இனிவரும் கட்டுரைகளில் முப்பரிமாண அச்சிடல் எம்மாதிரி வேலைகளுக்குப் பயன்படுகிறது என்பது பற்றி விவரமாகப் பார்ப்போம்.
பல பள்ளிகள் தங்கள் பாடத்திட்டங்களில் 3D அச்சு முறைகளை இணைத்து வருகின்றன. கல்விக்கான 3D அச்சின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், விலையுயர்ந்த கருவிகள் தேவையில்லாமல் மாணவர்கள் முன்மாதிரிகளை உருவாக்க முடியும். இதன் மூலம் மாணவர்களை அவர்களின் எதிர்காலத்திற்கு சிறப்பாகத் தயார்படுத்த உதவுகிறது. சித்திரமும் கைப்பழக்கம் என்பது பழமொழி. ஆகவே மாணவர்கள் கைமுறையாக மாதிரிகளை வடிவமைத்துத் தயாரிப்பதன் மூலம் 3D வடிவியல் பற்றியும் 3D அச்சின் பயன்பாடுகளைப் பற்றியும் நுணுக்கமாக அறிந்து கொள்ள முடியும். இம்மாதிரி கைமுறைப் பயிற்சி வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் படித்து மட்டுமே தெரிந்து கொள்வதைவிட நல்ல புரிதல் கிடைக்கும்.
நடைமுறையில் உருவாக்குதல் வெறும் கணினித் திரையில் பார்ப்பதைவிடப் பலமடங்கு பயனுள்ளது
வெறும் காகிதம் அல்லது கணினித் திரையில் படைப்புத்திறன் எண்ணங்களை வடிவமைப்பது ஓரளவுக்கு மட்டுமே கற்பதற்கு உதவும். அம்மாதிரி வடிவமைத்த பாகத்தையோ அல்லது தயாரிப்பையோ நடைமுறையில் உருவாக்கும் பாலமாக முப்பரிமாண அச்சிடல் வழி செய்கிறது.
முப்பரிமாண அச்சு எந்திரங்கள் இப்போது சில பள்ளிகள் மற்றும் காட்சியகங்களில் காணப்படுகின்றன. மாணவர்கள் வகுப்புகளில் மற்றும் திட்டங்களில் பயன்படுத்த பல்கலைக்கழகங்களில் 3D அச்சு எந்திரங்கள் உள்ளன. கல்வியாளர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் பல நிறுவனங்கள் 3D அச்சிடல் பயன்பாடுகளில் பயிற்சியளித்து சான்றிதழ் வழங்குகின்றன.
3D அச்சு கருவிகள் STEM (Science, Technology, Engineering and Mathematics) கல்வியில் புரட்சியை ஏற்படுத்துகின்றன. வகுப்பறையில் மாணவர்களால் குறைந்த செலவில் விரைவான முன்மாதிரிகளை உருவாக்கும் திறனை வழங்குவதோடு, திறந்த வன்பொருள் வடிவமைப்புகளிலிருந்து குறைந்த விலை உயர்தர அறிவியல் உபகரணங்களை உருவாக்குகின்றன.
வடிவமைப்பு, பொறியியல் மற்றும் கட்டடக்கலை கோட்பாடுகளை நன்கு அறிந்துகொள்ள முடியும்
வடிவமைப்பு, பொறியியல் மற்றும் கட்டடக்கலை கோட்பாடுகளை தேடலாய்வு செய்வதன் (exploring) மூலம் மாணவர்கள் பல்வேறு 3D அச்சு பயன்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்கின்றனர். நுண்ணிய சேகரிப்புகளை சேதப்படுத்தாமல் வகுப்பறையில் படிப்பதற்கு படிமங்கள் (fossils) மற்றும் வரலாற்று கலைப்பொருட்கள் போன்ற அருங்காட்சியகப் பொருட்களை நகல் எடுக்க முடிகிறது. அவர்கள் நில அமைப்பு வரைபடங்களில் (topographic maps) ஒரு புதிய, முப்பரிமாண கண்ணோட்டத்தைப் பெற முடியும்.
3D மாதிரிகள் பல்வேறு துறைகளுக்கு உதவுகின்றன
வரைபட வடிவமைப்பு (Graphic design) மாணவர்கள் சிக்கலான வேலை செய்யும் பாகங்கள் கொண்ட மாதிரிகளை எளிதாக உருவாக்க முடியும். அறிவியலில் உள்ள மாணவர்கள் மனித உடலில் உள்ள உறுப்புகளின் குறுக்குவெட்டு மற்றும் பிற உயிரியல் மாதிரிகளை உருவாக்கி படிக்கலாம். வேதியியல் மாணவர்கள் மூலக்கூறுகள் மற்றும் இரசாயன கலவைகளின் 3D மாதிரிகளை உருவாக்க முடியும்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: துரித முன்மாதிரி மற்றும் பெருந்திரள் தனிப்பயனாக்குதல்
3D அச்சிடுதல் முதன்முதலில் துரித முன்மாதிரிக்கான வழிமுறையாகத்தான் உருவாக்கப்பட்டது. பேரளவு உற்பத்தியில் பாரம்பரிய முறையே செலவைக் குறைக்கும். பெருந்திரள் தனிப்பயனாக்குதல் போன்ற சேவைகளுக்கு 3D அச்சிடல் அவசியம்.