கார் மற்றும் இருசக்கர ஊர்தி உற்பத்தியாளர்களை மூல தளவாட உற்பத்தியாளர் (Original Equipment Manufacturer – OEM) என்று சொல்கிறோம். இவர்களுக்கு ECU போன்ற தொகுப்புகளைத் தயாரித்து அதற்கேற்ற மென்பொருளுடன், சோதனை செய்து வழங்கும் போஷ் (Bosch), கான்டினென்டல் (Continental) போன்ற நிறுவனங்களை முதலடுக்கு வழங்குநர்கள் (Tier 1 suppliers) என்று சொல்கிறோம். பல ஊர்தி உற்பத்தியாளர்களும் வழங்குநர்களும் சேர்ந்து உருவாக்கியதுதான் ஆட்டோசர் (AUTOSAR – AUTomotive Open System ARchitecture) என்ற ஊர்தி மென்பொருள் தரநிலை. கட்டமைப்பு, இடைமுகங்கள், தகவல் தொடர்பு நெறிமுறைகள் ஆகியவற்றை ஆட்டோசர் தரப்படுத்துகிறது.
வழங்குநரை மாற்றுவது முன்னர் மிகக் கடினம்
முன்னர், OEM கள் பயன்படுத்தும் ECU வெவ்வேறு மென்பொருள் தளங்களில் இருந்தது. OEM களுக்கான ECU மென்பொருளை வடிவமைக்க முதலடுக்கு வழங்குநர்கள் மற்றும் அவர்களின் கீழொப்பந்தக்காரர்களால் (subcontractors) பயன்படுத்தப்படும் நிலையான மென்பொருள் கட்டமைப்பு எதுவும் இல்லை. எனவே, ஒரு OEM புதிய முதலடுக்கு வழங்குநருக்கு மாற விரும்பும் போது மாற்றம் மிகவும் கடினமாக இருந்தது. முன்னரே இருக்கும் மென்பொருள் கட்டமைப்பு, வன்பொருள் தளங்கள் மற்றும் ECU மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படும் தரநிலைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதில் புதிய வழங்குநர்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டனர். எனவே, ஒரு புதிய வழங்குநர் ஏற்கெனவே உற்பத்தியில் இருக்கும் வாகனத்தின் தொகுப்புகளை இடையில் மாற்றுவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாமலே இருந்தது.
செயலிகள் வன்பொருளுக்குத் தக்கவாறு முன்னர் எழுதப்பட்டன
முன்னதாக, அடிப்படை வன்பொருளைச் சார்ந்து மென்பொருள் கூறுகள் எழுதப்பட்டன. எனவே ஒவ்வொரு மென்பொருளும் அதன் ECU வில் மட்டுமே வேலை செய்யும். வன்பொருளை மாற்ற வேண்டி வந்தால் பாரம்பரிய செயலி மென்பொருளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தேவைப்பட்டன. ஆனால் மென்பொருள் கூறுகளை தனித்து நிற்கும்படி உருவாக்க ஆட்டோசர் வழிசெய்கிறது. ஆகவே ஊர்தி மென்பொருளை ஆட்டோசருக்கு இணக்கமாக உருவாக்கினால் வன்பொருளுடன் பொருந்துமாறு ஒவ்வொரு முறையும் நீங்கள் செயலிகளை மாற்ற வேண்டியதில்லை.
ECU வில் ஒரு பாகத்துக்கும் மற்றொரு பாகத்துக்கும் இடையிலும், ஒரு ECU விலிருந்து மற்றொரு ECU விற்கும் கார் உற்பத்தியாளர்களுக்கும் ECU வழங்குநர்களுக்கும் இடையேயான பங்குகளைப் பிரிப்பதை ஆட்டோசர் தெளிவுபடுத்துகிறது. மேலும் தகவல் தொடர்பு நெறிமுறைகளை அறியாமலேயே, செயலிகளுக்குள்ளும் செயலிகளுக்கு இடையேயும் ஒத்துழைக்க முடியும்.
மென்பொருள் கூறுகளை (modules) எடுத்து மற்ற இடத்தில் முன்னர் பயன்படுத்த இயலாது
முன்பு ஒவ்வொரு நிறுவனமும் அதன் சொந்த மென்பொருள் கட்டமைப்பைக் கொண்டிருந்ததால், வெவ்வேறு வழங்குநர்களின் மென்பொருள் தொகுதிகளை ஒருங்கிணைத்து ஒரு ECU இல் வைக்க முடியாது. எனவே ஒரு ECU க்கான முழு மென்பொருளும் ஒரே வழங்குநரால் முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ஆனால் ஆட்டோசர் ஒரு நிலையான கட்டமைப்பு மற்றும் ஒவ்வொரு மென்பொருள் தொகுதியையும் முடிந்தவரை தனித்து நிற்கும்படி உருவாக்க வழி செய்கிறது. இதன் காரணமாக, ஆட்டோசர் தரநிலையைப் பின்பற்றும் வழங்குநர்களால் உருவாக்கப்பட்ட பல மென்பொருள் கூறுகளை எடுத்து, அவற்றை ஒன்றாக ஒரு ECU இல் ஒருங்கிணைக்க முடியும். இதன் காரணமாக, கார் உற்பத்தியாளர்கள் பல வழங்குநர்களிடமிருந்து சிறந்த மென்பொருள் கூறுகளைத் தேர்ந்தெடுக்கவும், அவற்றை ஒரு ECU இல் ஒருங்கிணைக்கவும் முடியும். ஆகவே இது வாகன அமைப்புகளின் தரத்தைப் பெரிதும் மேம்படுத்துகிறது.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: மின்னணு அமைப்புகளின் பாதுகாப்பான செயல்பாடு
ISO 26262 சாலை ஊர்திகள் – செயல்பாட்டுப் பாதுகாப்பு. இடர் வகைகளைத் தீர்மானிக்கும் வழிமுறை. மென்பொருள் நம்பகத்தன்மை.