தமிழும் விக்கியும்

விக்கிப்பீடியாவைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. இணையத்தில் நுழைந்துள்ள மிக மிகப் பெரும்பாலானோர் விக்கிப்பீடியாவை ஒரு முறையேனும் பயன்படுத்தியிருப்பர்.  கல்லூரியிலும் பள்ளியிலும் தரப்படும் வீட்டுப்பாடங்களை முடிக்கவும் நண்பர்களிடையே ஏற்படும் விவாதங்களை வெல்லவும், எங்கோ கேள்விப்பட்ட விசயத்தைப் பற்றி மேலும் அறியவும் நம்மில் பலரும் கண்டிப்பாக விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தியிருப்போம். ஏதோ ஒன்றைத் தேடிப் போய் நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்கில் விக்கியில் ஆழ்ந்திருப்போம். 

 

ஆம் ஆங்கில விக்கிப்பீடியா பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் தமிழிலும் விக்கிப்பீடியா இருப்பதை நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை. தமிழிலும் விக்கி உள்ளது, விக்கியர்கள் உள்ளனர், தினமும் பல பத்து கட்டுரைகள் உருவாகி வளருகின்றன. சுமார் 35 லட்சம் கட்டுரைகளும் 40000 பயனர்களும் கொண்ட ஆங்கில விக்கி ஒரு மதங்கொண்ட யானையென்றால் 43000 கட்டுரைகளும் 100 பயனர்களும் கொண்ட தமிழ் விக்கி குரங்குப் பெடல் போடும் ஒரு சிறுவன். 2001 இல் ஆங்கில விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. இரு ஆண்டுகள் கழித்து தமிழில் விக்கிப்பீடியா தொடங்கும் முயற்சிகள் ஆரம்பமாகின. செப்டம்பர் 2003 முதல் பதினெட்டு மாதங்களில்  மீடியாவிக்கி மென்பொருளின் இடைமுகம் முழுமையாகத் தமிழாக்கம் செய்யப்பட்டது. ஒரு சில பயனர்களே தமிழ் விக்கியிலிருந்த அக்காலத்தில் தமிழ் விக்கியின் மூத்த முன்னோடியாகக் கருதப்படும் மயூரநாதன் ரத்னவேலுப்பிள்ளையின் முயற்சியில் தமிழ் விக்கி தவழத் தொடங்கியது.  2005 முதல் கட்டுரைகளும் பயனர் எண்ணிகையும் சற்று அதிக அளவில் கூடத் தொடங்கின.  திட்டங்கள் வகுக்கப்பட்டு, விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. பிற விக்கித் திட்டங்களான விக்சனரி (விக்கி +டிக்சனரி),  விக்கி செய்திகள், விக்கிமூலம் போன்றவையும் செயல்படத் தொடங்கின. 2005-2010 தமிழ் விக்கித் திட்டங்களின் முதற்கட்ட வளர்ச்சிக்காலம் எனலாம். ஒரு ஆரோக்கியமான தன்னார்வலத் திட்டத்துக்குத் தேவையான விதிமுறை மற்றும் செயல்பாட்டுச் சட்டகங்கள் உருவாகியது இக்காலகட்டத்தில் தான்.

 

ஜூன் 2010 இல் கோவையில் நடைபெற்ற தமிழ்ச்  செம்மொழி மாநாடு தமிழ் விக்கியின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பகுதியாக தமிழ்நாடு அரசின் உதவியுடன் ஒரு கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தியது தமிழ் விக்கிப்பீடியா. அதன் மூலம் தமிழ் விக்கி பரவலாக அறியப்படலாயிற்று. இதனுடன் தமிழ் இணையக் கல்விக்கழகத்தினர் தங்களது கலைச் சொல் பட்டியலை தமிழ் விக்சனரிக்குக் கொடையாக வழங்கினர். ஜூன் 2010 முதல் நடப்பு வரையான காலத்தை தமிழ் விக்கியின் இரண்டாவது வளர்ச்சிக் காலகட்டம் எனலாம். கட்டுரை எண்ணிக்கையும், பயனர் எண்ணிக்கையும் முன்பைவிட மும்மடங்கு அதிகரித்துள்ளது. தன்னார்வலத்திட்டங்களின் மிகப்பெரும் சிக்கலான தன்னார்வலத் தொய்வை சமாளித்து, புதிய வருகைகள் எண்ணிக்கை  பங்களித்து ஓய்ந்த பழைய பயனர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்து விட்டது.

தமிழ் விக்கியின் மிகப்பெரிய பலம் அதன் பயனர்களின் பலதரப்பட்ட பின்புலமே. மொத்த தமிழ் மக்கட்தொகையில் 20% கூட இல்லாத ஈழத்தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும்  தமிழ் விக்கிப் பயனர்களில் கிட்டத்தட்ட பாதி உள்ளனர். தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, வளைகுடா நாடுகள், கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என உலகின் பல மூலைகளில் இருந்தும் தமிழ்ப் பயனர்கள் பங்காற்றுவதால், தமிழ் விக்கியின் உள்ளடக்கங்கள் பல்வேறு விசயங்களில் பரந்துள்ளன.  பொதுவாக கட்டற்ற தன்னார்வலத் திட்டங்களில் தொழில்நுட்பத் துறை இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் அதிக அளவில் காணப்படுவார்கள். ஆனால் விக்கியில் இவர்களைத் தவிர பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஓய்வு பெற்றவர்கள், இதழாளர்கள், கணக்கியல், உயிரியல், மருத்துவம் படித்தவர்கள் என பலதரப்பட்ட பயனர்கள் உள்ளனர்.  84 வயது முதியவர்கள் முதல் பதின்ம வயது மாணவர்கள் வரை பலதரப்பட்டவர்களாலும் விக்கிக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன. தமிழென்றால் இலக்கியம், இலக்கணம், திரைப்படம், அரசியல், சமையல்குறிப்புகள், சோதிடம் என்ற சுருங்கிய வட்டத்தில் தான் இருக்கும் என்ற மாயப்பிம்பம் தமிழ் விக்கியால் உடைக்கப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், உலக வரலாறு, விளையாட்டு, மருத்துவம், இறையியல், மெய்யியல், கட்டிடக்கலை என அனைத்து துறைகளிலும் கட்டுரைகள் எழுதப்படுகின்றன.  தமிழில் வேறெங்கும் காணக்கிடைக்காத அறிவு வளங்கள் விக்கியில் கிடைக்கின்றன என்று உறுதியாகச் சொல்கிறேன்.

 

கணினியில் தமிழ் வராது என்று பூச்சி காட்டி, கணினியில், இணையத்தில் தமிழெதற்கு என்று ஒரு காலத்தில் பரப்புரை செய்யப்பட்டது. அதனை முறியடித்து இன்று சமூக வலை முதல் கட்டற்ற மென்பொருள் வரை தமிழ் வந்து விட்டது. இதற்கு காரணம் தமிழ் இலக்கிய/திரைப்பட வட்டத்துக்குள் சுருங்கக் கூடாதென்று முனைப்பாக இருந்த உங்களைப் போன்ற தொழில்நுட்ப ஆர்வலர்களே. இன்று இணையத்தில் எங்கும் தமிழ் என்பது ஓரளவு நிறைவேறி விட்டது. தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு இணையத்தில் தமிழில் ஏராளமான உள்ளடக்கம் தேவைப்படுகிறது.  ஒரு புது விசயத்தை ஆங்கிலத்தில் தேடி தான் படிக்க வேண்டும் என்ற நிலையை உடைக்க வேண்டும். அறிவை வளர்க்க ஆங்கிலத்தை நாடத் தேவையில்லை தமிழே போதும் என்ற நிலையை உருவாக்க நம்மிடம் உள்ள முதன்மையான ஆயுதம் விக்கிப்பீடியா. கட்டுரை எழுதுவது மட்டும் தான் விக்கிப்பங்களிப்பல்ல, புகைப்படம் எடுத்தலும், நிரலாக்கமும் கூட விக்கிப்பங்களிப்புகளே. விக்கி இயங்கும் மீடியாவிக்கி மென்பொருளில் தமிழுக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் தேவையான கருவிகளும் நீட்சிகளும் நிறையத் தேவைப்படுகின்றன. உங்களைப் போன்ற கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்களின் வருகை தமிழுக்கும் விக்கிக்கும் பெரும் பலம் சேர்க்கும். வாருங்கள் தமிழ் விக்கிக்குப் பங்களியுங்கள், புதியதொரு தமிழுலகத்தை உருவாக்கும் முயற்சியில் இணையுங்கள்.

 

தமிழ் விக்கிப்பீடியா தொடுப்பு ta.wikipedia.org

கோவையைச் சேர்ந்த சோடாபாட்டில் (பால ஜெயராமன் ) தமிழ் விக்கிப்பீடியா நிருவாகிகளில் ஒருவர். இரண்டு ஆண்டுகளாக ஆங்கில மற்றும் தமிழ் விக்கித் திட்டங்களில் பங்களித்து வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவில் அவரது பயனர் பக்கம் – tawp.in/r/1nkh

மின்னஞ்சல் : sodabottle@gmail.com

%d bloggers like this: