எளிய தமிழில் 3D Printing 7. ஒளித் திண்மமாக்கல் (photo-solidification)

பொருள்சேர் உற்பத்திக்கு பலவிதமான செயல்முறைகள் உள்ளன. பாகங்களை உருவாக்க அடுக்குகள் கட்டும் விதத்திலும், பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களிலும்தான் இவை முக்கியமாக வேறுபடுகின்றன. ஒரு இயந்திரத்தை நாம் தேர்ந்தெடுப்பதில் முக்கிய காரணங்கள் அதன் வேகம், அதன் விலை, பாகத்தை  அச்சிட ஆகும் செலவு, எம்மாதிரிப் பொருட்களில் அச்சிட இயலும் ஆகியவையே. இழையை உருக்கிப் புனைதல் தவிர மற்ற சில செயல்முறைகளைப் பற்றிப் பார்ப்போம்.

ஒளி பட்டால் திண்மமாகும் நெகிழி (photopolymers) திரவங்கள்

ஒளி பட்டால் திண்மமாகும் நெகிழி (photopolymers) திரவங்கள் உள்ளன. இம்மாதிரி திரவங்களில் நமக்குத் தேவையான வடிவில் ஒளியைப்  பாய்ச்சலாம். இதன் மூலம் நமக்குத் தேவையான முப்பரிமாண பாகம் மட்டுமே திண்மமாகிவிடும். முப்பரிமாண அச்சிடல் (stereolithography) எண்ணிம ஒளி செயல்படுத்தல் (Digital Light Processing – DLP) ஆகியவை இவ்வகையில் அடங்கும். 

அதாவது  ஒருவித பிசின் அல்லது திரவத்தில் புற ஊதா ஒளிக் (ultraviolet light) கற்றைகளைத் தேவையான அடர்த்தியில் பாய்ச்சும்போது புற ஊதா ஒளி பட்ட இடம் மட்டும் திடப்பொருளாக மாற்றம் அடையும். இம்மாதிரிப் பொருட்களை ஒளிக் கூருணர்வு (photo-sensitive) என்று சொல்கிறோம். இந்தப் பண்பை வைத்து நமக்குத் தேவையான முப்பரிமாண வடிவத்தை உருவாக்குமாறு தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இத் தொழில்நுட்பம் ஒளித் திண்மமாக்கல் (photo-solidification அல்லது Stereolithography – SLA) என்று அழைக்கப்படுகிறது. இதையே ஒளிப்புனைவு (optical fabrication) அல்லது பிசின் அச்சிடல் (resin printing) என்றும் சொல்கிறார்கள்.

ஒளி ஊடுருவும் அடிப்பகுதி கொண்ட தொட்டி

ஒளித் திண்மமாக்கல்

ஒளித் திண்மமாக்கல்

இதற்கு ஒரு ஒளி ஊடுருவும் அடிப்பகுதி கொண்ட தொட்டியைப் பயன்படுத்துகிறோம். தொட்டியின் கீழ் வழியாக புற ஊதாக் கதிர் (Ultra-violet rays) அல்லது கருநீல சீரொளியை (deep-blue laser) மேல்நோக்கி அடிப்பதன் மூலம் பொருட்களை கீழே இருந்து அச்சிட முடியும். அச்சிடத் தொடங்கும்போது பிசின் நிரப்பப்பட்டத் தொட்டியின் அடிப்பகுதியைத் தொடுமாறு உருவாக்கும் மேடையை கீழ்நோக்கி நகர்த்துகிறோம். பின்னர் ஒரு அடுக்கின் உயரத்துக்கு மேல்நோக்கி நகர்த்துகிறோம். பின்னர் தொட்டியின் ஒளி ஊடுருவும் அடிப்பகுதி வழியாக சீரொளி விரும்பிய பாகத்தின் அடிப்பக்க அடுக்கை எழுதுகிறது.

பின்னர் தொட்டியை ஒரு அடுக்கு அளவு மேலே தூக்குகிறோம். திண்மமான அடுக்கு உருவாக்கும் மேடையுடன் ஒட்டிக்கொண்டு மேலே நகரும். புதிய திரவம் இடைவெளியில் பாயும். சீரொளி அடுத்த அடுக்கை எழுதி செயல்முறையை மீண்டும் தொடர்கிறது.  

LCD மறைத்தல் அல்லது DLP திரைப்படக்கருவி

ஒளித் திண்மமாக்கலின் மற்ற செயல்முறைகள் LCD மறைத்தல் (LCD masking) அல்லது DLP திரைப்படக்கருவி (DLP projector) பயன்படுத்தி ஒவ்வொரு அடுக்கையும் உருவாக்குகின்றன. 

நன்றி

  1. Schematic representation of Stereolithography – by Paolo Cignoni – Wikipedia

இத்தொடரில் அடுத்த கட்டுரை: சீரொளி சிட்டங்கட்டல் (laser sintering)

சீரொளி தேர்வு சிட்டங்கட்டல் (selective laser sintering – SLS). சீரொளி நேரடி உலோக சிட்டங்கட்டல் (Direct Metal Laser Sintering – DMLS).

ashokramach@gmail.com

%d bloggers like this: