தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 4. அமெரிக்க கலாச்சார ஆதிக்கமும் தகவல் தொழில்நுட்பமும்

முதலில் ஹாலிவுட் திரைப்படங்களும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களும்

1920 களில் தொடங்கி அமெரிக்க திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொழில் மையமான ஹாலிவுட், உலகின் பெரும்பாலான ஊடகச் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் அமெரிக்க பாணி, பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் அவற்றைப் பின்பற்ற முயற்சி செய்யவும் முக்கிய ஊடகம் இது.

ஹாலிவுட் திரைப்படங்கள் ஆங்கில மொழியைப் பரப்புகின்றன மற்றும் பிரபலப்படுத்துகின்றன. ஆங்கில மொழி உலக மொழியாக மாறி, உலகின் தலைமையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு முக்கியக் காரணமாகவும் உள்ளது. இத்திரைப்படங்களைப் பார்த்தே தினசரி வாழ்க்கையில் பேசும் ஆங்கில சொற்றொடர்களைப் பேச மக்கள் எளிதாகப் பழகி விடுகின்றனர்.

அடுத்து கொகா கோலா, பெப்சி, மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங், பிட்சாஹட், டாமினோஸ், கேஎப்சி முதலியன

உலகின் பிரபலமான முதல் பத்து வணிகச் சின்னங்களில் ஏழு அமெரிக்காவைச் சேர்ந்தவை. இவற்றில் முதலிடத்தில் உள்ள கொகா கோலா அமெரிக்கமயமாக்கல் சின்னமாகவே கருதப்படுகிறது. துரித உணவு கூட அமெரிக்க உணவு சந்தையிலிடுதல் மேலாதிக்கத்திற்கான ஒரு சின்னமாகவும் கருதப்படுகிறது. மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங், பிட்சா ஹட், கேஎப்சி மற்றும் டாமினோஸ் பிட்சா போன்ற நிறுவனங்களின் துரித உணவு விடுதிகள் உலகெங்கிலும் ஏராளமான உள்ளன.

அமெரிக்க கலாச்சார ஆதிக்கம்

பின்னர் மைக்கேல் ஜாக்ஸன் இசை, ஜீன்ஸ், டைட்ஸ், கிழிந்த ஜீன்ஸ் இன்னபிற

எல்விஸ் பிரெஸ்லி மற்றும் மைக்கேல் ஜாக்சன் போன்ற பல அமெரிக்க  கலைஞர்களும் உலகளவில் ரசிக்கப்பட்டு 500 மில்லியன் தொகுப்புகளை விற்றுள்ளனர். த்ரில்லர் என்ற மைக்கேல் ஜாக்சனின் தொகுப்பு, 100 மில்லியன் விற்பனையில், எல்லாக் காலத்திலும் சிறந்த விற்பனையான தொகுப்பாக உள்ளது.

1989-91 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் விழுந்தபின் வலிவடைந்து, குறிப்பாக 2000 ஆம் ஆண்டுகளின் மத்தியில் வந்த அதிவேக இணையத் தொடர்பின் பின்னர், அமெரிக்கமயமாக்கல் மிகவும் பரவலாகிவிட்டது.

புதுக்குடியேற்றம்

1960 களில் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு குடியேற்றத்திலிருந்து விடுதலை கிடைத்தது.  இந்த சூழலில், நேரடியாக இராணுவக் கட்டுப்பாட்டிலோ (imperialism) அல்லது மறைமுகமான அரசியல் கட்டுப்பாட்டிலோ (hegemony) வைப்பதற்குப் பதிலாக உலகமயமாக்கல், கலாச்சார மற்றும் மொழி ஆதிக்கத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி இம்மாதிரி வளர்ந்து வரும் நாடுகளில் காரியம் சாதித்துக்கொள்வதை புதுக்குடியேற்றம் என்று கானா நாட்டின் தலைவர் குவாமே நிக்ரூமா வருணித்தார். மேற்கத்திய சிந்தனையாளர்களான ஜீன்-பால் சார்த்ரெ மற்றும் நோம் சோம்ஸ்கி போன்றவர்களின் படைப்புகளிலும் கூட இந்தப் புதுக்குடியேற்றப் போக்கு விவாதிக்கப்பட்டது.

இன்றைய உலகளாவிய கலாச்சாரம் பன்முக கலாச்சாரத்தைப் போல் தோற்றமளித்த போதிலும், கடைசியில் பகுப்பாய்வு செய்து பார்த்தால் அமெரிக்க ஒரே வகைக் கலாச்சாரமாகவுள்ளது என்று ஜப்பானிய அறிஞர் டோரு நிஷிகாகி (Toru Nishigaki) வாதிடுகிறார். இந்த அமெரிக்கக் கொள்ளை நோய் மற்ற அனைத்துக் கலாச்சாரங்களையும் தொற்று நோய் போல் பிடிக்கவும், பாதிக்கவும், இகழவும் மற்றும் தள்ளிவைக்கவும் அச்சுறுத்துகிறது என்று கூறுகிறார்.

அமெரிக்க கலாச்சார ஆதிக்கத்துக்கு ஊக்க மருந்து தகவல் தொழில்நுட்பம்

மைக்ரோசாப்ட், ஆப்பிள், இன்டெல், ஹெச்பி, டெல் மற்றும் ஐபிஎம் போன்ற உலகின் மிகப் பெரிய கணினி நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. மேலும் உலகளாவிய ரீதியில் வாங்கப்படும் மென்பொருட்களும் மேகக்கணிமை என்று சொல்லப்படும் இணைய சேவைகளும் அமெரிக்க நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை. ஆக உலகளாவிய அடிப்படையில், குறிப்பிட்டு மென்பொருள் துறையிலும் பொதுவாக தகவல் தொழில்நுட்பத் துறையிலும் அமெரிக்கா மிக வலுவான நிலையில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான பேஸ்புக், நெட்ஃப்லிக்ஸ் மற்றும் கூகிள் போன்ற சிலவற்றிற்கு அமெரிக்காவில் கலிபோர்னியாவிலுள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கு தொழில்நுட்ப தலைநகரமாகவும் உலகிலேயே மிக வெற்றிகரமான தொடக்கநிலை சுற்றுச்சூழல் அமைப்பாகவும் அமைந்துள்ளது. திறமையான பணியாளர்கள், மூலதனம் மற்றும் பெரிய கருத்துக்கள் ஒரே இடத்தில் கூடி வருவதால், தொடக்கநிலை நிறுவனங்கள் வளர இது சிறந்த இடமாகிறது. சமீபத்திய ஆண்டுகளில்  கூகிள், முகநூல், ட்விட்டர், அமேசான், ஆப்பிள் மற்றும் ஊபர் போன்ற அமெரிக்க இணைய நிறுவனங்கள் மூலம் அமெரிக்கமயமாக்கல் குறித்த கவலை ஐரோப்பாவில் அதிகரித்து வருகிறது.

இந்த உலகளாவிய பெரும் போக்கில் மாட்டாமல் பைடு தேடல் இயந்திரம், வெய்போ சமூக ஊடகம், வீசேட் அரட்டை, டிடி வாடகை வண்டி, அலிபாபா, டென்சென்ட் போன்ற பல இணைய தகவல் தொழில்நுட்ப சேவைகளையும், நிறுவனங்களையும் உருவாக்கி சீனா தனக்கென தனி வழி அமைத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியை ஆட்சி மொழியாக்கி விடலாமே என்று சிலர்

சீனா செல்லும் இந்தத் தனி வழியைப் பார்த்து வடக்கில் உள்ள கட்சிகளில் சிலர் இந்தியாவில் இந்தியை ஆட்சி மொழியாக்கி விட்டால் நாமும் சீனா மாதிரிச் செய்யலாமே என்று நினைக்கிறார்கள். இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணைப்படி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியாக 22 மொழிகள் உள்ளன. இந்தி அவற்றில் ஒன்றுதான்.  

புதிய பாதுகாப்பு மந்திரியுடன் அவர்களின் முதல் சந்திப்புக்கு வரும் போது, மூன்று இராணுவத் தலைவர்களையும் (தரைப்படை, கடற்படை, வான்படை) நீங்கள் இந்தியர்கள் என்பதை நினைவுபடுத்துவது அரிது. ஆனால் 1996 இல் பாதுகாப்பு மந்திரியான முலாயம் சிங் யாதவ் ‘நீங்கள் இந்தியர்கள், எனவே இந்தியில் பேசுங்கள்,” என்று கூறினார். உடன் அவர் ஒரு உத்தரவையும் வெளியிட்டார், அனைத்து அதிகாரபூர்வமான அறிவிப்புகளும் இந்தியில் இருக்க வேண்டும் என்று.  “இது நாட்டின் தேசிய மொழி என்பதால் இந்தியாவின் குடிமக்கள் இந்தி கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்” என்று மத்திய அமைச்சர் எம். வெங்கையா நாயுடு 2017 ஜூன் மாதம் கூறினார். பின்னர் இவர் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகவும் ஆகிவிட்டார்.

இந்த ஆண்டு 2018 ஜனவரியில் மக்களவையில் பேசுகையில், இந்தியை ஐ.நா.வில் அதிகாரபூர்வ மொழியாக ஆக்க எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தினாராம். இந்தி தேசிய மொழி அல்ல, இது ஒரு அதிகாரபூர்வ மொழிதான். இந்தி பேசாத மாநிலங்களின் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் நாட்டின் தலைவர்களாக வரக்கூடும். அவர்கள் மீது இந்தி மொழியைச் சுமத்த வேண்டிய அவசியமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சசி தாரூர் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியமாயிற்றாம். இவர்கள் யாவரும் சட்டப்படி இந்தியாவின் அரசியலமைப்பில் உண்மையான பற்றுதல் மற்றும் நம்பிக்கை வைப்பதாக (true faith and allegiance) உறுதிமொழி எடுத்துக்கொண்டவர்கள்.

ஐரோப்பிய ஒன்றியம், கனடாவின் சிறுபான்மை மொழிக் கொள்கைகளைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாமே

ஐரோப்பிய ஒன்றியத்தின் அன்றாட நடவடிக்கைகளில் மொழிகள் முக்கிய பாத்திரம் வகிப்பது மட்டுமல்ல இவை ஐரோப்பிய ஒன்றியத்தின் கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மைக்கும் அடிப்படையாகும். மொழி பன்முகத்தன்மையும் மற்ற கலாச்சாரங்களுக்கு மரியாதை என்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை மதிப்பாகும். ஒவ்வொரு குடிமகனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எந்தப் பிரிவுக்கோ அல்லது துறைக்கோ எந்தவொரு அதிகாரபூர்வமான மொழியிலும் எழுதவும் அதே மொழியில் பதிலைப் பெறவும் உரிமை உண்டு,

ஐரோப்பிய பாராளுமன்றம் ஒரு முழு பன்மொழிக் கொள்கையை ஏற்றுள்ளது, அதாவது அனைத்து ஐரோப்பிய ஒன்றிய மொழிகளும் சமமாக முக்கியத்துவம் வாய்ந்தவை. அனைத்து நாடாளுமன்ற ஆவணங்களும் அனைத்து அதிகாரபூர்வ மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுகின்றன. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அவர் விரும்பிய அதிகாரபூர்வ மொழியில் பேசும் உரிமை உண்டு.

கனடா நாட்டிலும் பிரெஞ்சு மொழி பேசுவோர் சிறுபான்மை என்ற போதிலும் அவர்களுக்கும் பிரெஞ்சு மொழிக்கும் சம உரிமை உண்டு. நம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இந்த அடிப்படைக் கண்ணியம் உள்ளதென்றும் மற்றும் இந்தியாவின் அரசியலமைப்பில் இவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியைக் காப்பாற்றுவார்கள் என்றும் நம்பிக்கை வைப்போம்.

—————————-

இத்தொடரில் அடுத்த கட்டுரை: பரவும் இந்த ஆங்கில மொழி ஆதிக்கம் தணிய வாய்ப்பு உள்ளதா?

பிரான்ஸ், தாய்லாந்து, ரஷ்யா, சீனா போன்ற ஆங்கில மொழி பேசாத மற்ற நாடுகள் எக்காலத்திலும் ஒரு ஆங்கில மொழி பேசும் நாடாக மாறப்போவதில்லை. 15 ஆம் நூற்றாண்டில் லத்தீன் மொழிக்கு ஒளிமயமான எதிர்காலம் என்றுதான் எண்ணினார்கள்! ஆங்கிலத்தை மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவர உதவிய அதே தொழில்நுட்பமே அதை மீண்டும் கீழே இழுக்கவும் முடியும். சீன மொழி உலகளாவிய மொழியாக ஆங்கிலத்தின் இடத்தைப் பிடிக்குமா?

%d bloggers like this: