விக்கிப்பீடியா பல இலட்சக்கணக்கான தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் ஓர் தகவல் களஞ்சியம்.. அதில் சிறப்பான செயல்கள் செய்து வரும் சில பெண் விக்கியர்களைப் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகிறேன். எனக்கு எங்க நேரமிருக்கு? குடும்பத்தைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கு, என வீட்டிற்குள்ளேயே ஒடுங்கிப்போய்விடும் பெண்களுக்கு இது ஓர் ஊக்கமாக இருக்கலாம்.
2. திவ்யா குணசேகரன்.
காஞ்சிபுரத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர். தமிழ்முதுகலைப்பட்டம் பெற்ற திவ்யா கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ் இளநிலை ஆய்வாளர் கல்வி கற்றுவருகிறார்.
சென்னையில் உள்ள நந்தனம் ஆடவர் கல்லூரியில் சங்க இலக்கிய செயலி வெளியீடு மற்றும் தமிழ் கணிமை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது… அங்கு கணியம் அறக்கட்டளையின் ஸ்ரீனிவாசன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் மூலமே விக்கிப்பீடியா அறிமுகம் ஆனது.
விக்கிமீடியாவின் திட்டங்களுள் ஒன்றான விக்கி மூலம் என்ற மூலநூல் களஞ்சியத்தில் தொடங்கியதே இவரது முதல் விக்கிப்பயணம்..
இது பல்லாயிரக்கணக்கான மூல நூல்களை உள்ளடக்கிய இணைய நூலகம் போன்றது. இந்த விக்கிமூலத்தில் தமிழக அரசு கொடையாக வழங்கிய ஆயிரக்கணக்கான நூல்களின் லட்சக்கணக்கான பக்கங்கள் OCR மூலம் எண்ணிமியமாக்கிச் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் பயன்படுத்தித் தரமிறமிறக்கிக் கொள்ளும் வகையில் அதனை திருத்தம் செய்யும் மெய்ப்புப் பார்த்தல் எனும் பணி செய்ய வேண்டும். இப்பணியையே கணியம் நிறுவனத்துடன் இணைந்து திவ்யா ஆர்வமாக செய்துவருகிறார்.
கணியம் சார்ந்த பணிகள் மூலமே விக்கியில் பங்களிக்க தொடங்கி விக்கிபீடியாவும் அறிமுகம் ஆனது. 2018 முதல் விக்கிமூலத்தில் பங்களிக்கத் தொடங்கிய திவ்யா குணசேகரன் 5 க்கும் மேற்பட்ட நூல்களையும் 2000க்கும் மேற்பட்ட பக்கங்களையும் மெய்ப்புப் பார்த்துள்ளார்.
தனக்குத் தெரிந்தவற்றை தி நகர் ஜெயின் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியாகவும் வழங்கியுள்ளார். கணினி மற்றும் தட்டச்சு பயிற்சி பெற்றதால் தனி ஆர்வம் மற்றும் விருப்பம் காரணமாக விக்கிப்பீடியா பங்களிப்புகள் எளிமையானதாக் கூறுகிறார் திவ்யா.
கல்லூரிக் கல்வி, பிற வேலைகளும் முடித்த ஓய்வு நேரங்களில் மெய்ப்பு பணி செய்ய தொடங்குகிறார். ஒருவர் வாழ்க்கையில் அனைத்து நூல்களையும் படிப்பது கடினம்… ஆனால் விக்கிமூலத்தில் மெய்ப்பு பணியும் ஒரு நூலை படித்தோம் என்ற இரண்டு எண்ணங்களும் நிறைவேறும் என்கிறார் திவ்யா குணசேகரன்.
இளம் வயதில் தமிழார்வமும் தமிழுக்குத் தன்னாலியன்ற சேவை செய்யவேண்டுமென்ற எண்ணமும் கொண்ட திவ்யா 2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழ்விக்கிப்பீடியாவின் 16 ஆண்டு கொண்டாட்ட மாநாட்டில் கலந்துகொண்டார் என்பது சிறப்பு.
வாழ்த்துகள் திவ்யா குணசேகரன்
பார்வதிஸ்ரீ