பைத்தான் படிக்கலாம் வாங்க – 18 – யார், எத்தனை தோசை சாப்பிட்டார்கள்??

முந்தைய பதிவில் வியனின் அப்பா, அவனுடைய அறிவைப் பார்த்து வியந்தார் என்று சொன்னேன் அல்லவா! அதற்குக் காரணம் இருக்கிறது.

முதலில் வியன் என்ன கேட்கிறான்? இன்னும் பத்து நாட்கள் பள்ளிக்கூடம் போக வேண்டும்; ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் எனப் பத்து நாளும் தாருங்கள் எனக் கேட்கிறான்.


மொத்தச்_செலவு = 0 #முதல் நாள் 5 ரூபாய் கொடுப்பதற்கு முன்
நாள் = 1 #முதல் நாள்
பணம் = 5 # முதல் நாள் கொடுக்கும் பணம்
while நாள்<=10: # பத்து நாள் வரை
மொத்தச்_செலவு = மொத்தச்_செலவு + பணம்
நாள்+=1 #ஒவ்வொரு நாளாகக் கூடும்
else:
print(மொத்தச்_செலவு)

இப்படிக் கொடுத்தால் கடைசியில் 50 ரூபாய் செலவாகியிருக்கும். பத்தே நாளில் ஐம்பது ரூபாயைத் தின்பண்டத்திற்குக் கொடுக்கவா என அப்பா யோசிக்கும் போதே, ‘அப்படியானால் முதல் நாள் ஒரு ரூபாய், இரண்டாவது நாள் இரண்டு ரூபாய், மூன்றாவது நாள் மூன்று ரூபாய்’ எனக் கேட்கிறான் வியன். கேட்பதற்கு ஏதோ குறைவான தொகை தானே கேட்கிறான் எனத் தோன்றினாலும் கணக்குப் போட்டுப் பார்த்தால் கூட வருவது தெரியும். பார்ப்போமா?


மொத்தச்_செலவு = 0 #முதல் நாளுக்கு முன்
நாள் = 1
while நாள்<=10:
மொத்தச்_செலவு = மொத்தச்_செலவு + நாள்#எந்த நாளோ அவ்வளவு பணம்
நாள்+=1
else:
print(மொத்தச்_செலவு)

இப்படிப் பார்க்கும் போது தான், மொத்தச் செலவு ஐம்பத்து ஐந்து ரூபாய் வருகிறது எனத் தெரியும். இதைத் தான் வியனின் அப்பா முதலிலேயே கணித்தார்.

வீட்டுப்பாடம்:
மேல் உள்ள இரண்டு நிரல்களுக்கும் பாய்வுப் படம்(Flow chart) வரைந்து பாருங்கள்.

யார், எத்தனை தோசை சாப்பிட்டார்கள்?

யாழினி, குழலி, நிறைமதி மூவரும் நண்பர்கள். கடும் உழைப்பாளிகள். மூவரும் வேலை முடித்து இரவு வர நேரம் ஆகிவிடும். முதலில் வீட்டில் சமைத்துச் சாப்பிட்டார்கள். ஆனால் வேலைப்பளு காரணமாகச் சமைக்க முடிவதில்லை. சரி, உணவகத்தில் சாப்பிடலாம் எனச் சாப்பிடத் தொடங்கினார்கள். ஆனால் தொடரும் கேஸ் விலை காரணமாக உணவகங்களும் விலையை ஏற்றத் தொடங்கியிருந்தார்கள். அவர்களும் என்ன தான் செய்வார்கள்? இரண்டு ஆண்டுகளில் இரண்டு மடங்கு விலையை உயர்த்தியிருக்கிறது அரசு.[பார்க்க: iocl.com/Indane-19Kg-Previous-Price]

அரசு சிலிண்டர் விலையை உயர்த்த, கடைக்காரர்கள் கட்டுப்படி ஆகாமல் பொருள் விலையை உயர்த்த, கடினமாக உழைத்து இப்படி வீணாய்ப் போகிறதே என்று அங்கலாய்த்துக் கொண்டார்கள் யாழினி, குழலி, நிறைமதி மூவரும். ‘சரி! இனி என்ன ஆனாலும் சரி, வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுவோம், அது தான் உடலுக்கும் நல்லது, பர்சுக்கும் நல்லது’ என்று முடிவெடுத்துக் கொண்டார்கள். ஆனால், மூவரும் வேலைக்குப் போவதால் ஒழுங்காகச் சமைக்க முடியவில்லை. பக்கத்தில் இருந்த சமையல்காரர் ஒருவரை பணியமர்த்திக் கொண்டார்கள்.

ஒருநாள் இரவு, சமையல்காரர், நிறைய தோசைகளை ஊற்றி ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து விட்டுக் கிளம்பி விட்டார். வேலை முடித்து வீட்டுக்கு வந்த யாழினி, குழலி, நிறைமதி மூவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். அப்போது தான் அவர்களுக்குத் தெரிய வந்தது – நம் வீட்டில் ஒரே ஒரு தட்டுத் தான் இருக்கிறது என்று! சரி, ஒவ்வொருவராகச் சாப்பிடுவோம் என முடிவெடுத்துக் கொண்டார்கள்.

முதலில் யாழினி சாப்பிடத் தொடங்கினாள். பாத்திரத்தில் இருந்த தோசைகளில் மூன்றில் ஒரு பங்குத் தோசையைச் சாப்பிட்டு விட்டு, மீதியை இருவருக்கும் வைத்து விட்டுப் போனாள். அடுத்து குழலி, சாப்பிட வந்தாள். அப்போது இருந்த தோசைகளில் மூன்றில் ஒரு பங்கை அவள் சாப்பிட்டு முடித்தாள். கடைசியாக நிறைமதி வந்தாள். பாத்திரத்தில் தோசைகளைப் பார்த்த நிறைமதி, தன் பங்குக்கு அங்கிருந்த தோசைகளில் மூன்றில் ஒரு பங்கைத் தின்று முடித்தாள். இப்படியே மூவரும் சாப்பிட்டு உறங்கி விட்டார்கள்.

மறுநாள் காலை, சமையல்காரர் வழக்கம் போல வந்து சமைக்கத் தொடங்கினார். ‘நேற்றிரவு தோசை ஊற்றி வைத்திருந்தோமே, மூவரும் சாப்பிட்டார்களா?’ எனப் பாத்திரத்தைத் திறந்து பார்த்தார். அங்கே எட்டுத் தோசைகள் மீதி இருந்தன. மூவரிடமும் போய்த் தோசை சாப்பிட்டீர்களா எனக் கேட்டார். மூவரும் தத்தம் கணக்கைச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன கணக்கில் இருந்து, கணக்கில் கெட்டிக்காரரான சமையல்காரர் ஒவ்வொருவரும் எத்தனைத் தோசைகள் சாப்பிட்டார்கள் எனக் கண்டுபிடித்து விட்டார். உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்களேன். அதையே அடுத்த பைத்தான் நிரலாகச் செய்து பார்ப்போம்!

– கி. முத்துராமலிங்கம், பயிலகம், சென்னை.

%d bloggers like this: