சென்ற பதிவில் நாம் உருவாக்கிய புதிய மேகக்கணினியின் நிலையென்ன என்பதை அமேசான் தளத்திற்குள் சென்று, EC2 பிரிவின் முகப்புப்பக்கத்தில் காணலாம்.
நமது கணினி நல்லநிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது என காண்கிறோம். இப்பதிவில், அக்கணினிக்குள் நுழைந்து, ஒரு சிறிய வலைப்பக்கத்தை இயக்கிப்பார்க்கலாம்.
மேகக்கணினிக்குள் நுழைதல்:
லினக்ஸ், யுனிக்ஸ் குடும்பக்கணினிகளில் பிறகணினிகளுக்குள் பாதுகாப்பான முறையில் நுழைந்து, வேலைசெய்வதற்கு SSH (Secure SHell) என்ற நெறிமுறையைப் பயன்படுத்தலாம். இருகணினிகளுக்கிடையே பாதுகாப்பாக, தரவுகளைப் பரிமாறிக்கொள்வதற்கான வழிகளில் திறப்பிணைகளும் ஒன்று.
மேகக்கணினியை உருவாக்கும்போது, கடைசிப்படிநிலையில் ஒரு திறப்பிணையை (Key pair) உருவாக்கியது நினைவிருக்கிறதா? அதன் பொதுத்திறப்பினை (public key), நாம் உருவாக்கிய மேகக்கணினிக்குள் அமேசான் வைத்துவிடுகிறது. நாம் பதிவிறக்கிய, தனிப்பட்டதிறப்பினைக் ( private key – MyEC2Key.pem) கொண்டு நம்மால் மேகக்கணினியை அணுகமுடியும். இத்தனிப்பட்டதிறப்பினை தற்செயலாகக்கூட நீங்களோ, வேறெவருமோ மாற்றிவிடக்கூடாது என்பதற்காக, அதன் அணுக்க அனுமதிகளை மாற்றுவது அவசியம்.
$ chmod 400 MyEC2Key.pem
நீங்கள் மட்டும் படிக்கக்கூடியவகையில் தனிப்பட்டதிறப்பின் அனுமதிகளை இக்கட்டளை மாற்றிவிடுகிறது.
$ ssh -i “MyEC2Key.pem” ubuntu@ec2-13-127-85-226.ap-south-1.compute.amazonaws.com
இக்கட்டளையைப் பயன்படுத்தி, நம்மால் மேகக்கணினிக்குள் நுழைந்துவிடமுடியும். முதன்முறையாக ஒருகணினிக்குள் நுழையும்போது அக்கணினி நாம் இதுவரையறிந்த கணினிகளின் பட்டியலில் (known hosts list) இல்லையென்ற எச்சரிக்கை காட்டப்படும். அதற்கு yes என பதிலளிப்பதன்மூலம், நமக்குத்தெரிந்த கணினிகளின் பட்டியலில், மேகக்கணினியை இணைத்துவிட்டு, அதற்குள் சென்றுவிடலாம்.
தொலைதூரத்திலிருக்கும் எந்தவொரு கணினியை அணுகுவதற்கும் மேற்சொன்ன வழிமுறைகள் பயன்படும். ஆனாலும், நாம் புதிதாக உருவாக்கிய மேகக்கணினியைத் தேர்ந்தெடுத்து, Connect ஐ அழுத்தும்போது, அக்கணினியை அணுகுவதற்கான வழிமுறைகள் காட்டப்படுகின்றன. முதன்முறை பயன்படுத்தும்போது, இவ்வழிமுறைகளிலிருந்து படியெடுத்து பயன்படுத்தினாலே போதுமானது.
தேவையான மென்பொருள்களை நிறுவுதல்:
இப்போது நாமிருப்பது ஒரு புத்தம்புதிய கணினி. எந்தவொரு மென்பொருளும் இன்னும் இதில் நிறுவப்படவில்லை. லினக்ஸ் கணினிகளுக்கான கட்டற்ற மென்பொருள்களை, apt-get அல்லது yum என்ற இருவேறு களஞ்சியங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். டெபியன் வகையைச்சேர்ந்த கணினிகளில் apt-getஐயும், ரெட்ஹாட், செண்ட் ஓ.எஸ் போன்ற கணினிகளில் yumஐயும் பயன்படுத்தவேண்டும். நமது கணினியின் உபுண்டு இயக்கமுறைமைக்கு, apt-get களஞ்சியத்தைப் பயன்படுத்தவேண்டும்.
ஒருவலைப்பக்கத்தை இயக்குவதற்கான முதல்படியாக, நமது கணினியில் ஒரு சேவையகத்தை நிறுவவேண்டும். கட்டற்ற சேவையகமான அப்பாச்சி (Apache Server) சேவையகத்தை இப்போது நிறுவலாம்.
$ sudo apt-get install httpd
sudo என்பதென்ன?
இங்கே, கட்டளைக்கு முன்பாக sudo என குறிப்பிட்டிருக்கிறோம். கணினிகளின் இயக்கமுறைமையின்மீது வரம்பற்ற அதிகாரம்கொண்ட கணக்குகளை, இயல்பாகப் பயன்படுத்துவது விரும்பத்தக்கதல்ல. பொதுவாக, நாம் பயன்படுத்தும் கட்டளைகள் நமது கணக்கின் அதிகார வரம்பிற்குள் உட்பட்டதாக இருக்கவேண்டும். ஆனாலும், சிலசமயங்களில், சற்று அதிகமான அதிகாரத்தைக்கோருகின்ற கட்டளைகளை இயக்கவேண்டிவரலாம். அச்சமயங்களில் மட்டும் sudo ஐப் பயன்படுத்தவேண்டும். Superuser do என்பதன் சுருக்கமே sudo. அதாவது, அக்கட்டளைக்குமட்டும் உயர் அதிகாரம்கொண்ட பயனரைப்போல இயங்கவேண்டும் என கணினிக்கு உணர்த்துகிறோம்.
பொதுவாக, ஒரு கட்டளையை sudo கொண்டு இயக்கும்போது, உயர் அதிகாரம்கொண்ட பயனரின் கடவுச்சொல்லை உள்ளிடவேண்டும். ஆனால் அமேசான் மேகக்கணினிகளில் உயர் அதிகாரம் கொண்ட பயனருக்கென கடவுச்சொல் இல்லை. நாம் உள்நுழையும்போதே, அதிக பாதுகாப்புகொண்ட திறப்பிணையைப் பயன்படுத்துவதால், கடவுச்சொல் அவசியப்படுவதில்லை.
முதல் வலைப்பக்கம்:
இப்போது நமக்கான வலைப்பக்கத்தின் HTML கோப்பினை உருவாக்கவேண்டும். ஒரு உலாவியில், நமது மேகக்கணினியின் IP முகவரியை இடும்போது, அப்பாச்சி சேவையகமானது, /var/www/html என்ற பாதையிலுள்ள index.html என்ற கோப்பினை வழங்குகிறது. எனவே, ஓர் எளிய HTML கோப்பினை முதலில் உருவாக்குவோம்.
$ cd /var/www/html
லினக்ஸ் குடும்பக்கணினிகளில் கோப்புகளில் மாற்றங்கள் செய்வதற்கு vi, nano போன்ற எடிட்டர்களைப் பயன்படுத்தலாம். ஏற்கனவேயுள்ள கோப்பின் பாதையைக்கொண்டு திறக்கும்போது, அக்கோப்புகளில் மாற்றம் செய்யமுடிகிறது. ஒருவேளை நாம் கொடுத்த பாதையில் கோப்பு இல்லாமல் போனால், ஒரு புதிய கோப்பு உருவாக்கப்படுகிறது. /var/www/html என்ற பாதையில் இதுவரையில் எந்தவொரு கோப்பும் இல்லையென்பதால். அப்பாதையிலிருந்து
$ vi index.html
(or)
$ nano index.html
என்று கட்டளையிடும்போது index.html என்ற புதிய கோப்பினை உருவாக்கி அதில் மாற்றங்கள் செய்வதற்காக திறந்துகொடுக்கிறது.
<html><h1>Hello <i>World!</i></h1></html>
இக்கோப்பினைச் சேமித்தபிறகு, அப்பாச்சி சேவையகத்தைத் துவக்கவேண்டும். இதற்காக, பின்வரும் கட்டளையைப் பயன்படுத்தலாம்
sudo service httpd start
அமேசானின் வலைப்பக்கத்தில் நமது மேகக்கணினிக்கான பொதுமுகவரியைக் (IPv4 Public IP க்கு நேராகவுள்ள மதிப்பு) கண்டறிந்து, அதனை உலாவியில் இடவேண்டும். நாம் உருவாக்கிய index.html கோப்பு திரையில் காட்டப்படுகிறது.
சிறப்பு! நமது முதல் வலைப்பக்கத்தை உலாவியில் பார்த்துவிட்டோம்!!
அடுத்த பதிவில் மேகக்கணினிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிந்துகொள்ளலாம்.