1. இணையத்தை இலவசமாக எல்லா மக்களுக்கும் கொடுக்க ஃப்ரீ பேசிக்சை விட ஏர்செல்லின் திட்டம்(www.medianama.com/2015/10/223-aircel-free-internet/ ), மொசில்லாவின் சம மதிப்பீட்டுத் திட்டம்(www.thehindubusinessline.com/info-tech/net-neutrality-mozilla-suggests-equal-rating/article7177532.ece ), ஜிகாட்டோவின் சுங்கமில்லா இணையத் திட்டம் (www.digit.in/general/gigatos-toll-free-internet-28094.html ) எனச் சிறந்த பல திட்டங்கள் இருக்கின்றன. ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம் என்பது பேஸ்புக்கை முன்னிறுத்தும் திட்டமே தவிர, இலவச இணையத்தை முன்னிறுத்தும் திட்டமாக இல்லை.
2. ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்திற்கு பேஸ்புக்கும் பணம் செலவழிக்கவில்லை; தொலைத் தொடர்பு நிறுவனங்களும் செலவழிக்கவில்லை. அப்படியானால் இந்த இலவசத் திட்டத்திற்கான பணம் எங்கிருந்து வருகிறது? உண்மையில் இதற்கான பணத்தைப் பயனர்கள் தாம் கொடுக்கிறார்கள். இந்த இலவசத் திட்டத்தால், பணம் கட்டி இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும்; பயனர்கள் எண்ணிக்கை குறையும் போது, இணைய வசதிக்கான கட்டணங்கள் குறைய வாய்ப்பில்லாமல் போகும்.
3. ஃப்ரீ பேசிக்ஸ் என்பது மக்களை இணையத்தை நோக்கி ஈர்ப்பதற்காகக் கொண்டுவரப்படும் திட்டமாக இல்லை. உண்மையில் இத்திட்டம், பேஸ்புக்கையும் அதன் பங்காளிகளையும் இலவசமாக்கி, மீதி எல்லா நிறுவனங்களையும் காசாக்கும் ஒரு திட்டமேயாகும். பணம் கட்டி இணையவசதி பெறுபவர்களுக்குக் கூட ஃப்ரீ பேசிக்ஸ் இலவசமாகக் கொடுக்கப்பட்டு, இணைய சமத்துவம் (நெட் நியூட்ராலிட்டி) என்பது மீறப்படும். எனவே ஃப்ரீ பேசிக்ஸ் என்பது இணைய சமத்துவ மீறல் செயலே ஆகும்.
4. ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம் மூலமாகத் தான் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும் என்றில்லை. இத்திட்டம் இல்லாமலேயே இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் கூடிக் கொண்டு தான் வருகிறது. இந்த ஆண்டு (2015) மட்டும் இந்தியாவில் 10 கோடிப் பேர் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதே அதற்குச் சான்றாகும்.
5. ஃப்ரீ பேசிக்ஸ் என்பது எல்லோருக்குமான ஒரு பொது மேடையாக இல்லை. ஃப்ரீ பேசிக்சின் தொழில்நுட்ப விதிகளை பேஸ்புக் நிறுவனமே தீர்மானிக்கிறது; அவ்விதிகளை மாற்றவும் பேஸ்புக்கிற்கு மட்டுமே உரிமை இருக்கிறது. ‘கட்டுப்பாடுகளற்ற கண்டுபிடிப்புகள்‘ என்று அமெரிக்காவில் பேசும் பேஸ்புக் நிறுவனம், இந்தியாவில் மட்டும் – ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தில் யார் யாரைச் சேர்ப்பது என்பதில் பல கட்டுப்பாடுகளை வைத்து, விண்ணப்பதாரர்களை ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தை விட்டு நீக்கும் உரிமையைக் கொண்டாடுகிறார்கள்.
6. ஃப்ரீ பேசிக்ஸ் பற்றிய தகவல்களை பேஸ்புக்கில் மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கெனவே தவறான விளம்பரத்திற்கு பிரேசில் நாட்டில் விமர்சிக்கப்பட்ட பேஸ்புக் நிறுவனம் (பார்க்க: twitter.com/walmartyr/status/642000173242126336 ), இந்தியாவிலும் ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனம் மூலம் ‘இலவச இணையம்’ (Free Internet) என்று கூறித் தவறான கருத்தைப் பரப்புகிறது. (பார்க்க: www.snl.com/InteractiveX/Article.aspx?cdid%253DA-34372668-12583 )
7. ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தில் இணையும் இணையத்தளங்களைப் பயன்படுத்துவோரின் எல்லாவிதத் தகவல்களையும் கையாளும் உரிமையை பேஸ்புக் எடுத்துக் கொள்கிறது. எனவே, பேஸ்புக்கிற்குப் போட்டியாக இருக்க விரும்பும் நிறுவனங்கள் இந்த ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தில் சேரவே முடியாது. மேலும், ஏற்கெனவே அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு அமைப்பிற்கு பேஸ்புக், பயனர் பற்றிய தகவல்களைக் கொடுத்து உதவி வரும் வேளையில் (பார்க்க: www.globalresearch.ca/nsa-and-facebook-work-together/5439110 ), இந்தியர்களின் தகவல்கள் இப்படிப் பெறப்படுவது, இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக அமையும்.
8. சில குறிப்பிட்ட இணையத்தளங்களை மட்டும் நீண்ட நேரத்திற்குப் பயன்படுத்துவதைக் காட்டிலும், எல்லாவிதமான இணையத்தளங்களையும் குறைந்த நேரத்திற்காவது பயன்படுத்துவதைத் தான் பயனர்கள் விரும்புவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன (பார்க்க: lirneasia.net/2015/10/finally-some-research-on-zero-rated-offers-and-users-and-its-surprising/ ).
9. ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தில் விளம்பரங்கள் இல்லை எனக் கூறும் பேஸ்புக் நிறுவனம், எதிர்காலத்திலும் இத்திட்டத்தில் விளம்பரங்கள் இருக்காது என்று சொல்லவில்லை.
10. ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தை ஆதரிக்காதவர்களையும் ஆதரிப்பவர்களாகக் காட்டுகிறது பேஸ்புக். ஏறத்தாழ 32 இலட்சம் பேர் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தை ஆதரிப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை உண்மை என்று எதன் அடிப்படையில் உறுதிப்படுத்துவது?
ஆங்கில மூலம்: saynotofreebasics.fsmi.in/#list
– முத்து (muthu@payilagam.com) சென்னை