எளிதாக நிறுவி இயக்க முடியும்
சால்வ்ஸ்பேஸ் 3D என்பது அளவுரு மாதிரியமைத்தல் (parametric modeling) கட்டற்ற திறந்தமூல மென்பொருள். இது விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் கணினிகளில் இயங்குகிறது. விண்டோஸ் கணினிகளில் நிறுவ வேண்டிய அவசியம் கூட இல்லை. EXE கோப்பு அப்படியே ஓடும். இது சிறிய கோப்பு ஆகையால் உங்கள் கணினியில் அதிக இடத்தையும் எடுத்துக் கொள்ளாது.
தொடக்கப்பயிற்சியாக ஒரு கோணத்தாங்கி (angle bracket) வரையும் படிமுறைகள் இங்கே உள்ளன. சால்வ்ஸ்பேஸ் குறிப்புதவிக் கையேடு இங்கு உள்ளது. மேலும் சில எளிதான பயிற்சிகள் இங்கே உள்ளன.
கோப்பு வகைகள்
சால்வ்ஸ்பேஸ் மென்பொருளின் தன்னகக் கோப்பு வடிவம் (Native file format) SLVS. இதில் வடிவத்தை உருவாக்கி எஸ் டி எல் (STL) கோப்பு வகையாக ஏற்றுமதி செய்து முப்பரிமாண அச்சிடல் (3D Printing) எந்திரங்களில் பயன்படுத்தலாம். மேலும் ஸ்டெப் (STEP) கோப்பு வடிவமாக ஏற்றுமதி செய்து மற்ற 3D மாதிரி அமைக்கும் மென்பொருட்களில் இறக்குமதியும் செய்ய முடியும்.
பாகங்களைத் தொகுத்துப் பார்க்கும் வசதி
நாம் பாகங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது அவற்றிற்கிடையில் சில அசைவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பல அசைவுகள் கட்டுப்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு சுழல்தண்டை தாங்கிக்குள் தொகுத்தால் அது சுழல முடியும். ஆனால் மற்ற கோணங்களில் திரும்ப இயலாது. சால்வ்ஸ்பேஸ் மென்பொருளில் பாகங்களை தொகுத்துப் பார்க்கும்போது கீழ்கண்டவாறு பல கட்டுப்பாடுகளை அமைக்க இயலும்:
- ஒன்றியமைவு (Coincident)
- திசையமைவு (Orientation)
- இணையமைவு (Parallel)
- தூரம் (Distance)
- கோணம் (Angle)
- கிடைநிலை (Horizontal) அல்லது செங்குத்து (Vertical)
கண்ணி (mesh) மற்றும் வளைந்த மேற்பரப்பு (NURBS surface)
சட்னி அரைக்கும் எந்திரம் (mixie), முடியுலர்த்தி (hair drier) போன்ற தயாரிப்புகளில் மேற்பரப்பு வளைந்த வடிவில் இருக்கும். இவை கோளம், உருளை போன்ற அடிப்படை வடிவங்களாக இல்லாமல் சிக்கலான வளைந்த மேற்பரப்புகளாக இருக்கும். சால்வ்ஸ்பேஸ் மென்பொருளில் இவற்றை வரைய கண்ணி மற்றும் வளைந்த மேற்பரப்பு ஆகிய இரண்டு உத்திகள் உள்ளன. கண்ணி என்பது வலை போன்ற சிறிய முக்கோணங்கள் அல்லது நாற்கோணங்களால் (quadrilateral) ஆனது. இம்மாதிரி இல்லாமல் வளைந்த மேற்பரப்பு என்பது வழுவழுப்பாகவே இருக்கும். ஆனால் கணித ரீதியாக வரையறுக்கக் கூடியது. ஆகவே கணினியில் சேமித்து வைக்கவும் திரும்பவும் பெறவும் வசதியானது. மேலும் எளிதாக உருவாக்கவும் மாற்றங்கள் செய்யவும் முடியும். இவற்றைப்பற்றி மேலும் விவரங்களைப் பின்னொரு கட்டுரையில் பார்ப்போம்.
பாணியும் (style) அதை விருப்பமைவு செய்தலும்
இதில் அடுக்குகள் (layers) போன்ற அம்சங்கள் கிடையாது. ஆனால் பாணிகள் உண்டு. எடுத்துக்காட்டாக ஒரு கோட்டின் தடிமனையும் நிறத்தையும் நேரடியாக மாற்றுவது சாத்தியமல்ல. ஆனால் நாம் அந்தக் கோட்டின் பாணியை மாற்றலாம். தேவைப்பட்டால் ஒரு விருப்பமைவு பாணியை (custom style) உருவாக்கியும் அந்தக் கோட்டுக்கு அமைக்கலாம்.
சால்வ்ஸ்பேஸ் செய்ய இயலாத வேலைகள்
ஒரு CAD மென்பொருளில் தயாரித்த வரைபடத்தை மற்றொரு CAD மென்பொருளில் திறக்க STEP என்ற கோப்பு வகை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சால்வ்ஸ்பேஸ் STEP கோப்புகளை இறக்குமதி செய்ய இயலாது. இதே போல DXF கோப்பு வகைகளையும் ஓரளவுதான் இறக்குமதி செய்ய முடியும். முக்கியமாக இணையத்தில் பகிரப்பட்ட இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய துணைத் தொகுப்புகளை இறக்குமதி செய்ய இயலாது. இது பெரிய குறைபாடுதான்.
மேலும் நாம் திட வடிவம் உருவாக்கும் உத்திகளில் வளைந்த பிதுக்கல் (Sweep) என்று ஒன்று பார்த்தோம். இதுதான் மரை வடிவங்களை உருவாக்கப் பயன்படுகிறது. இதையும் செய்ய இயலாது. மற்றும் விளிம்பு மழுக்குதல் (edge chamfer), விளிம்பு ஆரம் (radius) , விளிம்புப்பட்டி (fillet) ஆகியவற்றையும் செய்ய இயலாது. இவை தவிர நாம் திட வடிவம் உருவாக்கும் உத்திகள் கட்டுரையில் பார்த்த அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்த முடியும்.
நன்றி தெரிவிப்புகள்
இத்தொடரில் அடுத்த கட்டுரை: ஃப்ரீகேட் (FreeCAD) 3D
ஃப்ரீகேட் பணிமேடைகள் (workbenches). தோராயப் படவரைவி பணிமேடை (Sketcher workbench). பாகம் வடிவமைப்புப் பணிமேடை (PartDesign workbench). மற்ற சில பணி மேடைகள். அசைவூட்டம் (Animation). எந்திரன் பாவனையாக்கல் (Robot simulation). பயனர் கையேடு மற்றும் பயிற்சிகள். கோப்பு வகைகள்.