தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 9. உங்கள் பிள்ளைகளை இயந்திர மனிதர்களாக வளர்க்கிறீர்களா?

தாய்மொழியை இழந்தால் தாயை இழந்ததுபோல் பரிதவிப்போம் என்பது மிகையாகாது

பல புலம்பெயர்ந்த தமிழ்ப் பிள்ளைகளைப் போலவே வளரும் காலத்தில் நான் தமிழ் பேசவில்லை. என் கல்லூரிப் பருவத்திலும் வயதுவந்த பின்னும் என் பெற்றோரைத் திட்டிக் கொண்டிருந்தேன், ஏன் எனக்குக் குழந்தைப் பருவத்திலேயே தமிழ் சொல்லிக் கொடுக்கவில்லை என்று. வயது வந்தபின் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. அதே நேரத்தில் என் வாழ்க்கைக்கு நான்தானே பொறுப்பு. நான் தமிழ் பேச விரும்பினேன்.

தாய்மொழியைப் பேச வேண்டுமென்ற என் உணர்ச்சிகளில் ஒரு இக்கட்டான கட்டத்தை நான் அடைந்து விட்டேன். நான் எப்படியாவது தமிழ் பேச வேண்டும். வெட்கம், சங்கடம், அவமானம் போன்ற உணர்ச்சிகளுக்கு என் வாழ்க்கையில் இந்தக் கட்டத்தில் இடமில்லை என்று நான் முடிவு செய்தேன். எங்கு வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் தமிழ் பேசுகிறேன். அடிக்கடி தவறு செய்கிறேன். அதைக் கேட்டுச் சிரிக்கிறார்கள். அவவாறு நடக்கும்போது, அவர்கள் சிரித்த அக்கணத்தில் நான் என்ன பேச முயற்சி செய்தேன் என்பதைக் கவனத்தில் கொள்வேன். பின்னர் என்ன தவறு செய்தேன் என்று என் அம்மாவிடம் கேட்பேன். அலலது, அவர்கள் என் நண்பர்கள் என்றால், நேரடியாக அவர்களிடமே கேட்பேன்.

எனக்கு ஏற்கெனவே மூச்சு விட நேரம் கிடையாது.  மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டுத் தமிழ் கற்றுக்கொள்ள நேரம் உருவாக்க வேண்டியிருந்தது. ஒரு சமயத்தில் வாரம் மூன்று தமிழ் வகுப்புகள் போய்க்கொண்டிருந்தேன். என் அம்மாவுடன் ஒரு மணிநேரம் ஸ்கைப். ஒரு மணிநேரம் டொராண்டோவில் ஆசிரியருடன் ஸ்கைப். ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் தமிழ்ப் பள்ளியில் ஒரு மணிநேரம், 8 அல்லது 9 வயது சக மாணவர்களுடன்.

வயது வந்தபின் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வது கடினமாக இருப்பதால் நான் நிறைய அழுகிறேன். உங்களுடைய பெற்றோர் என்னுடைய பெற்றோர் போல் என்றால், நீங்கள் உங்களுக்கே மிக உயர்ந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறுதான் வளர்க்கப்பட்டிருப்பீர்கள். பெரும்பாலும் அநியாயமான அதிக உயர் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்புகளை அடைய இயலவில்லை என்றால் சில நேரங்களில் உலகமே முடிவது போலிருக்கும். தாய்நாட்டுடனும், மக்களுடனும் இருக்கும் தொடர்பைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்ற என் ஆழ்ந்த வேரூன்றிய ஆசையுடன், தமிழ் மட்டுமே பேசும் எனது குடும்பத்தாருடனும் சரளமாக உரையாட விரும்பும் உணர்ச்சிபூர்வமான என் அவசரத்தையும் சேருங்கள். முதலில் வருத்தம், பின்னர் ஆதரவின்மை, அடுத்து முட்டாள்தனம் என்று அலைமேல் அலையாக உணர்ச்சிகளுக்கு ஆளானேன்.

தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதில் ரொம்பவும் திணரும்போது கொஞ்சம் விட்டுவிடுகிறேன். ஆனால் நான் மறுபடியும் திரும்பி வருகிறேன். இது ஒரு வாழ்நாள் பயணமாக இருக்கலாம் என்ற உண்மையுடன் நான் என் மனதுக்குள் சமாதானம் ஆகிவிட்டேன். நான் வகுப்புகளுக்குச் செல்கிறேன், அதற்கான உழைப்பைப் போடுகிறேன், அழுகிறேன், திரும்பவும் தொடங்குகிறேன்.”

தாய்மொழியை இழந்தால் நாம்  காட்டுவாழ்க்கையில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கிறோம்

எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார், “பண்பாட்டால்தான் நம் ஆழ்மனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நம் மனதின் வயது நம் வயதே. நம் ஆழ்மனத்தின் வயதுக்கு நாம் நம் தொல்பழங்குடிகள் வரை சென்று மூலம் கண்டுபிடிக்க வேண்டும். பண்பாட்டையும் மொழியையும் இழப்பதென்பது அந்த ஆழத்தை ஒட்டுமொத்தமாக இழப்பது… மொழி என்பதை ஒரு தொடர்புறுத்தும் சாதனம் மட்டுமே என்று சொல்லும் இயந்திரவாதக் கண்ணோட்டத்தை விரிவாக மறுத்து இப்போது மிக விரிவாகவே மொழியியல் பேசிக்கொண்டிருக்கிறது.

மொழி என்பது பண்பாட்டின் புற வடிவம். மொழியை இழக்கும்போது நீங்கள் இழப்பது ஒரு வகை ஊடகத்தை அல்ல. ஒரு மாபெரும் தொடர்ச்சியை… அதை இழந்தால் நாம்  காட்டுவாழ்க்கையில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கிறோம்… எப்படி வாழ்ந்தாலும் பல்லாயிரம் வருடத்து மரபின் நீட்சியாக உள்ள ஒரு பெரும் செல்வத்தை– நம் ஆழ்மனத்தை– அதில் உள்ள ஆழ்படிமங்களை– நாம் ஏன் இழக்க வேண்டும்?.. நம்புங்கள், நாம் எவருக்கும் குறைந்தவர்கள் அல்ல. மாபெரும் நாகரீகங்களை உருவாக்கிய மாபெரும் பரம்பரையினர் நாம். அந்தத் தொடர்ச்சி  நமக்குச் செல்வமே ஒழிய சுமை அல்ல.”

தாய்மொழியை இழந்தால் நாம் கலாச்சாரமற்ற இயந்திர மனிதர்கள் ஆகிறோம்

தாய்மொழியை  இழந்தால் நாம்  காட்டுவாழ்க்கையில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கிறோம் என்று ஜெயமோகன் கூறுகிறார். ஆனால் மொழியை இழந்த இவர்களிடம் இல்லாத நவீன சாதனங்களே கிடையாது. எனக்குத் தோன்றுகிறது இவர்களை இயந்திர மனிதர்கள் என்று சொல்வதுதான் அதைவிட நல்ல உபமானம் என்று.

இயந்திரப் பிள்ளை

இயந்திரப் பிள்ளை

மொழியும் பண்பாடும் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. இயல், இசை, நாடகம் போன்ற நம் கலாச்சாரத்தின் இழைகள் நம்மை ஒரு சமூகமாகப் பிணைக்கின்றன. இந்தக் கலாச்சாரம்தான் தனிமனிதர்களின் கூட்டத்தை ஒரு சமூகமாக்குகிறது. கலாச்சாரம் மொழியில் உள்ளார்ந்ததாக இருக்கிறது. மொழி பொதுவான அனுபவங்களையும் பின்னணியையும் தொடர்புபடுத்துகிறது. மேலும் இம்மாதிரி வரலாறுகள் நம் கலாச்சாரம் சார்ந்த சொற்களை உருவாக்குகின்றன. ஒரு குழுவில் பகிர்ந்த அனுபவங்களைப் பற்றிப் பேசும்போது எல்லோரும் சிரிக்கிறார்கள் ஆனால் உங்களுக்குப் புரியவில்லை.  இது எப்போதாவது உங்களுக்கு நடந்திருக்கிறதா? இந்த உள் நகைச்சுவை உங்களை விலக்கி வைப்பதுபோல் உணர்ந்தீர்களா? கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளாமல் சொற்களை மட்டும் புரிந்துகொள்வது கடினம். பகிர்ந்த அனுபவம் சொற்களின்பொருளைப் பாதிக்கிறது என்பதை இது காட்டுகிறது.

பிள்ளைகள் தமிழ் பேச புலம்பெயர்ந்த பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

பகல்நேரக் குழந்தைகள் கவனிப்பு மற்றும் மழலையர் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் நாள் முழுவதும் மற்றக் குழந்தைகளுடன் ஆங்கிலத்தில் பேசுவதால் அதை எளிதில் கற்றுக் கொள்வார்கள். அதற்கு முன்னரே நீங்கள் வசிக்கும் பகுதியில் மற்றக் குழந்தைகளுடன் விளையாடும்போதே கற்றுக் கொள்ளவும் வாய்ப்புண்டு. வீட்டிற்குத் திரும்பிய பின்பும் அதே பழக்கம் தொடர்வது இயற்கைதான். ஆனால் தமிழை சொல்லித் தரும் பொறுப்பு உங்களுடையது. தமிழைப் பயன்படுத்துவதற்கு குழந்தைகள் தயக்கம் காட்டுவது பொதுவாக இந்த இரு முக்கியப் பகுதிகளில் உள்ள குறைபாடுகளால்தான் – தேவை மற்றும் சுற்றுச்சூழல். ஆகவே பிறந்தது முதல் தமிழைக் கற்க வேண்டிய தேவையை ஏற்படுத்துவதுடன் எப்போதும் அவர்கள் காதுகளில் தமிழ் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும் சுற்றுச்சூழலை ஏற்பாடு செய்வது உங்கள் பொறுப்பு. ஒரு குழந்தை பேசத் தொடங்குகையில் தமிழ் பேசத் தயங்கினால் அதற்கு இந்த இரண்டு காரணங்கள்தான்.

கருப்பையில் உள்ள குழந்தை 30 வாரத்தில் தொடங்கி தங்கள் தாய்மார்களிடமிருந்து மொழியைக் கற்கத் தொடங்குவதாக சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பிறந்த குழந்தைகள் சில மணி நேரங்களிலேயே தங்கள் தாயின் மொழிக்கும் மற்ற மொழிக்கும் இடையில் வேறுபாடு அறிய இயலும். ஏனென்றால் அவர்கள் கருப்பையிலேயே தங்கள் அன்னையின் பேச்சு வடிவங்களையும் தனித்தன்மை வாய்ந்த ஒலிகளையும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் பிள்ளைகள் வளர்ந்தபின் அவர்கள் மேற்கண்ட மாதிரி சித்திரவதைக்கு உள்ளாகாமல் இருப்பது உங்கள் கையிலுள்ளது. மேலும் சாதிக்க விழையுங்கள் ஆனால் நீங்கள் யார் என்பதை மறந்துவிடவேண்டாம். ஆங்கிலத்தின் மூலம் உலகளாவிய தொடர்புகளுக்கும் நல்ல பணி வாய்ப்புகளுக்கும் விழையுங்கள், ஆனால் நம்முடைய கலாச்சாரத்துக்கு ஆணிவேரான தமிழை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க மறந்து விடாதீர்கள்.

———————-

இத்தொடரில் அடுத்த கட்டுரை: கணினிக்குத் தமிழ் கற்றுக் கொடுப்போம் வாருங்கள்

இயல்மொழி ஆய்வுதான் தமிழின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம். நம்முடைய இயல்மொழியைப் புரிந்து கொள்ளக் கணினிகளைப் பழக்கி விட முடியும். செயற்கை நுண்ணறிவும் இயந்திரக் கற்றலும் ஆழ்ந்த கற்றலும். பெரிய சந்தை நிறுவனங்கள் இதைச் செய்யாவிட்டால் சிறிய மொழிகளுக்கு இவ்வாறான தொழில்நுட்பங்களை யார் வழங்குவார்? தீர்வு: சமூக முயற்சி, தன்னார்வலர்கள், திறந்த மூலம், திறந்த தரவுகள், திறந்த ஆய்வு.

%d bloggers like this: