மெதுவாக நகரும் போது ஊர்திகளைத் திருப்ப அதிக முயற்சி போட வேண்டும் என்பது கண்கூடாகத் தெரிந்ததே. திறன் திருப்பல் (Power steering) என்பது ஒரு மோட்டார் ஊர்தியின் திருப்பு வளையத்தைத் (steering wheel) திருப்புவதற்கு ஓட்டுநரின் முயற்சியைக் குறைப்பதற்கான ஒரு அமைப்பாகும். இது திருப்பும் முயற்சியைக் குறைப்பதற்கு இயந்திர சக்தியின் உதவியை அளிக்கிறது. ஆகவே இதைத் திறன் உதவித் திருப்பல் (Power assisted steering) என்று சொல்வதே சரியாக இருக்கும். இது ஊர்தி நின்று கொண்டிருக்கும்போதும், மெதுவாக நகரும் போதும், ஓடும்போதும் சக்கரங்களைத் திருப்புவதற்குத் தேவையான கைகளின் முயற்சியைக் கணிசமாகக் குறைக்கிறது.
நீரழுத்த திறன் திருப்பல் (Hydraulic Power Steering – HPS)
தேவைப்படும் போது நீரழுத்தத்தை உருவாக்கும் சுழல் பம்பு உதவியுடன் நீரழுத்தத் திறன் திருப்பல் வேலை செய்கிறது. திருப்பு வளையத்தைத் திருப்பியவுடன், சுழல் பம்பு சுழன்று அழுத்தத்தை உருவாக்குகிறது. இந்த திரவம் நீரழுத்த உருளைக்குள் நுழைந்து திருப்பல் பல்லிணைக்கு திறன் வழங்கப்படுகிறது. இந்த விசையின் விளைவாக திருப்பு வளையம் எளிதாகத் திரும்புகிறது. திருப்பு வளையத்தில் ஓட்டுநர் கொடுக்கவேண்டிய முயற்சியைக் குறைக்கிறது.
மின் திறன் திருப்பல் (Electric Power Steering – EPS)
நீரழுத்த அமைப்புகளுக்குப் பதிலாக மின்பொறிகளைப் பயன்படுத்தி மின் திறன் திருப்பல் வேலை செய்கிறது. மின் விசைத்திருப்பல் நீரழுத்த திறன் திருப்பலுடன் ஒப்பிடும்போது குறைவான பாகங்களைப் பயன்படுத்துகிறது. மேலும் நீரழுத்த விசைத்திருப்பலில் சுழல் பம்பு எந்நேரமும் ஓடிக் கொண்டிருக்கும். ஆகவே எரிபொருள் கொஞ்சம் வீணாகும். ஆனால் மின் விசைத்திருப்பல் மின்பொறி தேவைப்படும் போது மட்டுமே சக்தியைப் பயன்படுத்தும். இதனால் மின் திறன் திருப்பல் நீரழுத்த திறன் திருப்பலை விட அதிக எரிபொருள் திறன் கொண்டது.
போகும் பக்கம் திரும்பும் முகப்பு விளக்குகள் (Corner bending lights)
சாலை வளைவுகளிலும், மலைகளின் கொண்டை ஊசி வளைவுகளிலும் (hairpin bends) இரவு நேரங்களில் ஊர்தியைத் திருப்பும்போது நாம் போக வேண்டிய சாலை ஓரளவுதான் தெரியும். ஊர்தி திரும்பிய பின்னரே முழுவதும் தெரியவரும். ஊர்தித் திருப்பு வளையம் (steering wheel) திரும்புவதற்கேற்ப முகப்பு விளக்கும் திரும்பி வெளிச்சம் தரும் அமைப்பு எந்த வித இடையூறுமின்றி திரும்ப ஏதுவாக இருக்கும். இதனால் இரவு நேரங்களில் சாலை வளைவுகளில் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: சீர்வேகக் கட்டுப்பாடு
பழைய சீர்வேகக் கட்டுப்பாடு இயங்குமுறை. முழு மின்னணு (fully electronic) சீர்வேகக் கட்டுப்பாடு. தகவமைச் சீர்வேகக் கட்டுப்பாடு (Adaptive Cruise Control – ACC).