நீங்கள் பெரிய வணிக வளாகங்களிலோ அல்லது மற்ற பெரிய கடைகளிலோ ஒரு ஆடையை வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது பீப் ஒலி கேட்கலாம். திரும்பவும் கடைக்குள் சென்று ஆடையை சோதனை செய்தால் அதில் மாட்டியுள்ள ஒரு சாதனத்தை நீங்கள் வாங்கும் போது எடுக்கத் தவறிவிட்டார்கள் என்று தெரியவரும். அதுதான் வானலை அடையாளம். அருகில் வந்தால் கதவுக்கு இரண்டு பக்கமும் வைத்துள்ள அலைவாங்கிகள் உணர்ந்து ஒலியெழுப்பும்.
வானலை அடையாளத்தில் இரு வகைகள்
இந்த வானலை அடையாளத்தில் இரு வகைகள் உண்டு. சக்திக்காக உள்ளேயே மின்கலம் வைத்து வருகிறது ஒருவகை. ஆனால் இது விலை அதிகம். தொழிற்சாலைகளில் பெரும்பாலும் மின்கலம் இல்லாத, விலை குறைந்த இரண்டாம் வகை வானலை அடையாளங்களைப் பயன்படுத்துகிறோம். இவை அலைவாங்கிகளின் சக்தி மூலம் தகவலை அனுப்புகின்றன. மின்கலம் இல்லாத வானலை அடையாளம் கூட பட்டை, கட்டக் குறியைவிட விலை அதிகம். இந்த அதிக விலை கொடுத்து வாங்கக் காரணமான அதிக அம்சங்கள் எவை?
- இவற்றை நேரடியாகப் பார்த்து வருடத் தேவையில்லை. வருடும் சாதனம் குறிப்பிட்ட தூரத்துக்குள் இருந்தால் போதும்.
- இதில் மிக அதிகமான தரவுகளை சேமித்து வைக்க முடியும்.
- உணவுப் பொருட்களை உறைபதனம் செய்து அனுப்பும்போது போகும் வழியில் வெப்பநிலை மற்றும் பற்றுயிரிகளின் அளவையும் கூட பதிவு செய்ய முடியும்.
ஆனால் விலை அதிகம் என்பதால் மேற்கண்டவாறு விலை உயர்ந்த சரக்குகளுக்கு, அதுவும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால்தான், கட்டுப்படியாகும்.
வானலை அடையாளங்களைப் பயன்படுத்தல்
இவற்றை கச்சாப் பொருட்கள், பாதி வேலை செய்த பாகங்கள், விற்பனைக்குத் தயாரான தயாரிப்புகள், பொதியங்கள் (packages), மரப்பெட்டிகள் (crates), மர அடிமனைகள் (pallets) ஆகிய எல்லாவற்றிலும் பொருத்தலாம்.
வானலைப் படிப்பிகள்
வானலைப் படிப்பி அடையாளத்தை வாங்கி தன்னுடைய அமைவிடத்தையும் தகவல் எடுத்த தேதி, நேரத்தையும் சேர்த்து அனுப்பும்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: சரக்கு மேலாண்மை (Inventory Management)
தொழிற்சாலையில் சரக்கு வகைகள். சரக்கு மேலாண்மையில் பகுப்பாய்வுகள். இருப்பெடுத்தல் (physical inventory). MSME சரக்கு மேலாண்மைக்கு திறந்த மூல மென்பொருட்கள்.