பைத்தான் படிக்கலாம் வாங்க – 23 – தெனாலிராமன் – கிடைத்ததில் சம பங்கு

தெனாலிராமன் கதைகள் படிக்காத குழந்தைகள் கிடையாது. அறிவுக்கூர்மைக்கும் சில நேரங்களில் சேட்டைக்கும் தெனாலிராமனைச் சொல்வார்கள். கிருஷ்ண தேவராயரின் அவையில் விகடகவியாக இருந்த தெனாலிராமன், மன்னர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பல நேரங்களில் நகைச்சுவையாகச் சொல்வதில் வல்லவர். மன்னருக்குச் சரியான அறிவுரை சொல்பவர்கள் இல்லை என்றால் அவர்கள் நிறைய தவறுகள் செய்யத் தொடங்கி விடுவார்கள் அல்லவா?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் (448)

என்கிறார் திருவள்ளுவர். எவ்வளவு தான் சிறந்த அரசராக இருந்தாலும் குறையை உணர்த்துவோர் இல்லை என்றால் அந்த அரசு (மன்னர்) தானாகவே கெட்டுப் போகும் என்பது இதன் அர்த்தம்.
தெனாலிராமனும் இப்படிப் பல நேரங்களில் மன்னரின் குறைகளை உணர்த்தியவர்.

அமைதிப்படை‘ படத்தில் சத்தியராஜ், ஒரு ஜோசியரைச் சுட்டுக் கொல்லும் காட்சி வரும். அது தெனாலிராமன் கதைகளில் வருவது தான்! [படிக்க: தெனாலிராமனும் ஜோதிடரும்] அரசியின் கொட்டாவி, சூடுபட்ட புரோகிதர்கள்  ஆகியன தெனாலிராமன் கதைகளில் படிக்க வேண்டிய கதைகள். நீங்களும் படித்துப் பாருங்களேன்!

சரி! நம் கதைக்கு வருவோம். இப்படிப்பட்ட தெனாலிராமன் கதைகளில் ஒன்று – கிடைத்ததில் சம பங்கு!

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லோரையும் கூப்பிட்டிருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசியும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணித் தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.

இதை அறிந்த தெனாலிராமன், எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என நினைத்துக் கொண்டான்.

நாடகம் நடக்கும் அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான்.

வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன் விடவில்லை.

இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். “ஐயா, காவலாளியே! என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்” என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான்.

அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு காவலாளியைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான்.

ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடந்து கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேட்ம் போட்டு நடித்தவனைக் கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான்.

இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார். பின் “ஏன் இவ்வாறு செய்தாய்” எனக் கேட்டார். அதற்குத் தெனாலிராமன் “கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்” இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் “அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு காவலாளிகளிடம் உறுதியளித்து விட்டேன். அதனால் இப்பரிசை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டான்.

 

Tenali Raman Stories In English For Kids - GetLitt!

உடனே மன்னர் அவ்விரு காவலாளிகளையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.

அவ்விருவருக்கும் ஆளுக்கு 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கினார்.

இதுவரை நீங்கள் படித்திருக்கும் கதையில் ஒரு சின்ன மாற்றம்! மேல் உள்ள கதையில் இரண்டு காவலாளிகள் என்றும் மன்னர் மொத்தம் முப்பது கசையடிகள் கொடுத்தார் என்பதும் நமக்குத் தெரிகிறது.

மன்னர் ஒரு வேளை ,

  • தெனாலிராமனுக்கு 512 கசையடிகள் கொடுத்திருந்தால்
  • அதில் ஓர் அடி கூடத் தெனாலிராமன் வாங்காமல், எல்லாவற்றையும் காவலாளிகளுக்குப் பிரித்துக் கொடுத்திருந்தால்
    (512இல் முதல் காவலாளிக்குப் பாதி, அதாவது 256 கசையடி, மீதியிருக்கும் 256இல் பாதி 128 இரண்டாவது காவலாளிக்கு, இப்படியே இருக்கும் அடிகளில் பாதி – ஒவ்வொரு காவலாளிக்கும் என)

மன்னரைச் சந்திப்பதற்கு முன் தெனாலிராமன் எத்தனை காவலாளிகளைத் தாண்டி வந்திருப்பார்? கொஞ்சம் கண்டுபிடித்துச் சொல்லுங்களேன். இரண்டு நிமிடம் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் மனக்கணக்கு போட்டு, எழுதிப் பார்த்து விட்டு, கீழே உள்ள தீர்வைப் படியுங்கள்.

கசையடிகள் = 512
காவலாளிஎண்ணிக்கை = 0 # இன்னும் ஒருவருக்குக் கூட அடி கொடுக்கப்படவில்லை அல்லவா?
கசையடிகள் = கசையடிகள்/2 # முதல் காவலாளிக்குப் பாதி அடி கொடுத்தது போக மீதி
காவலாளி
எண்ணிக்கை+=1 # இப்போது ஒரு காவலாளிக்கு அடி கிடைத்திருக்கிறது

மேல் உள்ள கணக்கை எத்தனை முறை செய்ய வேண்டும்? நம்மிடம் கசையடிகள் தீரும் வரை செய்ய வேண்டும் அல்லவா? அதாவது கசையடிகளின் எண்ணிக்கை சுழி(0)யாகும் வரை தொடர வேண்டும்.


கசையடிகள் = 512
காவலாளி_எண்ணிக்கை = 0
while கசையடிகள்>0:
கசையடிகள் = கசையடிகள்//2
காவலாளி_எண்ணிக்கை+=1
print(காவலாளி_எண்ணிக்கை)

view raw

tenali.py

hosted with ❤ by GitHub

இந்த நிரல் புரிகிறதா என்று பாருங்கள். நிரலாக்கத்தில் முதன்மையானது, எழுதிப் பார்ப்பதும் இயக்கிப் பார்ப்பதும்! செய்து பாருங்கள். உங்களுக்கு மனித கம்ப்யூட்டர் என அறியப்பட்ட சகுந்தலாதேவியைத் தெரியுமா? அவருடைய ஒரு புதிரோடு அடுத்த பதிவில் சந்திப்போம்!

நன்றி:
www.siruvarmalar.com/thenali-raman-stories

Tenali Raman Stories In English For Kids

 

 

%d bloggers like this: