input() என்பதன் முன்பு name = என்று கொடுத்து இருந்திருக்கிறீர்கள். ஆனால், print() என்பதன் முன் எதையுமே கொடுக்கவில்லை ஏன்? என்னும் கேள்வியுடன் முந்தைய பதிவை முடித்திருந்தேன். இந்தப் பதிவு புரிய முந்தைய பதிவின் முன்னோட்டம் தேவையான ஒன்று. இன்னும் நீங்கள் அதைப் படிக்கவில்லை என்றால், கொஞ்சம் படித்து விட்டு இந்தப் பதிவைத் தொடருங்களேன்.
கேள்வி இது தான்!
name = input(“What is your name? “)
print(“Welcome”, name, “Vanakkam”)
என்பதில் name = என்பது எதைக் குறிக்கிறது? இதற்கான விடையைத் தேடுவதற்கு, பைத்தானைக் கொஞ்சம் விலக்கி வைப்போம். நம்முடைய அன்றாட வாழ்க்கையைக் கொஞ்சம் சிந்திப்போம். நம்முடைய வாழ்க்கையில் நாளும் பல செயல்களை நாம் செய்கிறோம். தூங்குகிறோம், விளையாடுகிறோம், கடைக்குப் போய்ப் பொருட்கள் வாங்குகிறோம், இப்படிப் பல செயல்களைச் சொல்லலாம்.
இந்த வேலைகளில் சில வேலைகளில் நமக்கு வெளியீடாக ஏதாவது ஒரு பொருள் கிடைக்கும். சான்றுக்கு, நீங்கள் சமைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சமையலின் வெளியீடாக உணவு கிடைக்கும். ஆனால், நாம் செய்யும் எல்லா வேலைகளுக்கும் இப்படிப்பட்ட வெளியீடுகள் கிடைக்கும் என்று சொல்லி விட முடியுமா? பொழுது போகவில்லை என்று நண்பர்களுடன் கொஞ்ச நேரம் அரட்டை அடிக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அரட்டை அடித்தல் என்னும் வேலையின் வெளியீடு என்ன? ஒன்றுமில்லை அல்லவா!
இப்படியாக, நாம் செய்யும் சில வேலைகளில் வெளியீடு கிடைக்கும், சில வேலைகளுக்கு வெளியீடு கிடைக்காது. எந்த வேலைகளில் வெளியீடு கிடைக்கிறதோ, அவ்வெளியீடுகளை எதிர்காலத்திற்குத் தேவைப்பட்டால் நாம் சேமித்து வைப்போம் அல்லவா? (உணவை எடுத்து, பாத்திரத்தில் வைப்பது போல)
அப்படித்தான், input() என்னும் செயல்கூற்றிலும் நடந்திருக்கிறது. input(“What is your name? “) என்று கேட்டதும் நாம் என்ன உள்ளீடு கொடுக்கிறோமோ அது, name என்னும் பெயரில் பைத்தானில் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்பட்ட பெயரை, print() செயல்கூற்றிற்கு உள்ளீடாகக் கொடுத்து அச்சிட்டுப் பார்க்கிறோம் (print என்றால் அச்சிடுவது தானே!)
இப்போது, செயல்கூடி(Function) என்றால் என்ன, அதற்கு உள்ளீடு(Input) கொடுப்பது எப்படி, வெளியீட்டைச் (output) சேமிப்பது எப்படி என்பதெல்லாம் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
இப்போதைக்கு, input(), print() என்று ஏற்கெனவே பைத்தானில் இருக்கும் செயல்கூறுகளைப் (Built In Functions) பார்த்திருக்கிறோம். இப்போது ஒரு கேள்வி! இதே போலச் செயல்கூறுகளை நாமும் நம் விருப்பப்படி உருவாக்க முடியுமா? உருவாக்க முடிய வேண்டுமா? முடியும், வேண்டும் என்பது தான் விடை! ஆனால், இப்போதே வேண்டாம். இன்னும் கொஞ்சம் பதிவுகளுக்குப் பிறகு அவற்றைத் தனியே பார்ப்போம்.
மாறிகள் அறிவோமா?
இரண்டு எண்களை num1, num2 என்று இரண்டு ‘மாறி‘களில் சேமித்து வைத்துக் கொள்வோம். அதென்ன திடீரென ‘மாறி‘ என்கிறீர்கள்? ‘மாறி‘ என்றால் என்னவென்று சொல்லவே இல்லையே! என்கிறீர்களா! நீங்கள் கேட்பது சரிதான்!
இதற்கு முன்பு input() செயல்கூற்றில் name என்று ஒரு பெயரில் நாம் கொடுத்த பெயரைப் பதிந்து வைத்தோம் அல்லவா! அந்த name தான் மாறி!
ஒருவரிடம் போய் உங்கள் வயது என்ன என்று கேட்கிறோம். இருபது என்று அவர் சொல்கிறார் என்றால்,
age = 20
என்று பதிந்து வைத்துக் கொள்ளலாம். இப்போது பைத்தானைக் கூப்பிட்டு,
print(age) என்று சொன்னீர்கள் என்றால், age என்னும் மாறியில் இருக்கும் 20ஐ அச்சிட்டுக் கொடுக்கும். இந்த ஆண்டு, இருபதாக இருக்கும் அவர் வயது, போன ஆண்டு – பத்தொன்பதாகவும், அடுத்த ஆண்டு – இருபத்து ஒன்றாகவும் மாறி மாறி இருந்திருக்கும் அல்லவா! அதனால் தான் age என்பதை மாறி(Variable) என்று சொல்கிறோம். [ஆங்கிலத்தில் Variable, Reference Variable, Identifier என்று பல்வேறு சொற்களில் சொல்வார்கள். எப்படிச் சொன்னாலும் மாறி என்று புரிந்து கொண்டால் போதும்.]
இந்த மாறிகளில் நாம் என்ன வேண்டுமானாலும் பதிந்து வைத்துக் கொள்ளலாம். ஒருவரின் விவரங்களை வாங்கிப் பைத்தானிடம் கொடுத்துச் சேமித்து வைக்கச் சொல்வோமா?
name = ‘Perarivalan’
age = 50
height = 5.2
indian = True
இங்கே, name என்பதன் எதிரில் மட்டும் மேற்கோள் குறிகள் கொடுத்து (”) பதிந்திருக்கிறோம் பார்த்தீர்களா? வார்த்தைகளைப் பதிந்து வைக்கும் போது, இப்படி ஒற்றை மேற்கோள் குறியோ, இரட்டை மேற்கோள் குறியோ (” அல்லது “”) கொடுத்துப் பதிய வேண்டும்.
indian என்னும் மாறிக்கு நேரே True என்று கொடுத்திருக்கிறோம். அதில் T ஐப் பெரிய எழுத்தாகக்(capital letter) கொடுத்திருக்கிறோம் பார்த்தீர்களா? True / False ஐ இப்படிப் பெரிய எழுத்தாகக் கொடுப்பது பைத்தானின் மரபு.
இப்படிக் கொடுத்திருப்பதை அச்சிட்டுப் பார்க்க விரும்பினால்,
print(name)
print(age)
print(height)
print(indian)
என்று கொடுக்கலாம். சரி, ஒரு வீட்டுப்பாடம் கொடுக்கட்டுமா? மேல் உள்ள மாறிகள் நான்கையும் அவற்றை அச்சிடும் நான்கு வரிகளையும் சேர்த்து, third.py என்னும் பைத்தான் நிரலில் சேமித்து வெளியீட்டைப் பார்க்க வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? செய்து முடியுங்கள். அடுத்த பதிவில் பார்க்கலாம்.
– கி. முத்துராமலிங்கம், பயிலகம்