ஓட்டுநரின் கண்களுக்கு எளிதில் புலப்படாத பிரச்சினைகளை உணரிகள் மூலம் கண்டறிந்து முன்கூட்டியே எச்சரிக்கும் அதிநவீன பாதுகாப்புத் தொழில்நுட்பம் கார்களில் வரத் தொடங்கியிருக்கிறது. எச்சரிப்பது மட்டுமல்லாமல் சில நேரங்களில் தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடும். இதுதவிர ஓட்டுநர் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டிய சோர்வு தரும் வேலைகளைத் தானியங்கியாகச் செய்யும் அம்சங்களும் வந்துள்ளன. இவற்றைப் பொதுவாக அதிநவீன ஓட்டுநர் உதவி அமைப்புகள் (Advanced Driver Assistance Systems – ADAS) என்று சொல்கிறார்கள். இவற்றைப் பற்றி விரிவாகக் கீழே காண்போம்.
தடம் மாறல் எச்சரிக்கையும் (Lane Departure Warning) தடத்திலேயே செல்ல உதவியும் (Lane Keep Assist)
உங்கள் தடத்தை விட்டு சிறுகச் சிறுக நகர்ந்தாலோ அல்லது விலகினாலோ அடுத்த தடத்தில் வரும் ஊர்தியில் மோதும் பிரச்சினை ஏற்படும். இதைத் தவிர்க்க உதவும் வகையில் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் ஊர்தி ஒரு தடத்தின் எல்லைக் கோட்டைத் தொடும்போது உங்களுக்கு எச்சரிக்கை செய்யும். எச்சரிக்கை பொதுவாக அந்தப் பக்கத்தில் மினுக்கும் விளக்கு (flashing indicator) அல்லது பீப் (beep) ஒலி வடிவில் இருக்கும். சில வண்டிகளில், திருப்பு வளையம் அல்லது ஓட்டுநர் இருக்கை மெதுவாக அதிரும். ஆனால் உங்கள் திருப்பு சமிக்ஞை (turn signal) இயக்கத்தில் இருக்கும்போது இவை உங்களை எச்சரிக்காது.
சில ஊர்திகளில் தடத்திலேயே செல்ல உதவும் (Lane Keep Assist) அம்சம் வருகிறது. இது தடம் மாறல் எச்சரிக்கையின் மேம்பட்ட பதிப்பாகும். தடத்திலிருந்து நகர்வதைக் கண்டறிந்து, நீங்கள் உடன் அதைச் சரி செய்யாவிட்டால் இது தானியங்கியாக உங்களை மீண்டும் தடத்துக்குள் கொண்டு வந்து விடும்.
தானியங்கி முகப்பு விளக்கு தாழ்த்துதல் (High Beam Assist)
ஓட்டுநருக்கு சாலை தெளிவாகத் தெரியவேண்டும். அதே நேரத்தில் எதிரில் வரும் ஊர்திகளுக்குக் கண் கூசுவதைக் குறைக்கவேண்டும். இந்த அம்சம் இருந்தால் ஓட்டுநர் இந்த ஒரு வேலையைக் கைமுறையாகச் செய்ய வேண்டியதில்லை. இரவில் நம்மை நோக்கி வாகனங்கள் வருவதை அடையாளம் கண்டு, முகப்பு விளக்கைத் தாழ்த்தியும் உயர்த்தியும் தானாகவே மாற்றுகிறது.
முன்புற மோதல் எச்சரிக்கையும் (Forward Collision Warning – FCW) தானியங்கி அவசரநிலை நிறுத்தமும் (Automatic Emergency Braking – AEB)
முன்புறம் எதிர்ப்படும் தடைகளுக்கும் நம் வண்டிக்கும் இடையே உள்ள தூரத்தை ஒரு உணரி கண்காணித்துக் கொண்டேயிருக்கும். இது விரைவாகக் குறைந்தால் விபத்து ஏற்படும் அபாயத்தைக் கண்டறிந்து ஓட்டுநரை எச்சரிக்கிறது.
தானியங்கி அவசரநிலை நிறுத்தம் (AEB) என்பது இதன் மேம்பட்ட பதிப்பாகும். முன்புற மோதல் எச்சரிக்கை கொடுத்து ஓட்டுநர் செயல்படவில்லை என்றால், இது ஒரு படி மேலே சென்று பிரேக்கை அழுத்திவிடும்.
பார்வை விழாப் பகுதியில் ஊர்தி எச்சரிக்கையும் (Blind View Monitor) மோதல் தவிர்ப்பும் (Blind Spot Collision Avoidance)
அடுத்த தடத்தில் வரும் ஊர்திகளை ஓட்டுநர் கண்களின் ஓரத்தில் கொஞ்சம் முன்னால் பார்க்க முடியும். பக்கக் கண்ணாடியில் கொஞ்சம் பின்னால் பார்க்க முடியும். இரண்டுக்கும் இடையில் உள்ளது பார்வை விழாப்பகுதி. மற்றொரு ஊர்தி இப்பகுதியில் இருந்தால் பீப் ஒலியும் மினுக்கு விளக்கும் எச்சரிக்கை செய்யும்.
பார்வை விழாப்பகுதி மோதல் தவிர்ப்பு இதன் மேம்பட்ட பதிப்பு. இம்மாதிரி இடருள்ள இடங்களில் நீங்கள் தடம் மாற முயற்சி செய்தால் பிரேக்கை அழுத்தி மோதலைத் தவிர்க்கும்.
கதவு திறப்பு எச்சரிக்கை (Door Open Warning or Safe Exit Warning)
கதவு திறப்பு எச்சரிக்கை என்பது நாம் ஊர்தியை விட்டு வெளியேறக் கதவைத் திறந்தால் பின்னால் வரும் வாகனத்தைக் கண்டறிந்து எச்சரிக்கையை அளிக்கிறது.
பின்புறம் குறுக்கே வரும் ஊர்தி எச்சரிக்கை (Rear Cross Traffic Alert)
தரிப்பிடத்திலிருந்து (parking space) பின்னோக்கி ஊர்தியை நகர்த்தும் போது மற்றொரு ஊர்தி பின்னால் குறுக்கே வந்தால் எச்சரிக்கை அளிக்கும்.
ஓட்டுநர் கவனக்குறைவு எச்சரிக்கை (Driver Attention Warning – DAW)
இந்த அம்சம் இருக்கும் ஊர்தியில் ஓட்டுநரின் கண்கள் மற்றும் தலையின் அசைவுகள் தூக்க கலக்கம் மற்றும் சோர்வுக்கான அறிகுறிகளுக்காக கண்காணிக்கப்படுகின்றன. ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டும் நடைமுறைகளைக் கண்டறிந்தால் இந்த அமைப்பு ஓட்டுநரை எச்சரிக்கும். ஒரு எச்சரிக்கை ஒலி கேட்கும் மற்றும் “ஓய்வு எடுப்பது நல்லது” என்ற தகவலும் காட்சித்திரையில் தோன்றும்.
நாம் முன்னர் பார்த்த வானலையுணரிகளும் (Radio Detection And Ranging – Radar) சீரொளியுணரிகளும் (Light Detection And Ranging – LiDAR) மேற்கண்ட வேலைகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: ஊர்திக் கம்பிதைத்தல்
ஊர்திக் கம்பிகள். மின்னோட்ட செயல்பாட்டு வரம்பு. திறந்த மூல வயர்விஸ் (WireViz).