“தமிழின் நிகழ்காலம் குறித்து வருந்துகிறேன். எதிர்காலம் குறித்து அஞ்சுகிறேன்”
தமிழின் நிகழ்காலப் போக்கு
தமிழ் இன்று அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மொழியாகவும், உயர் கல்வி மற்றும் வணிக மொழியாகவும் இல்லை. ஆகவே உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியிலும், பணியிடத்திலும் ஓரளவாவது ஆங்கிலத்தில் பரிச்சயம் இல்லையெனில் யாரும் சமாளிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மைதான். மேலும் விற்பனை மற்றும் சேவைத் துறையில் பணிபுரிந்தாலோ, மென்பொருள் உருவாக்குவோரும் மற்றவர்களும் வெளிநாட்டவருடன் சேர்ந்து வேலைசெய்ய வேண்டியிருந்தாலோ அல்லது தகவல் அழைப்பு மையத்தில் வெளிநாட்டவர் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றாலோ சரளமாக ஆங்கிலம் பேச எழுத முடிந்தாலொழிய வேலை செய்ய முடியாது.
ஆனால் ஆங்கிலத் தொடர்புள்ள எதையும் மேம்பட்டதென்றும், சிறப்பானதென்றும், நவநாகரிகமானதென்றும் பலரும் நினைக்கிறார்கள். மழலையர் பள்ளியில் சேர குழந்தையின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துவதற்காகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே பேசவைக்குமாறு பல பள்ளிகள் வற்புறுத்துகின்றன. பிற்காலத்தில் வேலைவாய்ப்பில் பின்தங்கிவிடாமல் இருக்க, பெற்றோர்களும் இந்த அறிவுரைகளைத் தீவிரமாகப் பின்பற்றுகிறார்கள். இதன் விளைவாகக் குழந்தை ஆங்கிலம் எழுதவும், பேசவும் நன்றாகக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் தன் தாய்மொழியில் ஆர்வமற்றுப் போகிறது. மொழி என்பது தொடர்பு கொள்வதற்கான வழி மட்டுமல்ல. கலாச்சார, வட்டார மற்றும் தேசிய அடையாளத்துக்கு மொழி மிகவும் வலுவான நங்கூரமாகவும் உள்ளது. மொழி என்பது அம்மொழி பேசும் மக்களின் மனப்பாங்கு மற்றும் அவர்கள் கூட்டாக எதை மதிக்கிறார்கள் என்பதன் பிரதிபலிப்பும் தான்.
இணையத்தில் ஒருவர் அங்கலாய்க்கிறார், “இது சோகமானது ஆனால் உண்மை. ஓர் இந்தியனாக நான் பார்க்கிறேன் உண்மையில் ஒரு நபரின் திறமையை எப்படிப் பலர் அளவிடுகிறார்கள் என்று – ஆங்கில மொழியில் அவர்களால் சரளமாகப் பேச முடிகிறதா என்பதை வைத்து.” மற்றொருவர் சொல்கிறார், “நான் ஆங்கில மொழி பிடித்தவர்களை எதிர்ப்பவன் அல்ல. ஆனால் ஆங்கிலம் அல்லாத மொழி பேசுபவர்கள் எல்லோருக்கும் குறைவான எழுத்தறிவு இருப்பதாக எண்ணுவதை எதிர்க்கிறேன்.” ஆனால் இம்மாதிரி மனப்பாங்கு உள்ளவர்கள் குறைந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பாக இளைய தலைமுறையில் கவலைதரும் அளவில் குறைந்து வருகிறார்கள் என்பதும் வருந்தத் தக்க உண்மைதான்.
தமிழின் எதிர்காலத்தை ஏன் இருள் சூழ்ந்து விட்டது?
மேற்கண்டவாறு முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடும்போது இன்றைய தலைமுறையினரின் உளப்பாங்குகளும் அணுகுமுறையும் மாறியுள்ளதும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்தத் தலைமுறையின் உளப்பாங்கும் அணுகுமுறையும் ஆழமாகத் தெரிய தமிழ் இளைஞர் மேற்கோள் எதுவும் நேரடியாகக் கிடைக்கவில்லை. ஆனால் இந்தச் சீன இளைஞரின் மேற்கோள் இந்தச் சந்தர்ப்பத்தில் பொருத்தமானதே.
“நான் ஒரு மொழியை நாணயம்போலப் பார்க்கிறேன். மொழிகளின் உலகில் ஆங்கில மொழி நாணயங்களின் உலகில் அமெரிக்க டாலர்கள் போன்றது. அதிகம் பேர் அதனைப் பயன்படுத்துவதால் அதன் மதிப்பு அதிகரிக்கிறது. ஆங்கிலம் ஏற்கனவே ஒரு பெரிய பிணைய விளைவுகளைக் (network effect) கொண்டுள்ளது. உலகமயமாக்கல் மேலும் ஆகிக்கொண்டிருப்பதால் இந்த நன்மையும் மேலும் அதிகரிக்கத்தான் செய்யும். எனக்கு ஆங்கிலம் சரளமாகத் தெரியவரும் முன்னரே சீன மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை, என் தாய் மொழியாக இருந்த போதிலும், படிப்பதை நிறுத்தி விட்டேன். காரணம் ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் சீன மொழியில் எழுதப்பட்ட நூல்களில் கருத்துக்களின் வறுமைதான்.” இம்மாதிரி இளைய தலைமுறையினர் தங்களுடைய வேலை வாய்ப்புக்கும் தொழில் வாழ்க்கைக்கும் எது முக்கியம் என்று பார்த்து அதில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். வழியில் தாய்மொழியும், பண்பாடும், கலாச்சாரமும் உடன் சேதம் (collateral damage) ஆகி விடுகின்றன. இளைய தலைமுறையைக் குறை சொல்லும் அதே நேரத்தில், அவர்களுடைய பெற்றோர்களாகிய நாமும்தான் பல சந்தர்ப்பங்களில் இதற்கு உடந்தையாகவும் தூண்டுபவர்களாகவும் இருக்கிறோம், கல்வி மற்றும் வேலையில் கவனம் முக்கியமென்றும் வேறெதிலும் திசை திருப்ப வேண்டாம் என்றும் வற்புறுத்துவதனால், என்பதையும் மறந்து விடக் கூடாது.
“தமிழின் நிகழ்காலம் குறித்து வருந்துகிறேன். எதிர்காலம் குறித்து அஞ்சுகிறேன்.”
2015 இல் ஒரு நேர்காணலில் கவிஞர் வைரமுத்துவைக் கேட்கிறார்கள், “இன்றைய தலைமுறையினரிடையே தமிழ்ப் பற்றும், இலக்கிய நாட்டமும் உள்ளதா?” என்று. அவர் கூறிய பதில் இது, “தமிழின் நிகழ்காலம் குறித்து வருந்துகிறேன். எதிர்காலம் குறித்து அஞ்சுகிறேன். இது தமிழுக்கு மட்டுமான பின்னடைவாக இல்லாமல் தேசிய மொழிகள் அனைத்துக்குமான பின்னடைவாகக் கருதுகிறேன். ஒரு தமிழன் என்பதால் தமிழ் மொழி குறித்துக் கூடுதல் கவலை அடைகிறேன். எழுத்து, பேச்சு என்ற இரண்டு வடிவங்களில்தான் ஒரு மொழி நிலை கொள்கிறது. தமிழ் படித்தால் என்ன பயன் என்று கருதுகிற ஒரு கூட்டம் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்விக்கு ஆற்றுப்படுத்துகிறது. காலப்போக்கில் தமிழ் எழுத்து அடையாளத்தை இழந்துவிட்டு பேச்சு மொழியாக மட்டும் சுருங்கிவிடும் விபத்து நிகழாது என்பதற்குக் காரணங்கள் குறைவாக உள்ளன. தாய்நாட்டிலேயே தமிழன் மொரீசியஸ் தமிழன் ஆகி விடுவானோ என்று அஞ்சுகிறேன். இலங்கைத் தமிழன் நாட்டை இழந்தான். இந்தியத் தமிழன் மொழியை இழந்தான் என்றாகிவிட்டால் செவ்வாய்க் கிரகத்தில் குடியேறுபவனா தமிழ் பேசப் போகிறான்? தாய்மொழி என்பது வயிற்றுப்பாட்டுக்கானதல்ல; பண்பாட்டுக்கானது என்று தமிழினம் புரிந்துகொள்ள வேண்டும். மொழியை இழப்பவன் நிலத்தை இழக்கிறான். நிலம் இழப்பவன் அடையாளம் இழக்கிறான்.”
இருமொழிக் குழந்தைகளுக்கு அதிகத் திறன் மற்றும் படைப்பு சிந்தனை என்று புதிய ஆய்வு
பல்வேறு மக்கள் ஒரு பொதுவான மொழியைப் பகிர்ந்து கொள்வதை ஊக்குவிக்க வலுவான பொருளாதார காரணங்கள் உள்ளன. மொழிபெயர்ப்புக்குச் செலவு அதிகம். இருமொழிக் கொள்கைக்கு ஒரு சிறிய ஆனால் அளவிடக்கூடிய அறிவாற்றல் செலவு (cognitive cost) உள்ளது. இதைத்தவிர கல்விக்கும் அதிக செலவு செய்ய வேண்டும் என்பதெல்லாம் உண்மைதான். இதற்கு மாறாக ஒரு மொழிக்கு மேல் கற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு ஒரு கற்றல் நன்மை உண்டு என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. ஸ்காட்லாந்தில் உள்ள ஸ்ட்ராத்கிளைட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களின்படி ஒரு மொழி மட்டும் தெரிந்த குழந்தைகளைவிட இவர்களுக்குச் சிறந்த சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் படைப்புச் சிந்தனை உண்டு. மொழிகளுக்கு இடையில் மாறுவதற்கான மன விரைவியக்கம் மற்றவகை சிந்தனைகளை வளர்ப்பதற்கான திறன்களை உருவாக்கியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
சில புலம்பெயர்ந்த தமிழ் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள உதவுவதற்காக மிகவும் முயற்சி எடுப்பது மகிழ்ச்சி ஊட்டுகிறது. இந்தப் பிள்ளைகள் பெற்றோரின் உதவியுடன் தமிழை இணையத்தில் கற்றுக் கொள்கிறார்கள். அல்லது வார இறுதியில் உள்ளூரில் தன்னார்வலர்கள் நடத்தும் தமிழ் வகுப்புகளுக்குச் செல்கிறார்கள்.
தங்ளிஷ் அல்லது தமிங்கிலம் நோயின் மூலகாரணம் என்ன?
நவநாகரிகம் என்று கருதி ஆங்கிலமும் தமிழும் கலந்த தங்ளிஷ் அல்லது தமிங்கிலம் மொழியில் பேசுவது எழுதுவதைப் பற்றிப் பலர் அச்சிலும் இணையத்திலும் புலம்புகிறார்கள். இவையெல்லாம் நோயின் அறிகுறிகளே. இதற்குப் பதிலாக இந்த நோயின் மூலகாரணத்தைக் கண்டறிவதற்கு இக்கட்டுரைத் தொடரில் முயற்சி செய்வோம். தொடர்ந்து இரண்டு ஆங்கில மொழிப் பேரரசுகள். இவற்றில் ஆங்கிலேயப் பேரரசின் குடியேற்ற நாடாக நம் நாடு ஆயிற்று. நாம் விடுதலை பெற்ற பின்னர் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணை 22 மொழிகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. ஆகவே ஆங்கிலம் தொடர்பு மொழியாகத் தேவைப்படுகிறது. பின்னர் உலகமயமாக்கலும், அமெரிக்க கலாச்சார ஆதிக்கமும். மேலும் இப்பெரிய போக்குகள் தகவல் தொழில்நுட்பம் மூலம் துரிதப்படுத்தப்பட்ட விதம். அதிக சதவீதம் வேலையின்மையும் மற்றும் நிலையற்ற, தகுதிக்குக் குறைவான வேலை நிலையும். வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவதற்காகப் பெற்றோர்கள் ஆங்கிலக் கல்விக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பது. இவைதான் இந்த நோயின் மூலகாரணங்கள் போல் தெரிகின்றன. இவற்றை அடுத்த சில கட்டுரைகளில் ஆழ்ந்து ஆராய்வோம்.
————————————————–
இத்தொடரில் அடுத்த கட்டுரை: தொடர்ந்து இரண்டு ஆங்கிலப் பேரரசுகள்
பிரிட்டன் தன்னைப் பேரரசாகக் கட்டி அமைத்ததுதான் ஆங்கில மொழியின் உலகளாவிய பரவலின் முதல் கட்டம். அமெரிக்காவின் கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கின் உலகளாவிய பரவல் 20 ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழியின் மேலாதிக்க நிலையை மேம்படுத்துவதற்கு கணிசமாகப் பங்களித்தது.