தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 13. நிரல் எழுதத் தெரியாதவர்கள் 21 ஆம் நூற்றாண்டின் தற்குறிகளா?

ஓலைச்சுவடி காலத்திலும் காகிதம் வந்தவுடனும் தொழில் நெறிஞர்களே எழுத்தாளர்களாக பெரிய மனிதர்களின் ஆதரவில் பணியாற்றினர். இதன் விளைவாக எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு செல்வாக்கு அதிகரித்தது. பிள்ளைகளைப் படிக்க வைப்பது வாழ்க்கை முறையாயிற்று. பின்னர் எழுதப்படிக்க இயலாதவர்கள் தற்குறி எனப்பட்டனர்.

நிரலாக்கம்தான் புதிய எழுத்தறிவா?

ஏற்கனவே நிரலாக்கம் என்பது தொழில் ரீதியாக நிரல் எழுதுபவர்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல் எந்த உயர் கல்விக்கும் அத்தியாவசியம் என்றாகி விட்டது. நிரலாளர் அல்லாத ஆற்றல் மிக்க பயனர்கள் ஒரு வேலையைத் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டியிருந்தால் விரிதாள் அல்லது உரை செயலியில் துணுக்கு நிரல் எழுதி தானியங்கியாக ஓட வைப்பது பல ஆண்டுகளாகவே நடந்துகொண்டுதானிருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல.

“நிரல் எழுத்தறிவு: நிரலாக்கம் எப்படி உரை எழுதுவதை மாற்றுகிறது” என்ற புத்தகத்தை அனெட் வீ எழுதியுள்ளார்.  தகவல்தொடர்புகள் மேலும்மேலும் நிரல்கள் மூலம் நடக்க ஆரம்பித்துவிட்டன என்று கூறுகிறார். கணினி அறிவு இல்லாதவர்கள் தங்கள் வாழ்க்கையை வழிநடத்த மற்றவர்களை நம்பியிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பட்டம் பெற்றால்தான் ஒரு கடிதத்தையோ அல்லது அறிக்கையையோ ஆங்கிலத்தில் எழுதலாம் என்று இருக்க முடியுமா என்ன என்று கேட்கிறார்.

உயிரியலாளராக வேண்டுமா? நிரலாக்கம் நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும்!

கடந்த வாரம் பாஸ்டன் சென்ற பொழுது உயிரியலில் முது முனைவர் படிக்கும் ஒரு சிலரைச் சந்தித்தேன். அவர்களில் எத்தனை பேர் நிரலாக்கம் கற்றுக் கொள்கிறீர்கள் என்று கேட்டேன். ஒட்டுமொத்தமாக அனைவரும் கையை உயர்த்தினார்கள். உயிரியலில் பெரிய தரவு அவசியமாகிவிட்டது. முன்னாலிருந்த சிறிய அளவிலான தரவுகளில் விரிதாள் பயன்படுத்திக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் தரவுகளின் அளவு அதிகமாகிவிட்டது. 15,000 தரவுப் புள்ளிகளை கைமுறையாகப் பார்க்க முடியாது. தங்கள் பரிசோதனைக்காக எல்லாவற்றையும் ஆய்வு செய்வதற்கு தனிப்பட்ட நிரல்களை எழுத வேண்டியிருக்கிறது.”

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (UCSF), அனடோல் கிரீட்ஸர் புதிதாக துறைத் தலைவராகப் பதவியேற்றார். நரம்பியல் பட்டதாரி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை சீரமைக்க முயல்கிறார். அவருடைய முதல் நடவடிக்கைகளில் ஒன்று நரம்பியல் முக்கிய பாடத்திட்டத்தில் நிரலாக்கத்தை இணைக்க சிறந்த வழியைக் கண்டுபிடிக்க ஒரு குழுவை அமைப்பதுதான்.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கல்வி பேராசிரியரான யாசிம் கபாய், மற்றும் சார்லஸ்டன் கல்லூரியில் கல்வி பேராசிரியரான க்வின் பர்க் சொல்கிறார்கள், “இளைஞர்களுக்கு நிரலாக்கத்தை அறிமுகம் செய்யும் பாடங்கள் அவர்களை நிரலாளர்களாக ஆக்குவதற்கு அல்ல. ஆனால் அவர்களை எண்ணிம ஊடகத்தின் மிகவும் பயனுள்ள படைப்பாளிகள் மற்றும் நுகர்வோராக ஆக்குவதற்குத்தான்.”

நிரலாக்கச் சிந்தனை: முக்கிய கருத்துகள்

நிரலாக்கச் சிந்தனை: முக்கிய கருத்துகள்

“நிரலாக்கச் சிந்தனை” என்றால் என்ன?

நிரல் வரிகளை ஆயிரக்கணக்கில் எழுதித் தள்ளுவதைவிட முக்கியமாக, நாம் முதலில் நிரலால் எம்மாதிரி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவுக்கு நிரல் எழுதுங்கள் என்ற திட்டத்தில் இளம் நிரலாளர்கள் கொண்டுவரும் மிகப் பெரிய பங்களிப்பு அவர்கள் எழுதும் மென்பொருள் அல்ல. அவர்களுடைய வித்தியாசமான கண்ணோட்டம்தான். இதைத்தான் “நிரலாக்கச் சிந்தனை (computational thinking)” என்று சொல்கிறோம். நிரல் எழுதி நம்மைச் சுற்றியுள்ள பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்று உங்களால் யோசிக்க முடியாவிட்டால், உலகிலுள்ள அனைத்து ஜாவா தொடரியலையும் தெரிந்து கொண்டாலும் பயனில்லை.

நிரலாக்கச் சிந்தனையில் நான்கு முக்கிய கருத்துகள் உள்ளன. பிரச்சினையை சிறு துண்டுகளாக உடைப்பதை பிரித்து ஆய்வு (decomposition) என்கிறோம். பல்வேறு சங்கதிகளுக்கு இடையில் ஒற்றுமைகளைக் கண்டறிதலை உருவகை அறிதல் (pattern recognition or matching) என்கிறோம். குறிப்பிட்ட வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு பல சிக்கல்களுக்கு ஒரே தீர்வை வேலை செய்ய வைப்பதை அருவமாகக் கருதல் (abstraction) என்கிறோம். ஒரு பணியை முடிக்க நாம் பின்பற்றும் படிகளின் பட்டியலை வினைச்சரம் (algorithm) என்கிறோம்.

முதலில் பிரச்சினை என்ன என்று தீர்க்கமாகப் புரிந்து கொள்வது, அடுத்து அதற்குத் தீர்வு எப்படிச் செய்வது என்று முடிவு செய்வது பின்னர் நிரல் எழுதுவது – இதுதான் “நிரலாக்கச் சிந்தனை”. இவற்றில் மூன்றாவதாக உள்ள நிரல் எழுதுவதற்குக்கூட மற்றவர்கள் உதவி செய்ய இயலும். முதல் இரண்டும்தான்  நிரலாக்கச் சிந்தனைக்கு இன்றியமையாதவை.

இப்போது கணினி ஆதிக்கம் எல்லாத் தொழில் வாழ்க்கையிலும் ஊடுருவி விட்டதால் இது நிரலாளர்களுக்கு மட்டுமல்ல. நிரலாக்க அணுகுமுறை உலகளாவிய பிரச்சினைகளை புதிர்களாகப் பார்ப்பதில் வேரூன்றியுள்ளது. இவற்றை சிறிய பாகங்களாகப் பிரித்து தர்க்கம் மற்றும் ஊகிக்கும் முறையால் கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்வு செய்யலாம். மகிழ்ச்சியான உண்மை என்னவென்றால், கணினிகள் எப்படி வேலை செய்கின்றன, எப்படி அவை புரிந்து கொள்ளும் மொழியில் ஆணையிடுவது என்று நாம் தெரிந்து கொண்டால், கணினி செய்யக்கூடிய ஒரு திட்டத்தை நாம் உருவகப் படுத்தலாம். அது ஒரு நிரலாளருக்குப் புரியும் விதத்தில் விவரிக்கலாம், விவாதிக்கலாம்.

ஏனென்றால் நிரலாளர்களே உங்களுக்குச் சொல்வார்கள், ஒரு திட்டத்தை உருவாக்குவது பெரும்பாலும் கடினமான பகுதி இல்லை, எதை உருவாக்குவது மற்றும் ஏன் என்பதுதான். கணினி அறிவியலர்கள் பல ஆண்டுகளாக எச்சரிக்கை விடுத்துக்கொண்டுள்ளனர் – நிரலைப் புரிந்துகொள்வதும், எழுதுவதும் ஒரு நாள் இன்றியமையாததாக ஆகிவிடும் என்று.

கருத்துகளை மற்றவர்களுக்குப் புரியும் வழிகளில் வெளிப்படுத்துவதுதான் எழுத்தறிவு

எழுத்தறிவின் செயல்பாடு என்ன? சிந்தனைகள் மற்றும் கருத்துகளை மற்றவர்களுக்குப் புரியும் வழிகளில் வெளிப்படுத்துதல்தானே? படிக்கவும் எழுதவும் தெரியாதவர்கள் சக்தி கட்டமைப்புகளில் பங்கேற்க இயலாது. அவர்களின் குடிமை சார்ந்த குரல்கள் கேட்கப்படுவதில்லை. நிரலாக்கம் தெரியாதவர்களுக்கும், கணினி வழிகளில் சிந்திக்க முடியாதவர்களுக்கும் எதிர் காலத்தில் இந்தக் கதிதானா?

அமெரிக்க அரசாங்கத்தின் முன்னாள் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியும் மற்றும் முன்னாள் கூகிள் நிர்வாகியுமான மேகன் ஸ்மித், ஒவ்வொரு குழந்தையும் நிரலாக்கம் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்கிறார். இந்த உலகத்தைப் புரிந்துகொள்வதற்கும், மாற்றுவதற்கும் தேவை என்பதால் எழுத்துகளையும், எண்களையும் எழுதப் படிக்கக் கற்பிக்கிறோம் என்றால், கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் நிரலாக்கம் ஆகியவை அந்த அறிவின் பகுதியாக இருக்க வேண்டும். மாணவர்கள் தாங்கள் தினமும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், ஆரம்ப கட்டத்திலிருந்தே அந்த கட்டுமானத் தொகுதிகளை அறிமுகம் செய்யத் தொடங்க வேண்டும்.

இளைஞர்களை நுகர்வோருக்கு பதிலாக படைப்பாளர்களாக மாற்ற நிரலாக்கத் திறன் உதவுகிறது. இந்த படைப்புத் திறன் மற்றும் தொழில்நுட்ப எழுத்தறிவு கொண்ட மாணவர்கள் எதிர்காலத்தில் ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்வர். அவர்கள் அடுத்த தலைமுறை தொழில் முனைவோர் ஆவார்கள்.

எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவையை வழங்கினாலும் ஒவ்வொரு நிறுவனமும் மென்பொருள் நிறுவனமாக மாறி வருகின்றன

ஒவ்வொரு நிறுவனமும் மென்பொருள் நிறுவனமாக மாறி வருகின்றன. நீங்கள் டயர்கள் அல்லது மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும் சரி அல்லது உடல்நலன் பற்றிய சேவைகளை வழங்கினாலும் சரி, மென்பொருளை முதன்மையாக வைக்கும் போட்டியாளர்கள் உங்கள் வாடிக்கையாளர்களைத் தங்கள் பக்கம் இழுக்கத் தயாராக உள்ளனர். ஆகவே எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவை நிறுவனமும் மென்பொருள் நிறுவனமாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

ஆக ஒவ்வொருவரும் கணினி ஞானம் உள்ளவர்களாக இருக்கவேண்டும் – நுகர்வோராக அல்ல, உருவாக்குநராக.

———–

இத்தொடரில் அடுத்த கட்டுரை: உங்கள் பிள்ளைகளின் கணினி ஐபேடா, ராஸ்ப்பெரி-பையா?

ராஸ்ப்பெரி-பை கணினி ஏன் உருவாக்கப்பட்டது? ராஸ்பெர்ரி பையின் நிரலாக்கத்தன்மை ஒரு ஊடுருவ இயலாத பளபளப்பான உறை அல்லது சிக்கலான குறியீடுக்குப் பின் மறைக்கப்படவில்லை. நிரலாக்கத்தைக் கட்டாய பாடமாக ஆக்கும் முதல் நாடு இங்கிலாந்து ஆகும்.

%d bloggers like this: