தாங்கும் பொருட்களை நீக்குதல் (Support Removal) மற்றும் பிசினை சுத்தம் செய்தல்
இழையை உருக்கிப் புனைதல் (FDM) முறையில் அச்சு எந்திரத்தின் அடித்தட்டிலிருந்து எடுத்து ஆறியபின் முதலில் பாகங்களின் தாங்கும் பொருட்களை அகற்றவேண்டும். ஒளித் திண்மமாக்கல் (stereo lithography) முறையில் ஒளி பட்டால் திண்மமாகும் நெகிழி (photopolymers) திரவங்களைப் பயன்படுத்துவோம் என்று பார்த்தோம். ஆகவே இம்முறையில் உருவாக்கிய பாகங்களில் தாங்கும் பொருட்களை அகற்றும் முன்னர் தேவையற்று ஒட்டியிருக்கும் திரவப் பிசினை முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.
தூய்மை செய்தல் (Cleaning)
பசையைப் பீச்சுதல் (Binder Jetting) மற்றும் சீரொளி சிட்டங்கட்டல் போன்ற துகள் வடிவில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களில் முதலில் மேலே ஒட்டியுள்ள துகள்களை அகற்ற வேண்டும். இதன் பின்னர் மேற்பரப்பு சீர்மை செய்யலாம்.
உலோக பாகங்களில் அச்சடித்த பின் வரும் வேலைகள்
உலோக பாகங்களை 3D அச்சிட்டபின் கணிசமாக அதிக வேலைகள் செய்ய வேண்டும். அச்சிட்ட உலோக பாகங்களை கீழிறக்கியபின் முதலில் அவற்றின் மேலுள்ள துகள்களை அகற்ற வேண்டும். அடுத்து அச்சு எந்திரத்தின் அடித்தகட்டிலிருந்து அந்த பாகத்தை வெட்டி எடுக்க வேண்டும்.
முடிவில் தேவைக்கேற்ப மேற்பரப்பு சீர்மை செய்தல் (Finishing)
வடிவியல் துல்லியம் மற்றும் பார்வையை மேம்படுத்துவதற்காக 3D அச்சிடப்பட்ட பாகங்கள் மேற்பரப்பு நகாசு வேலைக்கு உட்படுத்தப்படலாம். இத்தகைய இரண்டாம் நிலை செயலாக்கப் படிகளில் நெகிழி பாகங்களுக்கு மணல் அடித்து பிசிர் நீக்கல் (sanding), நிரப்புதல், வண்ணம் பூசுவது மற்றும் உலோக பாகங்களுக்கான எந்திர வெட்டு ஆகியவை அடங்கும்.
அச்சடித்த பின் வரும் வேலைகளைப் பெரும்பாலும் கைமுறையாகச் செய்யவேண்டியிருக்கிறது
அச்சடித்த பின் வரும் செயல்பாடுகளில் பெரும்பாலானவை இன்னும் கைமுறை செயல்களாகும். ஏனெனில் இவற்றைத் தானியங்கியாகச் செய்வது கடினம். திறமையான பணியாளர்கள்தான் இவற்றில் முக்கிய பணிகளைச் செய்ய வேண்டும். ஆகவே, இம்மாதிரி தயாரிப்பிற்குப் பிந்தைய கட்டத்தை நிர்வகிக்கக் கைமுறைகளைப் பயன்படுத்துவது தயாரிக்க எடுக்கும் நேரங்களையும் உற்பத்திச் செலவுகளையும் கணிசமாக அதிகரிக்கும்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: புனைதல் செயல்முறையின் பாவனையாக்கல் (Simulation)
வெப்பவிசையியல் விளைவால் (thermo-mechanical effect) உருக்குலைவு. செயல்முறையைப் புரிந்துகொள்ளவும் காட்சிப்படுத்தவும் பாவனையாக்கல் மென்பொருள் உதவுகின்றது. வெப்பநிலை பரவல் (Temperature distribution).