எளிய தமிழில் Robotics – 20. மற்றும் சில எந்திரன் தொகுப்புகள்

எந்திரன் தொகுப்புகளை வாங்கும் முன் கருத்தில் கொள்ள வேண்டியவை

  1. நீங்கள் யாருக்காக எந்திரன் தொகுப்பை வாங்கப் போகிறீர்களோ அந்த வயது வரம்புக்குத் தோதான நிரல் எழுதும் வகை அதில் உண்டா என்று முக்கியமாக உறுதிப்படுத்தவும்.
  2. கற்றுக்கொள்ள மட்டும்தான் என்றால் நீங்கள் பாவனையாக்கிகளிலேயே கற்றுக்கொள்ள முடியும். உங்கள் பள்ளியிலோ, கல்லூரியிலோ அல்லது ஊரிலோ ஒரு எந்திரன் போட்டியில் பங்கு பெறுவது போன்ற பெரிய குறிக்கோளை வைத்து அதற்குத் தகுந்த எந்திரன் தொகுப்பை வாங்குவது பயனுள்ள செயல்.
  3. எந்திரன் தொகுப்புகளுடன் வரும் படிப்படியான வழிமுறைகளைப் பின்பற்றி பல திட்டங்களும் மாதிரிகளும் செய்ய முடியும். இருப்பினும் அதற்குமேல் அதில் எதுவும் சவால் இல்லை. திறந்த மூல மென்பொருட்களை பயன்படுத்தி மேலும் அந்த எந்திரனை விரிவாக்கி புதிய பல வேலைகளை செய்வதற்கு வழி இருக்கிறதா என்றும் பாருங்கள்.

தைமியோ 2 (Thymio II)

நாம் முந்தைய கட்டுரைகளில் பல பயிற்சிகளில் பார்த்த எந்திரன் தான் இது. இதன் அடிப்படை வேலைத்திறன்கள் மற்றும் பல்வேறு நிரலாக்க சூழல்கள் மனதை ஈர்க்கும் எந்திரன்களின் உலகத்தைக் கண்டறிய 6 வயது முதலான சிறுவர்களுக்கு வழி செய்கின்றன. நீங்கள் உங்களுக்கு ஒத்த மொழிகளையும் சூழல்களையும் தேர்ந்தெடுப்பதன் மூலம் தைமியோவின் நிரலாக்கத்தை எளிதாகக்  கற்றுக்கொள்ள முடியும்.

லெகோ மைண்ட்ஸ்டார்ம்ஸ் (Lego Mindstorms)

லெகோ மைண்ட்ஸ்டார்ம்ஸ்

லெகோ மைண்ட்ஸ்டார்ம்ஸ்

கொடுக்கப்பட்ட படிப்படியான வழிமுறைகளைப் பின்பற்றி டிராக்கர், ராப்டார், ஸ்பைகர், எவர்ஸ்டார்ம், கிரிப்பர் என்ற ஐந்து அருமையான எந்திரன்களை உருவாக்கலாம். இவி3டெவ் (ev3dev) என்ற திறந்த மூல மென்பொருளைப் பயன்படுத்தி மேலும் பல திட்டங்களைச் செய்து பார்க்கலாம். ஓபன் ராபர்ட்டா (OpenRoberta), இவி3பைதான் (EV3Python), ஸ்கிராட்ச் (Scratch) மொழிகளிலிலும் நிரல் எழுதலாம்.

அர்டுயினோ பிராக்கியோ (Braccio) எந்திரன் கை

அர்டுயினோ பிராக்கியோ எந்திரன் கை

அர்டுயினோ பிராக்கியோ எந்திரன் கை

இந்த எந்திரன் கையால் பல மாதிரிப் பொருட்களை கைப்பிடியில் பிடித்துக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக ஒரு நிழற்படக் கருவியை இதன் கையில் பிடிக்க வைத்து, நிரல் எழுதி, நீங்கள் எங்கு செல்கிறீர்களோ அங்கெல்லாம் பார்வையால் பின் தொடர வைக்கலாம். இது அர்டுயினோ என்ற நுண் கட்டுப்படுத்தியைப் பயன்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது.

ஹெக்சி (Hexy) நடக்கும் எந்திரன்

ஆர்க்பாட்டிக்ஸ் ஹெக்சி நடக்கும் எந்திரன்

ஆர்க்பாட்டிக்ஸ் ஹெக்சி நடக்கும் எந்திரன்

இது சிலந்தி போன்று ஆறு கால்களில் நடக்கும் எந்திரன். இது அணிவகுப்பு போல் நடக்கும் மற்றும் நடனம் ஆடும். நாம் முன்னர் பார்த்த ஸ்பார்க்கி எந்திரனைத் தயாரிக்கும் ஆர்க்பாட்டிக்ஸ் நிறுவனமே இதையும் தயாரிக்கிறது. இதன் நிரல்கள் யாவும் திறந்த மூலமாகக் கிடைக்கின்றன. இதற்கு நீங்கள் பைதான் மொழியில் நிரல் எழுதலாம்.

நன்றி தெரிவிப்புகள்

  1. Lego Mindstorms
  2. Arduino Braccio
  3. Arcbotics Hexy

இத்தொடரில் அடுத்த கட்டுரை: டர்டில்பாட் 3 – பர்கர் (Turtlebot 3 – Burger) 

ராஸ் (ROS – Robot Operating System)

ashokramach@gmail.com

%d bloggers like this: