பைத்தான் படிக்கலாம் வாங்க! 9 – செயல்கூறு ஆராய்வோம்!

செயல்கூறு என்றால் என்னவென்று பார்ப்போம் என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா?

செயல் என்றால் என்ன? ஏதாவது ஒரு வேலையைச் செய்வது! அதே தான் செயல்கூறும்! ஒருவரைக் கூப்பிட்டு, சாப்பிடு என்று சொல்கிறோம். சாப்பிட அவர் என்னென்ன செய்வார்?

சாப்பிடுதல்:
1. தட்டு / இலை எடுப்பார்.
2. சோற்றை அதில் வைப்பார்.
3. கறி / குழம்பு சேர்ப்பார்.
4. குழப்பி உண்பார்.
5. கையைக் கழுவுவார்.

இவ்வளவு செயல்களும் சாப்பிடுதல் என்னும் ஒற்றைச் சொல்லுக்குள் அடங்கி விடுகிறது அல்லவா! இங்கே, சாப்பிடுதல் என்பது தான் செயல்கூறு. பல செயல்களைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் சாப்பிடுதல் என்பதைத் தான் செயல்கூறு என்கிறோம். செயல்கூறு என்பதை ஆங்கிலத்தில் Function (செயல்பாடு) என்று சொல்வார்கள். பைத்தானில் Function என்றோ Method என்றோ சொல்வார்கள். சில நிரல் மொழிகளில் செயல்கூற்றை Method என்றும் வேறு சில மொழிகளில் procedure என்றும் சொல்வார்கள்.

சாப்பிடுதல் என்பதைப் போல, எழுதுதல் (எழுதுகோல் எடுத்தல், தாள் எடுத்தல், எழுதத் தொடங்குதல்), படித்தல்(புத்தகம் எடுத்தல், திறத்தல், வாசித்தல்) என நாம் செய்யும் பல செயல்கூறுகளைச் சொல்ல முடியும். நீங்களும் ஒரு தாளையும் எழுதுகோலையும் எடுத்து, உங்களுக்குத் தெரிந்த சில செயற்கூறுகளை எழுதிப் பாருங்களேன்.

இப்படிப்பட்ட இரண்டு செயல்கூறுகளைத் தான் முந்தைய பதிவில் பார்த்தோம் – input(), print() ஆகியவையே அவை! input() என்பதன் பின்னால் பல்வேறு செயல்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். print() என்பதன் பின்னாலும் பல்வேறு செயல்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். input() என்றால் இந்த வேலையைச் செய்ய வேண்டும், print() என்றால் இந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று பைத்தானுக்கு எப்படித் தெரியும்? இந்தச் செயல்கூறுகள் மட்டுமல்ல, இதே போலப் பல செயல்கூறுகளைப் பைத்தானில் பொதிந்து வைத்திருக்கிறார்கள். பைத்தான் நம்முடைய கணினியில் நிறுவப்பட்ட போதே அந்தச் செயல்கூறுகளைப் பைத்தான் தெரிந்து வைத்திருக்கும்.

input(), print() ஆகியவற்றைப் பைத்தான் தெரிந்து வைத்திருக்கும், சரி! input, print ஆகியவற்றின் பின்னால் சேர்க்கப்படும் அடைப்புக்குறி() எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். ஒரு வேலையைச் செய்கிறோம் என்றால், அந்த வேலைக்கு உள்ளீடு தேவைப்படும் அல்லவா? ‘கடைக்குப் போய் தேங்காய் வாங்கி வா’ என்கிறார் அப்பா. தேங்காய் வாங்குதல் என்பது இங்கு செயல்கூறு. அந்தத் தேங்காய்க்கு அவர் கொடுக்கும் காசு தான், இந்தச் செயல்கூற்றிற்கான உள்ளீடு. இதைப் பைத்தானில் எப்படி எழுத வேண்டும்?

தேங்காய்_வாங்கு(20)
என்று எழுத வேண்டும். இங்கு 20 என்பது தேங்காய்_வாங்கு என்னும் செயல்கூற்றைச் செய்யப் பயன்படும் உள்ளீடு. இதே போல, வேறு சில செயல்கூறுகளை உள்ளீட்டுடன் எழுதுகிறேன். உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா என்று பாருங்கள்.

வாசி(செய்தித்தாள்)
எழுது(தாள், எழுதுகோல்) – ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீடுகளை இப்படி எழுதலாம்.
அருந்து(பழச்சாறு)
கணினியைத்_தொடங்கு(மின்சாரம்)

இப்போது, பைத்தானில் நாம் பயன்படுத்திய இரண்டு செயல்கூறுகளை மீண்டும் எழுதுவோம், எழுதிப் புரிந்து கொள்ள முயல்வோம் வாருங்கள்.

name = input(“What is your name?”)

print(“Welcome “, name, “Vanakkam”)

இங்கு input() என்பதற்கு உள்ளீடாக, “What is your name?” என்று கொடுத்தால், அது அப்படியே அச்சிட்டுக் காட்டப்படும். அப்போது நாம் என்ன தட்டச்சிடுகிறோமோ, அது name என்பதில் சேமித்து வைக்கப்படும். print() என்னும் செயல்கூறு, “Welcome “, name, “Vanakkam” ஆகியவற்றை உள்ளீடுகளாக எடுத்துக் கொள்ளும். அவற்றை எடுத்துக் கொண்டு, அச்சிட்டு(print)க் கொடுக்கும். இரட்டை மேற்கோள் குறிக்குள் கொடுக்கப்படும் வார்த்தைகள் அப்படியே அச்சிடப்படும். இரட்டை மேற்கோள் குறி இல்லை (இங்கே name) எனில் அதில் சேமிக்கப்பட்டிருக்கும் (நீங்கள் தட்டச்சிட்ட) பெயர் அச்சிடப்படும்.

இப்போது ஓர் ஐயம்! input() என்பதன் முன்பு name = என்று கொடுத்து இருந்திருக்கிறீர்கள். ஆனால், print() என்பதன் முன் எதையுமே கொடுக்கவில்லை ஏன்? இந்த ஐயம் உங்களுக்கு இருந்தால் நீங்களும் என் தோழரே! தொடர்ந்து பேசுவோம், புரிந்து கொள்வோம் தோழர்!

– கி. முத்துராமலிங்கம், பயிலகம்

%d bloggers like this: