“பைத்தானைப் பற்றிய உங்களுடைய முந்தைய இரண்டு பதிவுகளைப் பார்த்தேன். உண்மையில் பைத்தான் அவ்வளவு எளிதான மொழியா? புதியவர்களைப் பைத்தான் பக்கம் இழுக்க நீங்கள் செய்யும் விளம்பர உத்தி தானே அது?” என்று ஒரு நண்பர் கேட்டார். “விளம்பரங்களைக் கண்டு அப்படியே நம்பும் காலம் எல்லாம் மலையேறிப் போச்சு நண்பரே! நம்முடைய காலத்தில் ஒரு நடிகர் நடித்தாலே படத்திற்குப் போவோம். இப்போதுள்ள இளைஞர்கள் அப்படியா? நடிகர் யார்? இயக்குநர் யார்? ஒளிப்பதிவு யார்? என்று அக்கு வேறு ஆணிவேறாக அலசித் தான் (இவர்கள் அலசலுக்கு உதவியாக புளூ சட்டை மாறன் வேறு!) ஒரு திரைப்படத்தையே முடிவு செய்கிறார்கள். அவர்களை எப்படி நாம் விளம்பரத்தைக் காட்டி இழுக்க முடியும்?” என்றேன்.
“ஒரு வாளித் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரே ஒரு சொட்டு எண்ணெய் விடுங்கள். அந்த ஒரு சொட்டு எண்ணெய் தான் மேலே மிதக்கும்! அப்படித்தான் உண்மையும்! எத்தனை பொய்கள் இருந்தாலும் தனியே மேலே தெரியும்” என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் சொல்வார். அதுவே நம்முடைய பைத்தான் அறிமுகத்திற்கும் பொருந்தும். பைத்தான் தனியே மேலே மிதக்கும்.
“தேன் இனிக்கும், தேன் இனிக்கும் என்கிறீர்கள். ஆனால் கையில் ஒரு சொட்டுக் கூடத் தர மாட்டேன் என்கிறீர்களே! பைத்தான் இவ்வளவு எளிமையான மொழி என்றால், நிறுவிக் காட்டுங்கள். அப்போது தான் நம்புவோம்!” என்கிறீர்களா? வாருங்கள்! தேனினிமையிலும் பைத்தானின் பாடம் திகட்டும் என்பதை நிறுவுவோம்.
இரண்டு எண்களைக் கூட்ட வேண்டும். இது தான் நம்முடைய முதல் வேலை என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்படிச் செய்வது? முதலில் இரண்டு எண்களின் மதிப்பைச் சொல்லி விடுங்கள்.
எண்1, எண்2 = 100, 90
என்றும் சொல்லலாம்.
எண்1 = 100
எண்2 = 90
என்று தனித்தனியாகவும் சொல்லலாம்.
புதியவர்கள் மிக எளிதாக நிரலைப் புரிந்து கொள்வார்கள். இப்போது வரும் விடையை அச்சிட்டுப் பார்க்க,
print(எண்1 + எண்2)
என்று கொடுத்தால் போதுமானது. (இதே நிரலை, சி, சி++, சி#, ஜாவா போன்ற தரவுவகை கொடுத்து அச்சிடும் மொழிகளில் கொஞ்சம் நினைத்துப் பார்க்கிறேன். ஒரு புதியவர் படும் பாடும் அவர்கள் உள்ளிருக்கும் கேள்விகளும் கண் முன்னே வந்து போகின்றன.)
அது சரி! மேல் உள்ள இந்தக் கணக்கை நான் எங்கே போய் செய்து பார்ப்பது? என்னுடைய கணினியில் பைத்தானை இன்னும் நிறுவவில்லையே என்கிறீர்களா? இந்தச் செய்முறையைச் செய்வதற்கு இணையத்திலேயே (நிறுவல் இல்லாமல்செய்ய) பல வழிகள் இருக்கின்றன. இப்போதைக்கு www.w3schools.com/python/trypython.asp?filename=demo_compiler இணைப்பில் மேல் உள்ளதைச் செய்து பாருங்கள். பிறகு, பைத்தானை நிறுவிக் கொள்ளலாம்.
கணக்கீடுகளுக்கு ஏற்ற மொழியாக, கணக்கீடுகளை எளியவர்கள், புதியவர்கள் எளிதில் செய்யக்கூடிய பல வழிகளைப் பைத்தான் தன்னிடம் கொண்டிருக்கிறது. எ. காட்டாக, 15 என்னும் ஓர் பத்தடிமான எண்ணை, ஈரடிமான எண்ணாக மாற்ற வேண்டும் என்றால்,
print(bin(15))
அவ்வளவு தான்! அதே போல, இதே எண்ணை எட்டடிமான எண்ணாக மாற்ற வேண்டும் என்றால்,
print(oct(15)) என்று கொடுத்தால் போதும். இப்படிக் கணக்கீடுகளுக்கு மட்டும் என்று இல்லை. இயற்கை மொழிக் கணிப்புகள்(Natural Language Processing) பெருகி வரும் இக்காலத்தில் வார்த்தைகளைப் பைத்தான் கையாளும் முறையே அலாதியானது.
name = “Free Software”
என்று கொடுத்து விட்டு,
print(name[5:]) என்று கொடுத்தால் Software என்பதைத் தனியே வெளியே எடுத்துவிடலாம். அதாவது முதல் ஐந்து எழுத்துகளை(இடைவெளியும் ஓர் எழுத்து – இங்கே) விட்டு விட்டு பிற எழுத்துகளைத் தரும். இதில் ஒரு படி மேலே போய்,
print(name[::2])
என்று கொடுத்தால்,
Fe otae என்று ஓரெழுத்து விட்டு ஓரெழுத்து (அதற்குத் தான் 2 என்று கொடுத்திருக்கிறோம்!) அச்சாகி வந்து விடும்.
ஒரு வார்த்தையின் முதல் எழுத்தை மட்டும் பெரிய(capital) எழுத்தாக மாற்றுங்கள்.
அதாவது, ‘muthu’ எனக் கொடுத்தால் ‘Muthu’ என மாற்ற வேண்டும். எப்படிச் செய்வது?
name = ‘muthu’
output = name[0].upper()+name[1:]
print(output)
‘Muthu’
upper() என்பது கொடுக்கப்பட்ட எழுத்தைப் பெரிய எழுத்தாக(upper/capital) மாற்றுகிறது என்பது, இந்த நிரலைப் படித்த உடன் புரிந்து விடுகிறது அல்லவா! இந்த எளிமை தான் பைத்தானின் வெற்றி!
ஒரு வரி(வாக்கியத்தில்)யில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தை மட்டும் பெரிய(capital) எழுத்தாக மாற்றுங்கள்.
name = ‘richard stallman’
print(name.title())
இதன் வெளியீடு Richard Stallman என்று ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தும் பெரிய எழுத்தாகி விடை தரும்.
“சலசலசலசல இரட்டைக் கிளவி” என்பது தமிழ் தெரிந்த எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்! (தெரியாவிட்டாலும் ஒன்றும் சிக்கல் இல்லை!) இப்போது இப்படி சலசலசலசல என்று ஒரு நிரலர் எழுத விரும்பினால்,
1. ஒரு முறை சல என்று எழுதட்டும்.
2. எத்தனை சல தேவையோ பெருக்கிக் கொள்ளட்டும். இவ்வளவு தான் பைத்தான்.
இப்போது நிரலைப் பாருங்கள்.
வார்த்தை = ‘சல‘
print(வார்த்தை * 4)
இப்போது விடை – சலசலசலசல என்று வந்து விடும்.
ஒரு வார்த்தையில் ஒரு குறிப்பிட்ட எழுத்து இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமா?
1. வார்த்தை என்ன என்று கேட்டுக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
word = ‘ezhil language’
இப்போது ‘a’ என்னும் எழுத்து இருக்கிறதா என்று பார்க்க,
print(‘a’ in word)
என்று கொடுத்தால் போதும். நிரலர் தேடும் எழுத்து இருந்தால், True என்றும் இல்லை என்றால் – False என்றும் பளிச்சென்று பதில் தந்துவிடும் பைத்தான்.
இந்த எளிமை தான் பலரையும் பைத்தான் பக்கம் இழுத்திருக்கிறது. அந்தக் காந்தத்தில் இப்போது கட்டுண்டு போன இரும்பாக மெல்ல நானும் மாறிக் கொண்டிருக்கிறேன். தேன் இனிக்கும் என்பதைப் போல, பைத்தானும் இனிக்கும் என்பதைச் சுவைத்து விட்டீர்கள் அல்லவா? இனி, துணிச்சலாக நம்முடைய கணினியில் பைத்தானை நிறுவலாம் அல்லவா? நிறுவுவோம் வாருங்கள்!
படம் நன்றி: artistmaruthi.blogspot.com/2013/04/devaneya-pavanar.html