மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 11: அருவி செயல்முறையிலிருந்து மொய்திரளுக்கு (Scrum) நிலைமாற்றம் செய்வது எப்படி?

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 11

 

“இதெல்லாம் சரிதான். அருவி செயல்முறையைக் கைவிட நாங்கள் (ஒரு மாதிரி) தயார்! கான்ட் வரைபடம் இல்லாமல் திட்டத்தை எப்படியாவது ஓட்ட முயற்சிக்கிறோம்.  இப்போது நாங்கள் தகவெளிமை (Agile) / மொய்திரள் (Scrum) – க்கு எப்படி நிலைமாற்றம் செய்வது என்று ஒரு சாத்தியமான வழியைச் சொல்லுங்கள்.” என்று நீங்கள் கேட்டது காதில் விழுந்தது!

 

Agile Alliance உலகம் முழுவதும் 5000-ம் பேரிடம் கருத்துக் கணிப்பு செய்து வெளியிட்ட அறிக்கையில் மொய்திரளின் நன்மைகளை அளவிடுவதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆகவே உங்கள் வணிக பிரச்சினைகள் எவை என்று முதலில் தெளிவாக்குங்கள். இந்த பிரச்சினைகளை சமாளிப்பதற்கு எந்த வணிகக் குறிக்கோள்கள் முக்கியம் என்று பாருங்கள்.

  • கொடுத்த கெடுவில் திட்டத்தை முடிப்பது.

  • கொடுத்த செலவுத் திட்டத்தில் முடித்துக் கொடுப்பது.

  • வாடிக்கையாளர் கேட்கும் மாற்றங்களைக் கூடிய சீக்கிரம் செய்து தருவது.

  • மென்பொருளின் தரத்தை உயர்த்துவது – அதாவது வெளியீட்டில் வரும் வழுக்களின் எண்ணிக்கையையும் தீவிரத்தையும் குறைப்பது.

  • பணியாளர்களைத் தக்கவைப்பது.

  • அணியின் உற்பத்தித்திறனை உயர்த்துவது.

 

இவற்றில் உங்களுக்கு இன்றியமையாததும் மற்றும் அளவிடக்கூடியதுமாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து கூடியவரை துல்லியமாக அளவிடுங்கள். இது நிலைமாற்றத்தை செயல்படுத்தும் முன் எடுக்கும் அளவு. ஆகவே இதை தளநிலையாக வைத்து நிலைமாற்றத்தின் பின் ஒப்பீடு செய்வதற்கு உகந்ததாக இருக்கும்.

 

மிகவும் சிறியதாகவும் இல்லாமல் மிகவும் பெரியதாகவும் இல்லாமல் ஒரு திட்டத்தைத் தேர்வு செய்யுங்கள். மிகவும் சிறியதாக இருந்தால் நிரூபிக்க உகந்ததல்ல. மிகவும் பெரிய திட்டத்தில் சோதனை வேண்டாம். வாடிக்கையாளரின் ஒத்துழைப்பு மிக அவசியம். அவர்கள் குறைந்தபட்ச சாத்தியமான மென்பொருளை வெளியிடத் தயாராக இருக்க வேண்டும். மற்றும் ஒவ்வொரு குறுவோட்டத்தின் முடிவில் தயாரான மென்பொருளின் செயற்காட்சி பார்த்து பின்னூட்டம் தர முடிவு எடுக்கக் கூடிய மூத்த நிர்வாகிகள் முன் வர வேண்டும்.

 

சில முக்கிய உறுப்பினர்களை மொய்திரள் பயிற்சிக்கு அனுப்புங்கள். மொய்திரள் நடத்துநர் மற்றும் தயாரிப்பு உரிமையாளர் பயிற்சி அவசியம் தேவை. அடுத்து அவர்களை மற்றக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி கொடுக்கச் சொல்லுங்கள்.

 

மொய்திரளுக்கு எந்தக் கருவிகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது அவ்வளவு முக்கியமல்ல. மொய்திரள் ஆர்வலர்கள் வெறும் வெண்பலகையும் குறிப்பு ஒட்டுத்தாளும் வைத்து ஆரம்பிப்பதுதான் சிறந்தது என்று கூறுவர். அவ்வாறு செய்வது நல்லதுதான், அணியின் கவனமெல்லாம் மொய்திரளில் இருக்கும்.  ஆனால் இதில் முக்கியப் பிரச்சினை அறிக்கைகளும் புள்ளிவிபரங்களும் தயார் செய்வது கடினம். மேலும் அணி உறுப்பினர்கள் யாவரும் ஒரே இடத்தில் இல்லையென்றாலும் இணைய மென்பொருள் தேவை. ஆகவே ஏதாவதொரு இலவச கட்டற்ற மென்பொருள் வைத்து ஆரம்பிக்கலாம். பின்னர் அவசியம் தேவைப்பட்டால் இந்த அனுபவத்தை வைத்து வேறு மென்பொருள் தேர்ந்தெடுக்கலாம்.

மொய்திரள் - தினசரி கூடிநின்று பேசல்

முதலில் திட்டத்தின் இடரைக் குறைப்பதும், பணியாளர்கள் ஆர்வமுடன் வேலை செய்ய ஏதுவாக்குவதும் முக்கியம். இதற்கு அடிப்படைகளில் கவனம் செலுத்துங்கள்.

  • திட்டத்தின் இடரைக் குறைக்க இயன்றவரை அடிக்கடி வெளியீடு செய்து பயனர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் பின்னூட்டம் பெறுங்கள்.

  • தயாரிப்பு உரிமையாளர் மட்டும்தான் கிடக்கும் பணிகளை வரிசைப் படுத்தலாம்.

  • குறுவோட்டத்துக்கு திட்டமிடுவதற்கு முன் தயாரிப்பு உரிமையாளர் உருவாக்குநர் குழுவுடன் ஒத்துழைத்து கிடக்கும் பணிகளை செம்மைப் படுத்த வேண்டும். ஏற்பு நெறிமுறைகள் தெளிவாக இருக்க வேண்டும்.

  • குறுவோட்டத்தில் உருவாக்குநர்கள் முழுமையாக முடிக்கக்கூடிய அளவு மட்டுமே வேலையை எடுத்துக் கொள்ளுங்கள்.

  • குறுவோட்டம் ஆரம்பித்த பின் எந்த மாற்றமும் செய்யாமல் பார்த்துக் கொள்வது மொய்திரள் நடத்துநரின் பொறுப்பு.

  • எந்த வேலையை யார் செய்வது என்று உருவாக்குநர்கள் சுயமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். வெளியிலிருந்து எவரும், மொய்திரள் நடத்துநர் கூட, தலையிடக்கூடாது.

  • ஒருவர் எழுதிய நிரலை குழுவில் மற்றொரு சக நிரலாளர் மறுஆய்வு செய்வது வழுக்களைக் குறைத்து நிரலின் தரத்தை மேம்படுத்தும்.

  • எல்லா சோதனைகளையும் செய்து முடித்து குறுவோட்டத்தின் முடிவில் பணிகளை வெளியீட்டுக்குத் தயாராக ஆக்குங்கள்.

  • ஒவ்வொரு குறுவோட்டமும் முடிந்தபின் ஆய்வு செய்து தொடர்ச்சியான மேம்பாடுகள் செயல்படுத்துங்கள்.

 

அடுத்து, தரம் மற்றும் நம்பகத்தன்மையை உயர்த்துங்கள். எப்படி XP பொறியியல் முறைகளை மேம்படுத்தியது என்று முன்னால் பார்த்தோம்.

 

இதற்கும் மேல் உற்பத்தித்திறன் மேம்படுத்த வேண்டுமென்றால் நிறுவனத்தின் மூத்த தலைவர்கள் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்கிறார் ஜெஃப் சதர்லேண்ட். நிறுவனத்தின் அமைப்பு ரீதியான இடையூறுகளை நீக்கினால் திசைவேகம் மேலும் அதிகரிக்கும் என்கிறார் அவர். எடுத்துக்காட்டாக நான் முன்னால் வேலை பார்த்த ஒரு நிறுவனத்தில் செயலாக்கத் துறைக்கு ஒரு துணைத் தலைவர்  மென்பொருள் வளராக்கத் துறைக்கு வேறொரு துணைத் தலைவர். ஆகையினால் ஒருங்கிணைப்பு கடினமாக இருந்தது. அனைத்துக் கோரிக்கைகளும் முறைப்படியான வழிகள் மூலமாகப் போக வேண்டியிருந்தது. வேலை செய்து வாங்குவதே கடினமானால் முன்னுரிமை பெறுவது எப்படி? அதற்குப் பதிலாக ஒரு அமைப்பு நிர்வாகி மொய்திரள் அணியின் ஒரு பகுதியாக செயல்பட்டால் வேலையை மிகவும் எளிதாக செய்து முடிக்க இயலும்.

உங்கள் தகவெளிமை (Agile) / மொய்திரள் (Scrum) பயணம் வெற்றியடையட்டும்!

நன்றி,

– இரா. அசோகன் ( ashokramach@gmail.com )

மேலும் இந்த தொடரில் வந்த கட்டுரைகளை வாசிக்க : www.kaniyam.com/category/agile/

%d bloggers like this: