பல சந்தர்ப்பங்களில் பதிலி பாகம் (Replacement Part) மட்டும் தனியாகக் கிடைப்பதில்லை
தயாரிப்புகள் அல்லது சாதனங்களின் பாகங்களை இழந்தாலோ அல்லது உடைந்தாலோ அதன் விளைவுகள் சிரமமானவை முதல் நாசம் விளைக்கும் வரை இருக்கலாம். எடுத்துக்காட்டாக காரின் பின் விளக்கை மூடியுள்ள நெகிழி பாகம் உடைந்துவிட்டால் அதை மட்டும் மாற்ற இயலாது. முழு பின் விளக்குத் தொகுப்பையே மாற்ற வேண்டுமென்று சொல்லி செலவு மிக அதிகமாகிவிடும். ஏனெனில் தயாரிப்பு நிறுவனம் அந்தப் பதிலி பாகத்தை மட்டும் தனியாக விற்பதில்லை, முழுத் தொகுப்பாகத்தான் விற்பனை செய்கிறார்கள்.
மாற்று மற்றும் உதிரி (spare) பாகங்களை நுகர்வோரே உற்பத்தி செய்துகொள்ள 3D அச்சு முறை உதவுகிறது. கோளாறைச் சரி செய்ய அதிகச் செலவு செய்ய வேண்டிய நாட்களை மாற்றிவிடும்.
பழைய எந்திரங்கள் மற்றும் சாதனங்களுக்கு உதிரி பாகங்கள் கிடைப்பதேயில்லை
உங்களிடமுள்ள எந்திரங்கள் மற்றும் சாதனங்கள் பழைய மாதிரியாக இருக்கலாம். இவை தற்சமயம் உற்பத்தியில் இல்லையென்றால் உதிரி பாகங்கள் சந்தையில் கிடைப்பது அரிது. ஒரு உதிரி பாகம் கிடைக்கவில்லை என்பதற்காக மதிப்புமிக்க எந்திரங்கள் அல்லது சாதனங்களை கழிவுப்பொருளாகத் தூக்கி எறிய வேண்டிவரும். எப்போதாவது வாங்கப்படும் மாற்றுப் பாகங்களை அதிக செலவில் சேமித்து வைக்க வேண்டிய பிரச்சினை உற்பத்தியாளர்களுக்கு இனி இருக்காது. மேலும் நுகர்வோர் தங்கள் பழைய மாதிரி பாகங்களை மாற்றுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.
பதிலி பாகம் தயாரிப்பு எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டாக ஆஷ்லே அறைகலன் (Ashley Furniture) தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள பொறியாளர்கள் ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளி வரை துளைபோடும் இயந்திரத்திற்கு (point to point drilling machine) வெற்றிடத் தக்கவைப்பு வளையத்தை (vacuum retainer ring) மாற்ற 3D அச்சைப் பயன்படுத்தினர். முழுத் தொகுப்பையும் ரூ 60,000 க்கு வாங்குவதற்குப் பதிலாக ரூ 100 க்கு கச்சாப் பொருள் வாங்கி மாற்றுப் பாகத்தை மட்டும் அச்சிட முடிந்தது. முதலில் தேய்ந்த பாகத்தின் வடிவத்தை வருடி (scan) ஒரு வரைபடம் தயாரித்தார்கள். அப்படத்தைக் கணினி உதவி பென்பொருள் (CAD – Computer Aided Design) பயன்படுத்தித் தேவையான மாற்றங்கள் செய்து 3D அச்சு எந்திரத்துக்கு அனுப்பத் தேவையான வடிவில் (format) சேமித்துக் கொண்டார்கள். இந்த வடிவத்தை வைத்து 3D அச்சு எந்திரத்தில் பாகத்தைத் தயாரித்தார்கள். மேற்படி கணக்கில் 3D அச்சு எந்திரம் மற்றும் பொறியாளர்களின் நேரச் செலவு சேர்க்கவில்லை.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: மூக்குக் கண்ணாடிகளும் அவற்றின் சட்டங்களும்
மூக்குக் கண்ணாடிகளை அவரவருக்குப் பொருந்துமாறு தனிப்பயனாக்கல் அவசியம். மூக்குக் கண்ணாடி வில்லைகளை (lens) 3D அச்சிட உதவும் தொழில்நுட்பம். மூக்குக் கண்ணாடி சட்டங்களையும் விருப்பமைவு செய்ய இயலும்.