரிபஸ் (Scribus) மேசைப் பதிப்பு, தியா (Dia) விளக்க வரைபடம், அகேவ் (Agave) வண்ணத் தேர்வி மற்றும் டக்ஸ்பெயின்ட் (TuxPaint) சிறுவர்களுக்கான வரைகலை தொகுப்பி இருக்கின்றன. மற்றும் ஆடாசிட்டி (Audacity) ஒலித் தொகுப்பி, ஓபன்ஷாட் (Openshot) ஒளித் தொகுப்பி, பென்சில் (Pencil) அசைவூட்டம், மற்றும் எஃப்எஃப் டயாபோராமா (ffDiaporama) திரைப்படத் தலைப்பிடல் போன்ற ஊடக செயலிகளும் உள்ளன. இவையும் மற்றும் பல செயலிகளும் உபர்மிக்ஸ்-ஐ மாணவர் படைப்பாற்றலுக்கும் கற்பதற்கும் ஒரு சக்திவாய்ந்த ஏவுதளமாக ஆக்குகின்றன.

எடுபுண்டு (Edubuntu)

www.edubuntu.org/

உபுண்டுவின் கல்வி பதிப்பான எடுபுண்டு பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இது கல்வித் திட்டங்களும் மற்றும் பொருத்தமான கற்றல் சூழலும் கொண்டுள்ளது. இதில் ஒரு முக்கிய நன்மை உபுண்டுவின் மென்பொருள் களஞ்சியத்துக்கு அணுகல் உள்ளது. இந்த இயக்குதளத்தை கல்வித்துறை சமூகம், விரிவாக தங்கள் மாணவர்களுக்கு ஒரு செறிவூட்டப்பட்ட கற்றல் சூழலை வழங்க, பள்ளிகளிலும் மற்றும் நிறுவனங்களிலும் பயன்படுத்தி உள்ளது. இது கொஞ்சம் பெரிய சிறுவர்களுக்கு லினக்ஸ் பற்றி கற்றுக் கொடுக்க ஒரு நல்ல இயக்குதளம். கிமோ மற்றும் சுகர் உடன் ஒப்பிடுகையில் இதைக் கற்றுக் கொள்வது கொஞ்சம் கடினமே.

Aseem Sharma

மூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றி: அஸீம் ஷர்மா (Aseem Sharma) கனடாவிலுள்ள வாட்டர்லூ (Waterloo) பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடமான கான்ராட் (Conrad) வணிகம், தொழில் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் பட்டதாரி ஆவார். அவர் இந்தியாவில் பஞ்சாப் மாநில குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தில் கணினிகள் பயன்பாடு முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். Opensource.com-ல் அவர் ஒரு ஆசிரியராக பணியாற்றுகிறார். அவர் aseemsharma.info/ -ல் வலைப்பதிவும் செய்கிறார்.

மூலம்: opensource.com  தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்

%d bloggers like this: