எளிய தமிழில் Electric Vehicles 20. சறுக்குப்பலகை அடித்தளம்

தற்போது சந்தையிலுள்ள பெரும்பாலான மின்னூர்திகள் பெட்ரோல் டீசல் ஊர்தி மாதிரியை (model) அடிப்படையாகக் கொண்டவை. பெரும்பாலான மாதிரிகளை நீங்கள் பெட்ரோல் டீசல் ஊர்தியாகவோ அல்லது மின்னூர்தியாகவோ வாங்கலாம். ஆகவே இவற்றில் பெட்ரோல் டீசல் ஊர்தியின் அடிச்சட்டகத்தையே (chassis) எடுத்து அதற்குள் மின்கலம், மோட்டார், திறன் மின்னணு சாதனங்களை எங்கு வைப்பது என்று ஓரளவு தக்கவாறு அமைத்து வடிவமைப்பு செய்கிறார்கள். ஆகவே இவற்றை இருப்பதை வைத்து சமாளித்த வடிவமைப்பு என்றுதான் சொல்லமுடியும். மின்னூர்திகளுக்காகவே உருவாக்கிய ஆகச்சிறந்த வடிவமைப்பு என்று சொல்ல இயலாது.

Skateboard-platform

அடிச்சட்டகத்தில் மின்கலத்தொகுப்பு

சறுக்குப்பலகை அடித்தளம் (Skateboard Platform)

மின்னூர்திகளை மட்டுமே தயாரிக்கும் நிறுவனங்கள் சறுக்குப் பலகை அடித்தளம் என்ற வடிவமைப்பை உருவாக்கினார்கள். இந்த வடிவமைப்பில் மின்கலத்தொகுப்பு அடிச்சட்டகத்தில் தடிமனான பலகை போன்று வைக்கப்படும். மற்ற நிறுவனங்களும் புதிய மாதிரிகளில் இந்த வடிவமைப்பை அறிமுகம் செய்கிறார்கள்.

உற்பத்திக்கான சிக்கலையும் செலவையும் குறைக்கிறது

இதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், சிறியது முதல் பெரிய கார் மாதிரிகளுக்கு இடமளிக்கும் வகையில் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ எளிதாக மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

வழக்கமான வடிவமைப்புகளுடன் ஒப்பிடும்போது மின்னூர்திகளின் உற்பத்திக்கான சிக்கலையும் செலவையும் குறைக்கிறது. வழக்கமான எஞ்சின், பல்லிணைப்பெட்டி போன்ற பாகங்கள் அகற்றப்படுவதால் காரின் உட்புறத்தில் பயணிகளுக்கு அதிக இடம் கிடைக்கும். மேலும் காரின் உடல் பகுதியைத் தனியாகத் தொகுத்துக் கொள்ளலாம். அடிச்சட்டகத்தில் சக்கரங்கள், மின்கலம் ஆகியவற்றைத் தனியாகத் தொகுத்துக் கொள்ளலாம். கடைசியாக உடல் பகுதியை அதன் மேல் வைத்து முடுக்கி விடலாம்.

புவியீர்ப்பு மையம் (center of gravity) தாழ்வாக இருக்கும்

கனமான மின்கலத் தொகுப்பைத் தரைக்கு அருகில் கீழே வைப்பதால், புவியீர்ப்பு மையம் தாழ்வாக இருக்கும். வாகனக் கையாளுதலும் எளிதாக இருக்கும், குடைசாயக்கூடிய (overturning) இடரும் குறைவு.

மோதலில் மின்கலத்துக்குப் பாதுகாப்பு 

இந்த வடிவமைப்பில் ஒருக்கால் ஊர்தி மோதலுக்குட்பட்டால் மின்கலம் பாதுகாப்பாக இருக்கும்.

நன்றி

  1. A modular skateboard to build an EV on

இத்தொடரில் அடுத்த கட்டுரை: இரு சக்கர மின்னூர்திகள்

மின் ஸ்கூட்டர் மோட்டார்கள். திறன் பொறித்தொடர் (powertrain or drivetrain). கழற்றி மாட்டக்கூடிய மின்கலம். எடுத்துச் செல்லக்கூடிய மின்னேற்றி. மின் மோட்டார் சைக்கிள்கள் பரவலாக சந்தையில் இன்னும் வரவில்லை.

ashokramach@gmail.com

%d bloggers like this: