பைத்தான் படிக்கலாம் வாங்க – 2 – தந்திரமே மந்திரமாய்!

போன பதிவில் பாட்டோடு முடித்திருந்தீர்களே! அப்படிப் பைத்தானிடம் என்ன இருக்கிறது என்று மயங்கினீர்கள் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். அண்மையில் மாநாடு என்றொரு படம் பார்த்தேன். நீங்களும் பார்த்திருக்கலாம். அந்தப் படத்தில் ஒரு காட்சி. படத்தின் நாயகன் அப்துல் காலிக்கைப் (சிம்புவைப்) பார்த்து, ‘என்ன இப்படி மெலிந்து போய்விட்டாய்? என்னப்பா செய்தாய்?’ என்று அவருடைய நண்பர் கேட்பார். அதற்குச் சிம்பு, ‘எதுவுமே செய்யவில்லை, அதனால் தான் மெலிந்து போய்விட்டேன்என்று பதில் சொல்வார். இதே தான் பைத்தானிலும் என்னை ஈர்த்தது. ‘என்ன உளறுகிறாய்?’ என்கிறீர்களா?

ஒரு நிரல் மொழி (அதாங்க புரோகிராமிங் லாங்குவேஜ்) படிக்க வேண்டும் என்றால்,

1) தரவு வகை (Datatype) தெரிந்திருக்க வேண்டும்.

2) இலக்கணம் (syntax) தெரிந்திருக்க வேண்டும்.

3) {, [, ; என்று பல உருவங்கள் கண் முன்னேயும் கனவிலும் வந்து போக வேண்டும்

இப்படி எண்ணில் அடங்கா வேலைகளைத் தெரிந்திருக்க வேண்டும். இப்படித்தான், பைத்தானைத் தொட்டுப் பார்க்கும் வரை நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், பிறகு தான் தெரிந்தது – ‘இவை எவையுமே தெரியாமல், பயன்படுத்தாமல் பைத்தானைப் படிக்க முடியும்என்பது! மாநாடு படத்தின் நாயகனைப் போல, எதுவுமே செய்யாமல், மேல் சொல்ல எதுவுமே தெரியாமல் பைத்தான் படிக்க முடியும். அந்த எளிமை தான் என்னைப் பைத்தானை நோக்கி ஈர்த்தது.

பைத்தானின் எளிமை:

தமிழைப் போல, ஆங்கிலத்தைப் போல இயல்பாக அமைந்திருப்பது பைத்தானின் மிகப்பெரிய சிறப்பு. சி, சி++, ஜாவா, சிஷார்ப் ஆகிய மொழிகளில் இரண்டு எண்களைக் கூட்டுவதற்கு நிரல் எழுத வேண்டும் என்றால் முதலில் அந்த மொழிகளில் உள்ள தரவுவகைகள்(Datatypes) முழுவதையும் படித்திருக்க வேண்டும். அதன் பிறகு தான் இரண்டு எண்களைக் கூட்டும் எளிய நிரலைக் கூட எழுத முடியும். இப்போது தரவுவகைகளைப் படிப்பது என்றால் தரவு என்றால் என்ன?, தரவில் ஏன் இத்தனை வகைகள்? இவை ஒவ்வொன்றையும் எழுத அதன் எழுத்துவகையை (சிறிய எழுத்தில் எழுத வேண்டுமா? பெரிய எழுத்தில் எழுத வேண்டுமா? என்பதை) நினைவில் கொள்ள வேண்டும். அந்தத் தரவுவகைகளின்(Datatypes) எல்லையை (byte இன் எல்லை 256 எண்கள், shortக்கு இவ்வளவு எண்கள் என) ஒரு நிரலர் நினைவில் கொள்ள வேண்டும். இதையெல்லாம் படித்த பின்னர் தான் இரண்டு எண்களைக் கூட்டும் நிரலையே எழுத முடியும்.

ஒரு தேர்ந்த அனுபவம் வாய்ந்த நிரலருக்கு இவையெல்லாம் சிக்கல்களே இல்லை என்றாலும் விடுதலை அடைந்து மூன்று தலைமுறைக்காலம் ஆன பிறகும் கூட முதல் தலை பட்டதாரிகளே இப்போது தான் உருவாகி வரும் தமிழகம் போன்ற நிலப்பரப்பில் உள்ள இளைஞர்கள் இந்த அளவு முதல் நிரலிலேயே எக்கச்சக்க செய்திகளை உள்வாங்கி எழுதுவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகவே இருக்கிறது.

இதை ஒட்டி வரும் இன்னொரு சிக்கல், ஒரு புதிய (அதுவும் பின்தங்கிய நிலைக் குடும்பங்களில் இருந்து வரும்) நிரலர்க்கு

1) நிரல்மொழியின் இலக்கணம்(Syntax) முக்கியமா? (ஏனென்றால் தேர்வு மதிப்பெண்ணுக்கு இது தான் முக்கியம்)

2) நிரலுக்குரிய ஏரணத்தை(logic)ச் சிந்திப்பது முக்கியமா? (ஏரணத்தைச் சிந்திப்பது எப்படி என்று தெரியவில்லையே, ஏரணம்(logic) வரமாட்டேன்கிறதே என்னும் தயக்கம்)

என்னும் கேள்விகளில் வரும் குழப்பங்களே அவர்களைச் சிறந்த நிரலராக மாற்றுவதில் தடைக்கற்களாக மாறி விடுகின்றன.

இந்தத் தடைக்கற்கள் எவையும் பைத்தானில் இல்லை. ‘இலக்கணம்(syntax) பிறமொழி தடைக்கல்லப்பா! தடைக்கல்லும் பைத்தானில் படிக்கல்லப்பா!’ என்று நாமும் பாடலாம். பைத்தான் போன்ற எளிய இலக்கண முறையைக் கொண்ட ஒரு நிரல்மொழியை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது என்பது கணினி நிரலாக்கத்தில் பலரையும் உள்ளிழுக்கும் மிகச்சிறந்த தந்திரம். இந்தத் தந்திரமே பைத்தானின் தாரக மந்திரமாகவும் இருந்தால்? – இருந்தால் என்று ஏன் இழுக்க வேண்டும். இந்தத் தந்திரமே பைத்தானின் தாரக மந்திரம். மந்திரவாதிகள் ஆவோமா?

படங்கள் நன்றி: www.pinterest.com/pin/666603182332535534/

me.me/i/non-programmer-programmer-python-programmer-0-21008053

%d bloggers like this: