எளிய தமிழில் Car Electronics 12. உடற்பகுதிக் கட்டுப்பாட்டகம்

உடற்பகுதிக் கட்டுப்பாட்டகம் (Body Control Module – BCM) பொதுவாக ஊர்தியில் பயணிப்பவர்களின் வசதியையும் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது. துணை வேலைகளை எளிதாக்குவதன் மூலம் ஊர்தியைப் பாதுகாப்பாக ஓட்டும் முக்கிய வேலையில் ஓட்டுநர் கவனம் செலுத்த வழி செய்கிறது.

இது கதவுகள், கண்ணாடிகள், இருக்கைகள், விளக்குகள் ஆகிய பல சாதனங்களைக் கட்டுப்படுத்துகிறது. இவற்றில் மையப் பூட்டுதல் அமைப்பு, தொலைவில் சாவியற்ற திறத்தல் (Remote Keyless Entry – RKE), முன் கண்ணாடித் துடைப்பான், முன் கண்ணாடிக் கழுவும் அமைப்பு, மடக்கக்கூடிய திறன் பக்கக் கண்ணாடிகள், அவற்றை மேலும் கீழும் இடமும் வலமும் திருப்பிச் சரிசெய்யும் வசதி, வெளிப்புற விளக்குகள், உட்புற விளக்குகள் ஆகிய பல அம்சங்கள் அடங்கும். இவற்றில் சில சிறப்பு அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

Body-control-module

உடற்பகுதிக் கட்டுப்பாட்டகம்

சிறுவர் பாதுகாப்புப் பூட்டு 

வண்டி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் சிறுவர்கள் தவறிக் கதவைத் திறந்தால் விபத்துக்கள் நேரிடலாம். இதைத் தவிர்க்க சிறுவர் பாதுகாப்புப் பூட்டு (Child Lock) அம்சம் வருகிறது. இது ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

அமைவுகளை ஞாபகம் வைத்துக்கொள்ளும் ஓட்டுநர் இருக்கை

உங்கள் வண்டியை நீங்கள் சில சமயங்களிலும் உங்கள் துணைவர் (spouse) சில சமயங்களிலும் எடுப்பீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு முறையும் ஓட்டுனர் திறன் இருக்கையை (power seat) வண்டியை எடுப்பவர் உயரம் மற்றும் வசதிகளுக்கு ஏற்பப் பல அமைவுகள் செய்ய வேண்டும். இது நேரம் எடுக்கும் மேலும் பழைய வசதியான அமைவுக்கு வருவதும் கடினம். இந்த அமைவுகளைக் கணினி ஞாபகம் வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? சில ஊர்திகள் இந்த அம்சத்துடன் வருகின்றன.

மழை உணரும் முன் கண்ணாடித் துடைப்பான்

வண்டி சென்று கொண்டிருக்கும் போது மழை தூரத் தொடங்கினால் ஓட்டுநர் முன் கண்ணாடித் துடைப்பானை ஓட விட வேண்டும். திறந்திருக்கும் சன்னல், கூரைக்கதவு ஆகியவற்றையும் மூட வேண்டும். முகப்பு விளக்குகளையும் போட வேண்டும். மழை வலுத்தால் துடைப்பானின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். இந்த வேலைகள் யாவற்றையும் தானியங்கியாகச் செய்ய முடிந்தால் வசதியாக இருக்கும் அல்லவா? அந்த சாதனம்தான் மழை உணரும் முன் கண்ணாடித் துடைப்பான்.

எரிபொருள் காலியாகும் தூரம் (Distance to Empty – DTE)

நெடுஞ்சாலையில் அதுவும் இரவு நேரத்தில் பயணிக்கும் போது கலத்தில் இருக்கும் எரிபொருளைக் கொண்டு எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று தெரிவது மிக முக்கியம். கலத்தில் இருக்கும் எரிபொருள் அளவையும் சமீபத்தில் வண்டி ஒரு லிட்டர் எரிபொருளுக்கு எவ்வளவு கிலோமீட்டர் ஓடி இருக்கிறது என்பதையும் வைத்து இது கணக்கிடப்படுகிறது.

தட்பவெப்பநிலைக் கட்டுப்பாடு (Climate control)

தட்பவெப்பநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு என்பது காற்றுக் குளிர்விப்பு, சூடாக்கல் தவிர காற்றோட்ட இருக்கைகள், காற்றை சுத்திகரிப்பது, ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் பல புதிய அம்சங்களுடனும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடனும் வருகிறது. இவற்றைத் தானியங்கியாகச் செய்ய உணரிகளும் உண்டு. இதன் மூலம் வெப்பநிலை, காற்றோட்டம், விசிறியின் வேகம் ஆகியவற்றைத் தானாகவே சரிசெய்கிறது.

நன்றி

  1. Body Control Module (BCM) in Automotive Industry

இத்தொடரில் அடுத்த கட்டுரை: தகவல் பொழுதுபோக்கு அமைப்பு

திறன்பேசிகள் இணைத்தல். ஆன்ட்ராய்டு ஆட்டோ (Android Auto) மற்றும் ஆப்பிள் கார் ப்ளே (Apple CarPlay) செயலிகள். பல்லூடக ஆதரவு (Multimedia Support). பாதுகாப்பு மற்றும் ஆதரவு அம்சங்கள்.

ashokramach@gmail.com

%d bloggers like this: