யூனிக்ஸ்(unix)பிறந்த கதை

By | June 3, 2025

இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் சேவையகங்கள்(servers), மேககணிமை(cloud computing) போன்ற தொழில்நுட்பங்களில் linux இன் பங்கை மறுக்க முடியாது. மறக்க முடியாது. சூப்பர் கம்ப்யூட்டர்களிலும் இவற்றின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது.

தற்காலத்தில், மொபைல் உள்ளிட்ட பெரும்பாலான கருவிகளில் பயன்படுத்தப்படும் இயங்குதளங்களுக்கும், முன் குறிப்பிட்ட லினக்ஸ் போன்ற கட்டற்ற சேவைகளுக்கும், முன்னோடியாக விளங்கும் யூனிக்ஸ் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்

சிறு இடைவேளைக்குப் பிறகு வாசகர்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

அட்டை கணினிகள்

முன்பெல்லாம் சிறு குழந்தைகள் அட்டைப்பெட்டிகளில் படங்களை வரைந்து விளையாடுவார்கள். அதை தொலைக்காட்சி,கம்ப்யூட்டர் மற்றும் தங்களுக்கு தோன்றும் தொழில்நுட்ப கருவிகள் என நினைத்து மகிழ்ந்து விளையாடுவார்கள்.

அடிப்படையில், ஆரம்பகால கணினிகளும் அட்டைகளின் மூலமே இயங்கின. Punch cards என அழைக்கப்படும் அட்டைகளைப் பயன்படுத்தி மட்டுமே உள்ளீடுகள் மற்றும் வெளியீடுகளை பெற முடியும். சிக்கலான கணக்கீடுகளை செய்வதற்கும் வேறு வழி கிடையாது. தற்போது இருப்பது போல கலர் கலராக படங்களை எல்லாம் பார்க்க முடியாது.

விஷுவல் கோடிங் என்பது சாத்தியமில்லாத ஒன்று. முழுக்க முழுக்க இந்த அட்டைகளில் எழுதப்படும் நிரல்களை கணினிக்கு வழங்கி அதை பரிசீலனை செய்யும் கணினி ஆனது மீண்டும் இதுபோன்ற அட்டைகளிலேயே வெளியீடுகளை வழங்கும். இவற்றை அடிப்படையாக வைத்து மட்டுமே கணினிகளை இயக்க முடியும்.1000வரிகள் நிரல் என்றால் 1000 punch cards தேவை.உலகளாவிய அளவில், இதுபோன்ற கணினிகளை இயக்கக்கூடிய வல்லுனர்கள் மிக மிக குறைவாகவே இருந்தனர்.

நம் கணியத்தில் கூட, விக்கி மூல பங்களிப்பாளர் திரு. தாஹா புகாரி அவர்களோடு ஒரு நேர்காணலை செய்திருந்தேன். அதில் கூட,punch cards கணினிகளில் பணியாற்றியது குறித்து அவர் தெரிவித்து இருந்தார்.

நிலைமை இப்படி இருக்கும் காலத்தில் தான், 1950 களின் இறுதியில் இதற்கு தீர்வு காணும் வகையிலும், திறன்மிக்க, அனைத்து விதமான கருவிகளிலும் இயங்கும் வகையிலான இயங்குதளத்தை வடிவமைக்கும் திட்டத்தை அமெரிக்காவின் MIT,AT&T மற்றும் bell laboratories ஆகியன சேர்ந்து தொடங்கின.

அட்டை கணினிகளுக்கு முடிவு கட்டவும் கண்களால் பார்த்து மனம் குளிர உணர்ந்து நிரல் எழுதுவதற்கும் காலம் பிறக்கத் தொடங்கியது.

யூனிக்ஸ் திட்டம்

இவ்வாறு இவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்த இயங்குதளத்திற்கு multics என பெயர் சூட்டப்பட்டது. இந்த திட்டத்தில் பணியாற்றி வந்த டென்னிஸ் ரிச்சி மற்றும் கென் தாம்சன் ஆகியோர் சிறிய வகை கணினிகளில் இயங்கும் வகையிலான இயங்குதளங்களை வடிவமைக்கலாம் என தலைமை பொறுப்பில் இருந்தவர்களுக்கு தெரிவித்தனர்.

ஆனால், இந்த திட்டத்திற்கு அவர்களுக்கு ஒப்புதல் கிடைக்காத காரணத்தால், இவர்கள் ரகசியமாக இந்த இயங்குதளத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அடிப்படையில், multics என்பது அனைத்து விதமான கணினிகளிலும் இயங்கும் வகையிலான எளிமையான ஒரு இயங்கு தளம் ஆகும். இது அட்டைக் கணினிகளுக்கு முடிவு கட்டும் என நம்பப்பட்டது.

விண்வெளி விளையாட்டு

1969 ஆம் ஆண்டில், ஏற்கனவே இவர்கள் ரகசியமாக ஒரு இயங்குதளத்தை வடிவமைத்துக் கொண்டிருக்க, அதற்குள்ளும் இன்னும் ரகசியமாக கென் தாம்சன் பொழுதுபோக்காக ஒரு வீடியோ கேமை வடிவமைக்க நினைத்தார். PDP – 7 எனும் சிறு கணினியில்( அதுவும் ஒரு ரூம் அளவுக்கு இருக்கும்)விளையாடும் வகையிலான ஸ்பேஸ் ட்ராவல்(space travel)என்னும் வீடியோ கேமை தயாரிக்கும் முனைப்பிலிருந்தார் அவர்.

இதற்கு வாய்ப்பாக அமையும் வகையில், அவருடைய மனைவியும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு விடுமுறையை கழிக்க பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அந்த நேரம் வெட்டியாக இருப்பதற்கு பதிலாக, வெற்றிகரமாக வீடியோ கேமை தயாரிக்க களத்தில் குதித்த அவர்,மனைவி வீட்டுக்கு வருவதற்குள் தயாரித்து இயங்கு தளம் தான் unics . பின்னர் unix என அறியப்பட்டது.

சிறிய அளவிலான கணினிகளில் இயங்கும் வகையில் இந்த யூனி க்ஸ் இயங்குதளமானது வடிவமைக்கப்பட்டது.  இந்தத் திட்டமானது நிறுவனத்தின் தலைமைக்கு தெரிய வந்த பிறகு,அவர்களும் ஒப்புதல் கொடுக்க  அப்போது புதியதாக தயாரித்து வைக்கப்பட்டிருந்த PDP – 11 கணினிக்கு மாற்றப்பட்டது யூனிக்ஸ் இயங்குதளம்.

C மொழி

PDP – 7 கணினியில் யூனிக்ஸ் வடிவமைக்கப்பட்ட போது அதை எழுதுவதற்கு அசெம்பிளி நிரல் மொழி(assembly language)தான் பயன்படுத்தப்பட்டது. அது மிகவும் திறன் குறைந்த முழுக்க முழுக்க வன்பொருட்களோடு உரையாடக்கூடிய நிரல் மொழியாகும்.

இதற்கு மாற்றாக டென்னிஸ் ரிச்சி, c விரல் மொழியை வடிவமைத்தார். அதைத்தொடர்ந்து, PDP-11 கணினியில் C மொழியின் உதவி கொண்டு வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டது யூனிக்ஸ்.

C போன்ற எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய மற்றும் சக்தி வாய்ந்த கணினி மொழியில் எழுதப்பட்டதால் தான் வரும் காலங்களில் லினக்ஸ் போன்ற இயங்குதளங்கள் மற்றும் சேவையகங்கள் உலகை ஆளத் தொடங்கின.

மேலும், இவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நிரலாக்க மொழிகளும் உலகளாவிய அளவில் வடிவமைக்கப்பட்டன. இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும், இந்த  தசாப்தத்திற்குப் பின்னால் யூனிக்ஸ் போட்ட விதை இருக்கிறது.

விளக்கப் புத்தகம்

1973 ஆம் ஆண்டு யூனிக்ஸ் தொடர்பான விளக்கப் புத்தகமானது வடிவமைக்கப்பட்டது. பிற்கால தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த புத்தகத்தின் பங்கு அளப்பறியது என்றால் மாற்றுக் கருத்தியில்லை.

வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இந்த புத்தகத்தை படித்து பார்த்து வரும் ஆண்டுகளில் ஒரு மதிப்புரை கூட எழுதுகிறேன்.

சரி நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு ஒரு சுவாரசிய கட்டுரையில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

கட்டற்ற உலகம் தொடர்பான பல சுவாரசியங்களோடு சந்திப்போம். கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02),

இளம் அறிவியல் எழுத்தாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com

Leave a Reply