எளிய தமிழில் VR/AR/MR 16. AR உருவாக்கும் திறந்தமூலக் கருவிகள்

பார்வைக்கோணத்தைப் பின்தொடர்தல் (viewpoint tracking)

மிகை மெய்ம்மையில் ஒரு முக்கியப் பிரச்சனை பார்வைக்கோணத்தைப் பின்தொடர்தல். நாம் நம்முடைய வரவேற்பறையிலுள்ள மேசையின் மேலுள்ள பொருட்களின் நடுவில் ஒரு கோவில் கோபுரத்தின் மெய்நிகர் வடிவத்தை வைத்துவிட்டோம். நாம் இப்போது அந்த மேசையைச் சுற்றிவந்தால் அந்த கோபுரத்தின் வெவ்வேறு பக்கங்கள் தெரியவேண்டுமல்லவா? இதைத்தான் பார்வைக்கோணத்தைப் பின்தொடர்தல் என்று சொல்கிறோம். இதற்கு நம் கருவிகள் வழிசெய்யவேண்டும்.

AR.js ஸ்டுடியோ

மேசையிலேயே கூடைப்பந்து வீசுதல் AR

மேசையிலேயே கூடைப்பந்து வீசுதல் AR

எந்த இணைய உலாவியிலும் ஓடக்கூடிய மிகை மெய்ம்மை (AR) உருவாக்கும் எளிய வழி இது. இதற்கு ஒரு முப்பரிமாண மாதிரியும் சிறிது ஜாவாஸ்கிரிப்ட் நிரல் ஆகியவை மட்டுமே தேவை. WebGL காட்சி உருவாக்க ஜாவாஸ்கிரிப்ட் நிரலகம் three.js மற்றும் WebXR காட்சி உருவாக்க ஜாவாஸ்கிரிப்ட் சட்டகம் A-Frame பயன்படுத்தலாம் என்று முன்னர் பார்த்தோம். இது அவற்றின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பி (marker) அடிப்படையிலான மற்றும் புவிநிலை (GPS) அடிப்படையிலான AR உருவாக்க முடியும். குறிப்பி என்பது எளிதாக்கப்பட்ட QR குறியீடுதான். குறிப்பிகள் பட்டைக் குறியீடாகவும் (barcode) இருக்கலாம்.

AR கருவித்தொகுதி (ARtoolkit)

அறையின் நான்கு மூலைகள் போன்ற குறிப்பிகளை வைத்து படக்கருவியின் இடம் (position) மற்றும் திசையமைவு (orientation) ஆகியவற்றை முதலில் கணிக்கும். அடுத்து அதே இடத்தில் ஒரு மெய்நிகர் படக்கருவியை வைத்து முப்பரிமாண மெய்நிகர் வடிவங்களை குறிப்பிகள் காட்டிய இடத்தில் அதன்மேல் உருவாக்கும்.

AR கோர் (ARCore)

ஏஆர் கோர் என்பது கூகிள் வெளியிட்ட AR மென்பொருள் உருவாக்கும் கருவித் தொகுப்பு (software development kit) ஆகும். இதனுடைய தற்போதைய பெயர் கூகிளின் AR விளையாட்டுக்கான சேவைகள் (Google Play Services for AR). திறன்பேசியிலுள்ள உணரிகள் மூலம் ஆறு விடுநிலைகளைப் (Six degrees of freedom) பின்தொடரும். படக் கருவி மூலம் தரை அல்லது மேசை போன்ற தட்டையான கிடைமட்ட மேற்பரப்புகளின் அளவு மற்றும் இருப்பிடத்தைக் கண்டறிந்து சுற்றுச்சூழலைப் புரிந்து கொள்ளும். திறன்பேசியின் சுற்றுச்சூழலின் தற்போதைய ஒளி நிலைகளை மதிப்பிட ஒளி மதிப்பீடு வழி செய்கிறது.

AR அசைவூட்ட வளங்கள் பதிவிறக்கம்

கிராப்கேட் (GrabCAD), டர்போஸ்குவிட் (Turbosquid), ஸ்கேட்ச்ஃபேப் (Sketchfab) போன்றவை கணினி உதவி வடிவமைப்பு (Computer Aided Design – CAD) முப்பரிமாண வடிவங்களைப் பகிர்ந்துகொள்ள உதவும் வணிக இணையதளங்கள். இவற்றில் பல AR அசைவூட்ட வளங்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

நன்றி

  1. Augmented Reality – Basketball Launcher with AR.js

இத்தொடரில் அடுத்த கட்டுரை: AR சாதன வகைகள்

காட்சித்திரைகள். முப்பரிமாண ஒளியுருவக் காட்சிகள் (Holographic displays). ஒளியியல் வழி ஊடுருவும் காட்சி (Optical see through). காணொளி வழி ஊடுருவும் காட்சி (Video see through). திறன்பேசி (Handheld or mobile) AR.

ashokramach@gmail.com

%d bloggers like this: