பைத்தான் படிக்கலாம் வாங்க – 25 – பைத்தான் 2, பைத்தான் 3

வாசகர் கடிதங்கள்:

அன்புள்ள மு,
உங்களுடைய பைத்தான் பதிவுகளைத் தொடர்ச்சியாகப் படித்து வருகிறேன். அதில் இருந்து பைத்தான், ஓர் எளிய மொழியே என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டேன். ஆனாலும் இணையத்தில் தேடும் போது பைத்தான் என்று எழுதாமல் பைத்தான் 3 என்று எழுதுகிறார்கள். அதென்ன 3? உங்கள் பதிலுக்குக் காத்திருக்கிறேன்.

வைதேகி.

அன்புள்ள வைதேகி,
நிரல்மொழிகள் (programming languages), இயங்குதளங்கள்(OS) ஆகியவற்றிற்குப் பதிப்புகள் உள்ளன. புத்தகங்களில் முதல் பதிப்பு, இரண்டாம் பதிப்பு என்கிறார்களே! அது போல் தான்! முதல் முதலில் கைடோ வான் ரொசம் (Guido Van Rossum), பைத்தானை வெளியிட்ட போது (1991இல்) 0.9.0 பதிப்பு என வெளியிட்டார். அதன் பிறகு ஃபங்க்‌ஷனல் புரோகிராமிங்கையும் சேர்த்து 1994இல் பைத்தான் முதல் பதிப்பு, அதாவது பைத்தான் 1 வெளி வந்தது. பிறகு, List Comprehension, Garbage Collection ஆகிய தலைப்புகளையும் சேர்த்து 2000ஆம் ஆண்டில் பைத்தான் 2 வெளியிட்டார்கள்.

பைத்தான் 2 வந்த பிறகு, சில அடிப்படைத்தவறுகளைக் கண்டறிந்து அவற்றைத் திருத்தினார்கள். திருத்தி, திருத்தப்பட்ட பைத்தானாகப் பைத்தான் 3 வெளியானது. இது வெளியான ஆண்டு 2008. இந்தப் பைத்தான் தான் இப்பொழுது நடைமுறையில் இருக்கும் பைத்தான். இதைத் தான் பைத்தான் 3 என்கிறார்கள்.

 

அன்புள்ள முத்து அவர்களுக்கு,
நீங்கள் அடிக்கடி, பைத்தான் ஓர் எளிய மொழி என்கிறீர்கள். அதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தாலும் எளிமைக்கு எங்கேயும் இடம் இல்லை என்பது தான் இப்போதைய நிலை. வீட்டில் சாப்பாடு இல்லாவிட்டாலும் பகட்டாக உடை உடுத்த வேண்டும் என்று நினைக்கும் மக்கள் அதிகம் என நான் நம்புகிறேன். எனவே, பைத்தானின் எளிமையே அதனை வீழ்த்தி விடும் என்பது என் கருத்து. உங்களுக்கு எதிராக இதைச் சொல்வதாக இருக்கலாம். தவறாக நினைக்க வேண்டாம். என் கருத்தை உள்வாங்கி, விளக்குவீர்கள் என நம்புகிறேன்.

பத்ரி சேஷாத்ரி

அன்புள்ள பத்ரி சேஷாத்ரி,
பொதுவான மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி. அதே வேளையில் எளிமை என்பது என்ன என்பதையும் பேச வேண்டியிருக்கிறது. உங்கள் கேள்வியில் எளிமை, பகட்டு என இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். யாரிடமும் பழகாமல், ஏதாவது ஒரு குறையைச் சொல்லி, எல்லோரையும் ஒதுக்கி வைத்து விட்டு, தான் மட்டுமே உசத்தி என்று நம்புவது தான் பகட்டு என நான் நினைக்கிறேன். மற்றவர்களை விடத் தன்னை உயர்த்திக் காட்டுவதற்குத் தான், நீங்கள் சொல்லியிருப்பது போலப் பகட்டு பயன்படும். எளிமை எல்லோரையும் சமமாகப் பார்ப்பது. எல்லோரையும் சமமாகப் பார்க்கும் பார்வை இருந்தாலே, அதில் அன்பும் அரவணைப்பும் தன்னாலேயே வந்து விடும்.
அன்பீனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு‘ (திருக்குறள் 74)
என்கிறார் திருவள்ளுவர். [“அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அது எல்லாரிடத்தும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.” – மு. வரதராசனார்]

நிற்க. இப்போது எல்லோரிடமும் இணங்கிப் போகின்ற பண்பு பைத்தானுக்கு இருக்கிறதா என்று நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. நிரல்களின் நடையை(Syntax)ப் பார்க்கும் போது, சி, சி++, ஜாவா, சிஷார்ப், ஜாவாஸ்கிரிப்ட் ஆகியன ஒரே குடும்பத்தைப் போலக் காட்சி தருபவை. பைத்தான், இவை எல்லாவற்றில் இருந்தும் வேறுபட்டு இருப்பது! ஆனாலும் இவை எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்லும் பண்பு பைத்தானுக்கு உண்டு.


* சி மொழியுடன் இணைந்து செயல்படும் சிபைத்தான் [CPython]

  • ஜாவா மொழியுடன் இணைந்து இயங்கும் ஜேபைத்தான் [JPython]

  • .நெட் தளத்தில் இயங்கும் அயர்ன் பைத்தான்[Iron Python]

  • ரூபி மொழியுடன் இணைந்து செயல்படும் ரூபிபைத்தான் [Ruby Python]

  • ஜாவாஸ்கிரிப்டுடன் வேலை செய்யும் பிரைத்தான் [Brython]

  • இவை தவிர, அனகோண்டா பைத்தான் [நிறைய தரவுகளைக் கையாள] போன்ற பைத்தான் வகைகள் உள்ளன. பைத்தானின் எளிமை தான், இப்படி எல்லா மொழிகளுடன் இணங்கிப் போகின்ற நன்மையைக் கொடுத்திருக்கிறது. எனவே, முன்னரே சொன்னது போல, எளிமை தான் இனிமை! இனிமை தான் பைத்தான்!

 

 

முத்து,
வணக்கம். நலமா? எல்லா நிரல்மொழிகளிலுமே அடுத்தடுத்த பதிப்புகள்[Versions] உண்டு தானே! அதைப் போலத் தானே, பைத்தானிலும் பைத்தான் 2க்குப் பிறகு பைத்தான் 3 வந்திருக்கிறது. அதில் என்ன சிறப்பு?

முகம்மது இப்ராஹிம்.

முகம்மது இப்ராஹிம்,
வணக்கம். நலம். தாங்களும் நலம் என நம்புகிறேன். நல்ல கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மற்ற மொழிகளின் பதிப்புகளுக்கும் பைத்தானின் பதிப்புக்கும் [Version] வித்தியாசம் உள்ளது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு வீடு கட்டப்பட்டது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த வீட்டில் ஒவ்வோர் ஆண்டும் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து கொண்டே வருகிறார்கள். இப்படியே 25 மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டன. இப்போது அதைத் தான் 25ஆம் பதிப்பு எனச் சொல்கிறோம். வீடு, பழையது தான் – ஆனால் காலத்திற்கு ஏற்றவாறு மாற்ற 25 முறை முயன்றிருக்கிறார்கள். இது தான் ஜாவா, சிஷார்ப் போன்ற மொழிகளில் உள்ளது.

ஆனால் பைத்தானில் அப்படியில்லை. 2000ஆம் ஆண்டு பைத்தான் 2 வெளி வந்தது. 2008ஆம் ஆண்டு பைத்தான் 3, என்பது பைத்தான் 2ஐ விடப் பல இடங்களில் மாறுபட்டது. பைத்தானின் 2இன் நீட்சி பைத்தான் 3 இல்லை. பைத்தான் 3 என்பது 2008ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு புதிய வீடு. அந்தப் புதிய வீட்டுக்குத் தேவைப்படும் சில கருத்துகளைப் பழைய வீட்டில் இருந்து(ம்) எடுத்துக் கொண்டார்கள், அவ்வளவு தான்!

இப்போது சொல்லுங்கள்! 25 மாற்றங்களைக் கொண்ட 25ஆண்டுகள் பழைய மொழிகளும் 2008ஆம் ஆண்டில் புதிதாக வெளிவந்த பைத்தானும் ஒன்றா? இல்லையல்லவா? ஆனால் ஒன்று – இப்படிப் புதிதாக வெளியிடப்பட்டதில் பழைய பைத்தான் 2 நிரல் வல்லுநர்களுக்குச் சில சிக்கல்கள் இருந்திருக்கும் தானே! ஆனாலும் பைத்தான் 3இல் இருந்த வசதிகள் காரணமாக அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். படிப்படியாக, எல்லோரும் பைத்தான் 3க்கு மாறுவதற்குப் போதுமான நேரம் கொடுக்கப்பட்டு, பைத்தான் 2, 2020ஆம் ஆண்டில் தன்னுடைய வெளியீட்டை நிறுத்திக் கொண்டது.

கி. முத்துராமலிங்கம்,
பயிலகம், சென்னை

 

நன்றிக்குரியோர்:
python.land/python-tutorial#How_to_learn_Python

 

 

%d bloggers like this: