எளிய தமிழில் VR/AR/MR 11. வீடு பார்க்கவும் உட்புற வடிவமைப்புக்கும் VR

உட்புற வடிவமைப்பைக் (interior design) கற்பனை செய்து பார்ப்பது மிகக் கடினம் 

உட்புற வடிவமைப்பு

உட்புற வடிவமைப்பு

செயற்குறிப்பில் (proposal) கொடுத்துள்ள கட்டடத்தின் நீள அகல வரைபடம் (plan) மற்றும் முகப்புப் படம் (elevation) ஆகியவற்றை வைத்து அதன் அளவுகளை வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியியலாளர்களால் உருவகிக்க முடியும். ஆனால் சாதாரண வாடிக்கையாளர்களுக்குக் கட்டடத்தின் அளவுகளைக் கற்பனை செய்து பார்ப்பதே மிகக்கடினம். மேலும் அறைகலன்கள், திரைச்சீலைகள், சுவர் அலங்காரம் ஆகியவற்றையும் சேர்த்து உருவகிப்பது குழப்பமான வேலையாகிறது. ஆகவே வாக்குறுதி கொடுத்தபடி வேலையை செய்து முடிக்கவில்லை என்று வாடிக்கையாளருடன் சர்ச்சை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

நேரில் பார்ப்பது போலவே VR தத்ரூபமாக இருக்கிறது

ஆகவே உட்புற வடிவமைப்பு செய்பவர்கள் முதலில் தங்களுடைய செயற்குறிப்பை (proposal) ஒரு VR காட்சியாகத் தயாரிக்கிறார்கள். இதில் வண்ணங்கள், வடிவமைப்பு ஆகியவற்றைத் தத்ரூபமாக சித்தரிக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் வெவ்வேறு கோணங்களில் திருப்பியும் பெரிதாக்கியும் (zoom in) பார்க்க இயலும். மேலும் காலை, பகல், மாலை, இரவு என்று ஒளி அமைப்பையும் மாற்றிப் பார்க்கலாம்.

வாடிக்கையாளருக்குத் தேவையான மாற்றங்களைக் கையோடு செய்து இறுதிச் சம்மதம் பெற முடியும்

வடிவமைப்பாளர்கள் வாடிக்கையாளர்களுடன் அமர்ந்து அவர்கள் கேட்கும் மாற்றங்களை உடன் VR காட்சியிலேயே செய்து காட்ட இயலும். இவ்வாறாக வாடிக்கையாளர் முழுத் திருப்தி அடைந்தபின் இறுதிச் சம்மதம் பெற முடியும்.

வீடு பார்க்க முப்பரிமாண VR உலா (walkthrough)

நீங்கள் வீடு வாங்க ஒரு தரகரை அணுகுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதலில் உங்கள் தேவைக்குத் தோதான சில வீடுகளின் சுற்றுச்சூழல், வெளித் தோற்றம் மற்றும் உள்ளமைப்புப் படங்களை உங்களுக்குக் காட்டுவார். இருப்பினும் நீங்கள் பல வீடுகளை நேரில் சென்று பார்த்தால்தான் முடிவு செய்ய முடியும். வீடுகளை VR காட்சியாகப் பார்ப்பதன் மூலம் நேரம், செலவு மற்றும் அலைச்சலைக் குறைக்க முடிகிறது.

நன்றி

  1. Analytics India Magazine – Home And Interior Designing Tools

இத்தொடரில் அடுத்த கட்டுரை: VR மற்ற சில பயன்பாடுகள்

உற்பத்தி (Manufacturing). சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் (Tourism and Hospitality). சில்லறை விற்பனை (Retail). தரவை உருவகித்தல் (Data visualisation).

ashokramach@gmail.com

%d bloggers like this: